ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : அனுஷத்தில் அவதரித்த மகான்.
புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு
நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி
என்பது சம்ஸ்க்ருத ஸ்லோகம். புஷ்பங்களில் சிறந்தது ஜாதி முல்லை/ மல்லி, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சி.
காஞ்சி என்றாலே நம் எல்லோர் மனதிலும் தோன்றுவது காமாட்சியும், மஹா பெரியவா மட்டும் தான்.
1894 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன். திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது, இறைவன் சங்கல்ப்பத்தால் 1907 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதியாக ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமத்துடன் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 13.
சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்கள், புராணம், இதிகாசம், உபநிடதங்களை ஆழமாக கற்றார். இயல்பான அறிவுக் கூர்மையும், ஆன்மிக நாட்டமும் கொண்டிருந்த சிறுவனை ஆன்மிகப் பயிற்சிகளும் அனுஷ்டானங்களும் ஆன்மிக ஞானியாக மறுவடிவம் பெற வைத்தன. நாடு முழுவதும் ஏராளமானோர் இவரது பக்தர்களாக மாறினர்.
சீடர்கள், பக்தர்களால் சிவ ஸ்வரூபமாகவே வணங்கப்பட்டார். ‘நடமாடும் தெய்வம்’ எனப் போற்றப்பட்டார். நாடு முழுவதும் நடந்து சென்றே தனது ஆன்மீக பணியினை செய்தவர். வேதங்கள் வளர பெரும் பாடுபட்டு ஆகாங்கே வேத பாடசாலை நிறுவினார் அது போல அவரது பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
காஞ்சி மாகானின் அருள்மொழி:
நாம் நான்கு வழிகளில் பாவங்களை செய்கிறோம். உடலினால் தீய கார்யங்கள் செய்கிறோம், வாயினால் பொய் பேசுவது, சொல்லத்தகாத வார்த்தைகளை பேசுவது, மனிதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது, மற்றும் பணத்தால் பாவ செயல்களை செய்கிறோம்.
நாம் இந்த நான்கு வழிகள் மூலமாகவே நன்மைகளை செய்ய வேண்டும்.
உடலால் மற்றவர்க்கு உபகாரம் செய்தல், ஆண்டவனுக்கு தொண்டு புரிதல் வேண்டும். வாயினால் ஆண்டவன் நாமங்களை உச்சரிக்க வேண்டும், நல்லதயே பேச வேண்டும். மனதினில் நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ளவேண்டும். மனம் தான் இறைவன் குடியிருக்கும் இடம். அதை சுத்தமாக வைத்து கடவுளை அங்கு வீற்றிருக்க வைக்க வேண்டும். கடைசியாக பணத்தால் ஏழைகளுக்கு உதவ வேண்டும், கடவுளுக்கு செய்யும் காரியங்களுக்கு செலவிட வேண்டும்…….. (மஹா பெரியவா)
அவர் எல்லாம் அறிந்த அவதார புருஷன். ……. ஒரு சம்பவம்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவர் ஜன்ம தினத்தன்று அவைரச் சந்தித்து ஆசி பெற கலவையில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது.
அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியுடன் ஸ்வாமிகளின் தரிசனம் காண முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவி கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம்.
அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலே புரிந்தது.
பெரியவா தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை பார்த்து எப்படி இருக்கே என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்து நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகைளப் பெரியவாளிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்த்த பெரியவா சரி.. இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் கொண்டு “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” பெரியவா என்றார்.
பெரியவா சிறிது நேரம் மெளனமாக இருந்தார். பின்னர், அதிருக்கட்டும்… திருநெல் வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே அவன் இப்போ எப்படி இருக்கான்? என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.
தொழிலதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவைரச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத் திரிக்கையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன் “என்று திருப்பித் திருப்பிச் சொல்லி கொண்டு இருந்தார். அவைரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தை கேட்டதற்கு அவர் சொன்னார்…
“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர்
அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையைன என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் ‘ செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதர மகனை மறந்துவிட்டாய். நீ என்ன பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவா இப்போ என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனை தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.
அவரை நாடி வருவோர்க்கு அவர்கள் கேட்காமலேயே அருள் புரியக்கூடிய காஞ்சி பெரியவா தனது 100 வது வயதில் முக்தி அடைந்தார்.
கிருஷ்ணனுக்கு ரோஹிணி, ஈசனுக்கு ஆருத்ரா, போல பெரியவாளுக்கு அனுஷம் . அனுஷ நக்ஷத்திரம் அன்று பெரியவா பூஜை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று நாடு முழுவதும் பக்தர்கள் அவரது அவதார நக்ஷத்திரத்தில்(அனுஷம்) பிரதி மாதமும் அவருக்கு பூஜைகள் செய்து பிரார்த்தித்து வருகிறார்கள். அவரது அனுஷம் பூஜையில் கலந்து கொண்டால் நல்ல மாற்றம் தெரியும். அனுஷம் என்றாலே மஹா பெரியவா என்று நினைப்பு தான் வரும். அவரை போற்றி பணிந்து அவர் சொல்லிய வழிகளை பின் பற்றி அவரின் பரி பூர்ண கடாக்ஷத்தை பெற்று நல் வாழ்வினை அடைவோமாக!!
மஹா பெரியவா சரணம்!
காஞ்சி அன்னையின் தவப்புதல்வன்
காமகோடி பீடத்தின் தவ நாயகன்!
காலம் போற்றும் ஜகத்ரக்ஷகன்
கண்டோரை ஈர்க்கும் காந்தமவன்.!!
ஆதிசங்கரரின் மருத்தோன்றல் ஆனவன்.
வேத ரக்ஷகன்! வேதமே சுவாசம் கொண்டவன். !
வாக்தேவி அருள் கொண்ட அன்பு மகன் நாத்திகனை ஆத்திகனாக்கும் மகானவன்!!
இரண்டைம்பது ஆண்டுகள் ஆட்சி செய்து
இருண்ட இவ்வுலகை ஒளி பெற உய்வித்து !
இரு மருந்தளிக்க நடை பயணம் கொண்டு
இலக்கணமானான் காவியுடை கொண்டோர்க்கு !!
ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !!
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………. ஸ்ரீ