ஆண்டாள் கேட்ட உறவு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது:

“ஆண்டாள் கேட்ட உறவு ”

ஆண்டவன் மிகவும் எளிமையானவர், அடியார்களின் பக்திக்கு கட்டுபடுபவன், அவன் கருணாமூர்த்தி .

திருக்கோவிலூர் என்ற இடம், அங்கு ஒரு நாள் நல்ல மழை .. ஒதுங்க இடம் தேடி ஒரு வீட்டின் முன் உள்ள திண்ணையில் வந்து தங்குகிறார். அவர் தான் பூதத்தாழ்வார். சிறிது நேரம் கழித்து மற்றொருவர் வருகிறார். இப்போது இருவர் தங்க, மேலும் ஒருவர் வருகிறார், ஆக மூன்று அடியார்களும் தங்கினார்.

அப்போது நல்ல இருட்டு நான்காவதாக ஒருவர் வந்ததால் சற்று நெரிசல் இருக்க வந்த நான்காம் நபர் யாரென்று விசாரிக்க அவர் தான் திருக்கோவிலூர் திருவிக்ரமன்.

மூவரும் அவரை வணங்கி தாங்கள் இங்கு எப்படி என கேட்க அடியார்கள் எல்லாம் நீங்கள் இங்கு இருக்க எனக்கென்ன கோவிலில் வேலை அதான் வந்துவிட்டேன் என்றாராம். அந்த அளவுக்கு அடியாருக்கு துணை இருப்பவன்.

ஆண்டாள் கண்ணனையே நினைத்து பக்தியோடு வாழ்ந்தவள். கண்ணன் ஆண்டாளை நோக்கி இத்தனை நாள் நோன்பிருந்து என்னை பார்த்துவிட்டாய். இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க, ஆண்டாள் உன்னுடன் உறவு வேண்டும் என்று கேட்கிறாள்.

ஆண்டாளின் கூடாரவல்லிக்கு அடுத்த பாசுரத்தில்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் …..

கண்ணன் இடம் இருந்த எல்லாம் ஆண்டாள் பக்கம் சென்று விட்டது. பீதாம்பரம் ஆண்டாளிடம், சக்ரம் ஆண்டாளிடம், கோல விளக்காய் இருந்த நப்பினை பிராட்டி அவள் பக்கம், பெரியாழ்வார் ஆண்டாள் பக்கம் என எல்லாம் ஆண்டாள் பக்கம்.

கண்ணன் கேட்கிறார் உனக்கு எந்த மாதிரியான உறவு வேண்டுமென கேட்கிறார். இன்ன உறவு என்று சொல்லிவிட்டால் பரம்பொருளை வேறு உறவு முறையில் அனுபவிக்க முடியாது.

இப்போது ஆண்டாள் கேட்கிறார்:

” நீ காடு செல்ல என் மூச்சு அடங்கும்படியான உறவு வேண்டும் “

அதாவது இராமாயணத்தில் நீ காட்டுக்கு சென்று விட்டாய் என்று அறிந்த உடன் தனது மூச்சேயே விட்டானே தசரதன், அவனுகும் உனக்கும் உள்ள உறவு வேண்டும். சரி என்றார். இரு இரு

” நீ அயலூரில் வாழப்போக அதை பார்த்து அறற்றி அழுகிங்கின்ற உறவு வேண்டும்”

அதாவது தேவகி பெற்ற உன்னை வாசுதேவரிடம் கொடுத்து ஆயர் பாடியில் வைக்க, பெற்ற உனக்கு ஒரு துளி பால் கூட கொடுக்க வில்லயே என அழுத தேவகிக் கும் உனக்கும் இருந்த உறவு வேண்டும்.

” நீ காளிங்கன் மடுவில் விழப் போக அதை பார்த்து அலறின.உறவு வேண்டும்”

அதாவது நீ காளிங்கன் மடியில் வீழ்ந்த உடன் உன் நண்பர்கள் சுதாமா போன்றவர் அழுதார்களே அவர்களுக்கும் உனக்கும் உள்ள உறவு வேண்டும் . மேலும் கடைசியாக

” எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றி பார்த்து உட்கார சொல்லும் உறவு வேண்டும்”

கண்ணன் துரியோதனன் அவையை விட்டு வெளியே வந்து விதுரர் குடிசைக்கு வந்து அமர முயல, கிருஷ்ணா இரு என்று நாற்காலியை ஊன்றி, அழுத்தி பார்த்து உட்கார சொல்கிறான்.

துரியோதனன் இட்ட உப்பை தின்ற எனக்கு என்னை அறியாமலேயே அந்த தீய எண்ணம் வந்திருக்கிமோ என்று நாற்காலியை ஊன்றி பார்த்தேன் இப்போ உட்கார் என்ற விதுரனுக்கும் உனக்கும் உள்ள உறவு வேண்டும் என்றாள்.

நீ தாய் என்றால் நான் மகள், நீ தந்தை என்றால் நான் மகள், நான் மகள் என்றால் நீ தாயும் தந்தையுமாய் இருக்க வேண்டும். நான் தோழன் என்றால் நீ தோழனாக இருக்க வேண்டும். நீ என்னை ஞானியாக நினைத்தால் நீ பகவானாக இருக்க வேண்டும் என்று கண்ணனிடம் உறவு கேட்கிறாள் .

இவ்வாறு கண்ணனிடம் ஆண்டாள் உறவை கேட்கிறாள்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து

……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: