ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது அபிராமி அந்தாதி பாடலும் விளக்கமும்.
உங்களுடைய நேரப்பளுவில் ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி,அபிராமி அந்தாதி புத்தகம் தங்களிடம் இருந்தால் அதை எடுத்து அந்த செய்யுளோடு இதை படித்து அதை புரிந்து கொண்டு அபிராமி பட்டர் அனுபவித்த அந்த அபிராமியை நாமும் அவருடைய கண்கள் மூலமாக பார்த்து, பரிபூரண கடாட்சத்தை பெற விழைவோம்.. முதலில் விநாயகரை வேண்டி காப்பு செய்யுளின் பொருள் சொல்லி இந்த பணியை ஆரம்பிப்போம்.
அபிராமி அந்தாதி,…. அந்தாதி…. ஒரு செய்யுளின் முடிவு அடுத்த செய்யுளின் ஆரம்பமாக அமைவது. இது இலக்கணம். இதில் ஒரு சின்ன தத்துவம் அடங்கி இருக்கிறது. அதாவது இந்தப் பிறவியில் நாம் சேர்க்கின்ற வினைகள், அவற்றின் தொகுப்பு, அடுத்த பிறவியில் நம் வாழ்வின் ஆரம்பத்திற்கு வித்தாக அமைகிறது. இதுதான் ஆத்ம இலக்கணமோ?
அந்தாதியை ஆரம்பிக்கும் முன் பட்டர் விநாயகரை துதிக்க விழைகிறார், கற்பக விநாயகரை துதிக்கிறார்.
கலைமாமணி மரபின் மைந்தர் திரு மா முத்தையா அவர்கள் தன் விளக்க உரையில் கூறுவார், அமுதத்தை மறைத்தது திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள கள்ளவாரண பிள்ளையார், என்பதால் அவரை விட்டுவிட்டு, அருள் அமுதமாகிய அபிராமி அந்தாதியை பெருகச் செய்ய வேண்டும்,எல்லோருக்கும் கிடைத்து அவர்கள் பருகி மகிழ வேண்டும் என்ற குறிக்கோளில் அபிராமி பட்டர் தில்லையம்பதியில் எழுந்தருளி உள்ள கற்பக விநாயகரை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பார்.
பெரியவர்கள் உள்ள வீட்டில் உள்ள அவரது பிள்ளையிடம் நமக்கு ஒரு காரியம் வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த பெரியவர்களை அணுகுவது மரபு. அதைத்தான் அபிராமி பட்டர் இங்கு செய்திருக்கிறார்.
தார் அமர் கொன்றையும்
செண்பக மாலையும் சாத்தும்
தில்லை ஊரர் தம் பாகத்து
உமை மைந்தனே என்கிறார்.
தில்லையில் எழுந்தருளியுள்ள கொன்றையந்தார் அணிந்த சிவபெருமானுக்கும்,செண்பக மாலை அணிந்த அம்பிகைக்கும் புதல்வனே என்று கூப்பிட்டு தன் விண்ணப்பத்தை முன் வைக்கிறார் என்ன விண்ணப்பம்?
கார் அமர் மேனி கணபதியே,
உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும்
என் சிந்தை உள்ளே
நிற்க கட்டுரையே என்று விண்ணப்பிக்கிறார்.
விநாயகரை கார்மேகத்திற்கு ஒப்பிடுவதற்கு உண்டான காரணம்? மேகம் தன்னிடம் எதையுமே வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கொடுத்துவிடும், அதுபோல கார்மேக மேனி உடைய விநாயகர் தன்னை வணங்குவோர்க்கு அள்ளிக் கொடுக்கும் கருணாநிதி. விநாயகரை மட்டும் பிள்ளையாக பெற்றவள் இல்லையே அன்னை பராசக்தி, இந்த ஈரேழு உலகெல்லாம் அவளுடைய குழந்தைகளே. அப்படிப்பட்ட அந்த அன்னையைப் பற்றி எழுதப்படுகின்ற இந்த அந்தாதி எந்த ஒரு பொழுதிலும், எந்த ஒரு நேரத்திலும் சிந்தனையை விட்டு நீங்காமல் இருக்க அருள வேண்டும் என்கிறார் அபிராமி பட்டர். சிந்தையில் நிற்க என்று வேண்டுவதன் அர்த்தம், சதா சர்வ காலமும் ஆழ்மனத்தில் நீ கொடுக்கும் இந்த அமுதம் நிறைந்து இருக்க வேண்டும், நினைவு அகலாத மனம் வேண்டும் என்று கொள்ள வேண்டும்.
செம்மையான சிந்தையில் தான் பாடல்கள் பிறக்கும். அந்தப் பாடல்கள் உண்டாவதற்கு உன்னுடைய கருணை வேண்டும் என்று பிள்ளையாரை வேண்டுகிறார். இதனுடைய சிறப்பு என்னவென்றால் அபிராமியை படிக்க விழைகின்ற, பாராயணம் செய்ய தொடங்கும் பக்தர்கள் எல்லோரும் முதலில் இந்த பிள்ளையார் துதியை படிக்கும் போது 100 பாடல்களும் நம் சிந்தையை விட்டு அகலாது என்றும் இருக்க வேண்டும், அதன் மூலம் உன்னுடைய கடாக்ஷம் நமக்கு வேண்டும் என்று அவரைப் பிரார்த்திக்க வழி செய்து இருக்கிறார் .கற்பக விநாயகரின் அருளால் நம்முடைய பயணம் இனிதே நிறைவேற, அபிராமி அந்தாதி என்றும் எல்லோர் சிந்தனையிலும் நீங்காது விளங்க, அவன் அருளை வேண்டுவோம்.