ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: தப்பு செய்யாதவர்கள் யார் ?
இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது
சிறையிருந்த சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம். அந்த இராமாயணத்தில் அனுமனின் பங்கு மிகவும் பெருமைக்குரியது.
ராமர் எப்படி சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிச்சு, தெய்வத் தன்மை அடைந்து தெய்வமாகி, விபீஷணன் போன்ற தன்னுடைய பக்தர்களுக்கு, அபயம் கொடுத்தாரோ, அதேமாதிரி, சீதாதேவியும், கருணையோட எல்லையில இருந்து, எல்லார் கிட்டயும் பரிவு காண்பிச்சு இருக்கா. அதனால தான் நாம இரண்டு பேரையும் சேர்த்து நமஸ்கரிக்க வேண்டும். சீதையினுடைய பெருமை, காவியம் முழுக்க வரும், அதுக்கு சிகரம் வெச்சா போல, கடைசீல, ஒரு காட்சியில, சீதையினுடைய அளவற்ற கருணை வெளிப் படறது.
ராமன் இராவணனை அழித்து போரில் வென்ற செய்தியினை அனுமன் அசோக வனத்தில் இருந்த சீதா தேவியிடம் கூறினார். அதை கேட்டு சந்தோஷமடைந்த அவர் அனுமனை பார்த்து இதற்கு நீ தான் பெரிய உதவி செய்திருக் கிறாய். நான் இருக்கும் இடம் கண்டு இராமனிடம் சொன்னவன் நீ தானே என்றாள். உனக்கு என்ன செய்தாலும் தகும் என்றாள்.
அப்போது அனுமன் சீதா தேவியை நோக்கி நான் ஒரு வரம் கேட்டால் தருவீர்களா என்றான். அதற்கு, முதலில் கேள் அது தர்மத்திர்க்கு உட்பட்டதாக இருந்தால் தருகிறேன் என்றாள்.முன்பின் யோசிக்காமல் தசரதன் கைகேயிக்கு வரம் கொடுத்து கஷ்டப்பட்ட மாதிரி ஆகிவிடும் . எனவே முதலில் என்ன என்று கூறு என்றாள்.
உடனே அனுமன் எனக்கென்று எதுவும் வேண்டாம். உங்களை இந்த பத்து மாதமும் துன்புறுத்திய 600 இராட்சசிகளை துவம்சம் செய்ய வேண்டும்.
பரமசிவன் கால்களை போன்று வலிமையான என் கால்களால் அவர்களை மிதிக்க வேண்டும்.
இந்திரனின் வஜ்ராயுதம் எவ்வளவு வலிமையோ அந்த அளவு வலிமை கொண்ட என் பற்களால் கடிக்க வேண்டும்.
நரசிம்மரின் நகம் எவ்வளவு கூர்மயோ அவ்வளவு கூர்மையான என் நகத்தால் அவர்கள் உடலை கிழிக்க வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு அனுமதி கொடுங்கள் அது தான் நான் கேட்கும் வரம் என்றார்.
சீதை, அனுமனை நோக்கி அவர்களை நீ எதுவும் செய்யவேண்டாம், மன்னித்து விட்டு விடு . தாயே ! தப்பு செய்பவர்களை தண்டிக்காமல் மன்னித்து விட்டால் எப்படி திருந்துவார்கள், இவர்களையா…மன்னிப்பது . என்ன சொல்கிறீர்கள் என்றான். சீதை அனுமனை நோக்கி இந்த உலகத்தில் யார் தான் தப்பு செய்யவில்லை. தப்பு செய்யா தவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன் இராமர் தப்பு செய்யவில்லையா? நான் தப்பு செய்யவில்லையா ? என்றவுடன் அனுமன் திகைத்துப் போனான்.
இராமர் என்ன தப்பு செய்தார் ? நான் தான் மானுக்கு ஆசைப்பட்டேன், இராமர் என்ன சொல்லியிருக்க வேண்டும். இது அரக்கர்களின் சதி திட்டம் வேண்டாம் என்று. அதை விட்டு இவர் மானை பிடிக்க சென்றது இராமர் செய்த தப்பு.
நீங்கள் செய்த தப்பு என்ன ?
இராமன் என்ற பெருமாளே என் பக்கத்தில் இருக்கும் போது மானுக்காக நான் ஆசைப்பட்டது நான் செய்த தப்பு.
அடுத்து இராமன் சென்றதும் அவரது குரல் போல மாரிசன் கத்த, அதை கேட்ட நான் லட்சுமணனை போக சொல்ல, அவர் உங்களை தனியா விட்டு விட்டு போகமாட்டேன் என்று சொல்ல அவரை கட்டாயபடுத்தி போக வைத்தது நான் செய்த தப்பு என்று கூறினாள்.
