இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
தேவி மகாத்மியம்
தேவி மகாத்மியம் இதனை துர்காசப்தசதீ அல்லது சண்டி பாடம் என்றும் அழைப்பர். தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்களுடன், தேவி மகாத்மியம் நூலும் மிகமுக்கியமானதாக உள்ளது.
துர்கா மாத்ரு சொரூபம்.அவளே தேவி, அவளே சக்தி, பராசக்தி, மஹா சக்தி.அவள் நிர்குண பிரம்மம்.
துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது.
சுரதன் என்ற அரசனும் சமாதி என்ற வைஸ்யனும் காட்டுக்கு விரட்ட பட்டவர்கள். அவர்களுக்கு சுமேதன் என்ற முனிவர் அம்பாளின் மஹிமையை எடுத்துரைக்கும் விதமாக துர்கா சப்தசதி தொடங்குகிறது.
இதில் மறைமுகமான மந்திரங்கள் எத்தனையோ உள்ளன. இது மந்திர சாஸ்திரத்திர்க்கு சூத்திரம் போன்றது.இதனை பாராயணம் செய்வதால் அந்த மந்திரங்களை ஜபம் செய்த பலன் கிடைக்கும்
சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.
தேவி உபாசனைக்கு உரிய அனைத்து நூல்களிலும் சிறந்ததே தேவி சப்த சதி என்பதாகும். பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம் என மூன்று பாகங்களாக உள்ளது.
முதல் பாகத்தில் முதல் அத்தியாயம் (1) மட்டுமே உள்ளது. அது பிரும்மாவினால் படைக்கப்பட்ட இரண்டு அசுரர்களான மதுகைடபர் வதத்துடன் முடிவடைகின்றது.
அடுத்த பாகத்தில் அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை (2-4) உள்ளது. இதில் மகிஷாசுரமர்தனின் வதம் உள்ளது.
மூன்றாவது பாகத்தில் அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ளது. இது அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
இந்த பாராயணத்தில் உள்ள மூன்று வடிவு கொண்ட பராசக்தியின் உருவை சின்மயம் என்று சொல்லுவதுண்டு. திரிபுரா என்ற பெயரிலும் அவளை அழைப்பார்கள்.
இந்த சரிதத்தை பாராயணம் செய்வதின் மூலம் மூன்று வேதங்களான ரிக், யஜுர் மற்றும் சாம வேதத்தை பாராயணம் செய்தப் பலனைத் தரும் என்பது மட்டும் அல்ல அக்னி, வாயு மற்றும் சந்திரன் என்ற மூன்று தத்துவங்களையும் குறிப்பதாகும்.
துர்கை’ என்ற பதத்தை சாக்த பஞ்சாக்ஷரமாகக் கூறுவதுண்டு (த,உ,ர,க,ஆ என்று பிரிக்கலாம். த என்ற எழுத்து அசுரர்களின் நாசத்தையும், உ என்ற எழுத்து விக்ந நாசத்தையும், ர என்ற எழுத்து ரோக நாசத்தையும் க என்ற எழுத்து பாப நாசத்தையும், ஆ என்ற எழுத்து பய நாசத்தையும் குறிக்கின்றது.).
ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி, ஸ்ரீ துர்கா ஸூக்தம் முதலான மந்திரங்களின் சக்தி அளவிடற்கரியது.
தேவி சப்த சதி என்பது ஏதோ செளந்தர்யலஹரி போன்றது அல்ல. இதனை பாராயணம் செய்யத் துவங்கும் முன் அதை நல்ல குருவிடம் இருந்தே முறைப்படி தீக்ஷை எடுத்துக் கொண்டு துவங்க
வேண்டும்.
இதில் அம்பிகை கூறும் போது “என்னுடைய அருள் பெற்றவன் இதை பாராயணம் செய்யும் பாக்கியத்தை அடைவான், செய்பவன் கடுமையான துன்பத்தில் மாட்டிக்கொண்டாலும் நொடிப் பொழுதில் அவனை அதிலிருந்து நான் மீட்பேன், இந்த பாராயண ஸப்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் ஒழிந்து போகும் என்று கூறியிருக்கிறாள்.
கலியில் “கீதை”, “விஷ்ணு சகஸ்ரநாமம்”, “தேவி மஹாத்மியம்”, “லலிதா ஸகஸ்ரநாமம்” இந்நான்கும் பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி:
ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, ‘ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி”. இதை பாராயணம் செய்தால் ஸ்ரீ தேவிமஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம்.
சப்த ஸ்லோகி :
ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா
பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி. (1)
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி ।
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி காத்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா ॥ 2 ॥
ஸர்வ மங்கள மாங்கல்யே ஸிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஸரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே !. 3
ஸராணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோஸ்துதே ! 4
ஸர்வஸ்ரூபே ஸர்வேசே ஸர்வஸக்தி ஸமன்விதே
பயேப் யஸ்த்ராஹிநோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே ! 5
ரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான்
த்வாமாச்ரிதானம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥
ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி
ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம் (7)
வெள்ளிக் கிழமைகளில் ஐந்து முக தீபத்தை ஏற்றி தேவியைப் பூஜித்து ஸ்ரீ துர்கா ஸ்ப்த ஸ்லோகியை மூன்று முறை சொல்லி நமஸ்கரிப்பது எல்லா நலன்களையும் பெற்றுத் தரும். தீபத்தை கிழக்கு அல்லது வடக்கு முகமாக வைத்துப் பூஜிக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் சப்தஸ்லோகியுடன், லக்ஷ்மி அஷ்டோத்திர அர்ச்சனையும் சேர்த்து செய்து தேங்காய், பழம் நிவேதனம் செய்ய ஐஸ்வர்யம் பெருகி சர்வ மங்களங்களும் உண்டாகும்.
இத்தகைய தேவி மகாத்மியம் துதியை முறைப்படி கற்று பாராயணம் செய்து சகல வளங்களும் பெறுவோமாக !
எல்லாம் வல்ல அம்பாள் கிருபா கடாக்ஷத்தால் இனிது மங்களம் உண்டாகட்டும்.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……..
……..ஸ்ரீ