எனவே இராமனும் தப்பு செய்திருக்கிறார், நானும் தப்பு செய்திருக்கிறேன்..அது மட்டுமா நீயும் தப்பு செய்திருக்கிறாய் என்றாள். அனுமன் திகைத்து நானா ? என்றான். ஆமாம் நாங்கள் இருவரும் தப்பு செய்ததை இத்தனை நேரம் நீ கேட்டுக்கொண்டு இருந்தாய் அல்லவா அது நீ செய்த தப்பு என்றாள் சீதை.
அடுத்தவர்கள் செய்த தப்புக்களையோ, செயல்களையோப் நாம் கேட்டு வம்பு பேசினால் அந்த தப்பின் பாவத்தில் பாதி நமக்கும் வரும்.
இது பற்றி ஒரு கதை உண்டு.
ஒரு ராஜா ஏழை அந்தணருக்கு ஒரு அண்டாவில் அரிசி தானமாக கொடுத்தான். அதை பெற்றுக்கொண்ட அவர் தலையில் சுமந்த படி செல்கிறார். அப்போது மேலே ஒரு பருந்து பாம்பினை குத்தி எடுத்துக் கொண்டு செல்ல, பாம்பின் வாயிலிருந்து விஷம் சொட்ட அது அரிசியில் விழ்ந்து விட்டது. அது தெரியாமல் தனது மனைவியிடம் கொடுக்க, அவரும் அதை சமை க்கிறார். பிறகு அவர், அவரது மனைவி, பிள்ளை மூவரும் சாப்பிட சிறிது நேரத்தில் மூவரும் இறந்து போகின்றனர்.
அப்போது சித்ர குப்தன் இந்த இறப்பிற்கு காரணமாக யார் மீது அந்த பாவ கணக்கை எழுதுவது என குழம்பினான். அரசன் மீது எழுத முடியாது , ஏன் என்றால் அவர் தானம் செய்தவர், அந்தணர் மீது எழுத முடியாது அவர் தப்பு செய்யவில்லை, மேலே பறந்த பருந்து, மற்றும் பாம்பின் மீதும் எழுத முடியாது, அந்தணர் மனைவி சமைத்து தான் கொடுத்தார் , அவர் மேலும் தப்பு இல்லை .
அப்போது அரண்மனைக்கு அருகில் இருவர் பேசிக்கொண்டு இருந்தனர், அதில் அவர்கள் ராஜா,.அந்தணர்க்கு அரிசியில் விஷம் வைத்து கொடுத்து விட்டார். அதனால் தான் மூவரும் இறந்து போய் விட்டனர். ராஜா மிகவும் பொல்லாதவன் என புறம் பேசினார்கள். அதை கண்ட சித்திர குப்தன் அந்த பாவத்தை அவர்கள் தலையில் எழுதிவிட்டார்.
நாம் பாவம் செய்ய வில்லை என்றாலும்.அடுத்தவர்களை பற்றி தேவையில்லாமல் வம்பு பேசினால் அதன் பாவம் நமக்கும் பாதி வந்து சேரும் இது விதி.
இராமன், சீதை செய்த தப்புக்களை இத்தனை நேரம் கேட்டதால் அனுமனும் தப்பு செய்தது போலதான் என கூறினாள். இராமனும் , நானும் நீயும் என தப்பு செய்திருக்கிறோம், அரக்கிகள் மட்டும் விதி விலக்கா ? எனவே மன்னித்து விட்டு விடு . மேலும் இத்தனை நாள் அவர்கள் இராவணன் கட்டுப்பாட்டில் இருந்தார்கள், இப்போது தஞ்சம் அண்டைதார்க்கு அபயக்கரம் நீட்டும் இராமனின் கீழ் . எனவே மன்னிப்பது தானே தர்மம் என கூற, அதை கேட்ட அனுமன் சீதா தேவியின் கருணை உள்ளத்தை நினைத்து பூரிப்படைந்தான். சீதா தேவியை நோக்கி கை கூப்பி நமஸ்கரித்தார்.
பாபானாம் வா ஷுபானாம் வா வதார்ஹாணாம் ப்ளங்கம |
கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்சித் நாபராத்யதி ||
பாபம் பண்ணவாளோ, நல்லவாளோ, வதம் பண்ணக் கூடிய அளவுக்குத் தப்பு பண்ணவாளோ, யாரா இருந்தாலும் மன்னிக்க வேண்டும். ஒரு தப்புக் கூடப் பண்ணாதவன்னு யாருமே கிடையாது, அபராதமே செய்யாதவன்னு, ஒருத்தனுமே கிடையாது. அதனால பெரியவா கருணையோட இருக்கணும், தப்பை மன்னிக்கணும், என்று கூறுகிறது.
ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………. ஸ்ரீ
It’s give great knowledge to us. Thank you very much.