இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
” கந்த புராணம் – 3 வது பகுதி ”
குமரக்கோட்டம் வரலாறு :
ஒரு நாள் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிரம்மதேவர், தேவர்கள் படை சூழ கயிலை நாதரை தரிசிக்க வந்தார். முதல் வாயிலேயே தன்னுடைய லட்சத்து ஒன்பது வீரர்கள் சூழ கந்த பெருமான் விளையாடி கொண்டிருந்தார். இதை கண்ட தேவர்கள் மகிழ்ந்து முருக பெருமானை வணங்கினார்கள். ஆனால் பிரம்மா மட்டும் வணங்க வில்லை.
செருக்குடன் சென்ற பிரம்மாவை குமரப் பெருமான் அழைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியுமா? என்று கேட்டார் குமரக்கடவுள். பிரம்மா தலையை சொரிந்தார். ஓம் எனும் பிரணவத்தின் பொருள் தெரியாத நீர் எப்படி படைக்கும் தொழிலை செய்கிறீர்? என்று தலையில் குட்டி பிரம்மாவை சிறையில் அடைத்தார்.
பிரம்மா பல காலம் சிறையில் இருந்தார். குமர பெருமானே படைக்கும் தொழிலை மேற்கொள்கிறார். பிரம்மாவிற்குரிய கமண்டலத்தையும், ஜெபமாலையையும் கைகொண்டு பிரம்ம சாஸ்தாவாக தோற்றம் கொண்டார். முருகனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் நல்லவைகளாக பாவம் செய்யாதவைகளாக இருந்தன. இதனால் பாவம் புண்ணியங்கள் எனற தீர்ப்பே இல்லாமல் போயிற்று.
உயிரினங்கள் துயரமே அனுபவிக்கவில்லை. காலனுக்கும் வேலை இல்லை. பூமாதேவி பாரம் தாங்காமல் தவித்தாள். கடைசியில் சிவனாரே நேரில் வந்து முருகனை சமாதானம் செய்து பிரம்மாவை விடுவித்தார்.
எனினும் முருகனிடம் குமரா. நீ முதலில் எமது ஆணையை ஏற்கவில்லை. நந்தியெம் பெருமானை விரட்டி விட்டாய். நீ ஊழி காலத்திலும் அழியாமல் நிற்கும் பிருத்வி தலமான காஞ்சிமாநகரம் சென்று உன் திருப்பெயரால் தேவசேனா பதீசம் என்ற திருக்கோயில் அமைத்து எனை பிரதிஷ்டை செய்து வழிபாடுவாயாக என்று கூறினார்.இந்த ஸ்தலம் தான் குமர கோட்டமாக திகழ்கிறது. இங்கு தான் கந்த புராணம் அரங்கேற்றப்பட்டது.
சைவ-வைஷ்ணவ ஒற்றுமை
கந்தபுராணக் கதையுடன் இராமாயணக் கதையை ஒப்பு நோக்கும் போது சைவ-வைஷ்ணவ ஒற்றுமையை உணரலாம்.
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை என்ன என்பதை பார்ப்போம்.
இரண்டின் காலமும் பனிரெண்டாம் நூற்றாண்டு.
இரண்டிலும் காண்டங்கள் ஆறு.
கந்த புராணம் : முருகன் தலைவன்,
இராமாயணம் : இராமன் தலைவன்.
கந்த புராணம் : வீரபாகு துணைவன்; இராமாயணம் : இலக்குவன்.
கந்த புராணம் :சூரபத்மன்பகைவன்;
இராமாயணம் : இராவணன்.
கந்த புராண :பூதகணங்கள்படைகள்; இராமாயணம் :குரங்கினமேபடைகள்.
கந்தபுராணம்:சிறையிருந்தது
சயந்தன்.
இராமாயணம் : சீதை,
கந்த புராணம்:போருக்குக் காரணம் அசமுகி;
இராமாயணம் : சூர்ப்பனகை
சைவசமயிகளின் பரம்பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைஷ்ணவர்களின் பரம்பொருளான விஷ்ணுவின் புதல்விகளாகவும் கொண்டாடப்பெறும் வள்ளி, தேவசேனா தேவியரைக் கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை.
தவிர முருகன் சிவகுமாரனே ஆகிலும் விஷ்ணு அம்சம் நிரம்பப் பெற்றவன். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களில் நடைபெற்ற அத்புத நிகழ்ச்சிகளோடு அவனது ஒவ்வொரு செய்கையையும் இணைத்துப் பார்க்கும் போது ஏற்படும் இன்பமே தனியானது. அலாதியானது.
இதனை உண்மையிலேயே செயற்படுத்தியவர் சந்தக்கவி அருணகிரியார். திருப்புகழ் எங்கும் முருகன் பெருமை போலவே திருமால் பெருமையும் நிறைந்திருக்கிறது. தவிர, முருகனை அவர் ‘பெருமாள்’ என்றே விளித்துப் பெருமை செய்திருக்கிறார்.
பரமேச்வரனிடமிருந்து முதலாவதாகத் தோன்றியது சுப்ரமண்யமே. ‘யாதே ருத்ர சிவா தனூ :’ என்கிறது ருத்ர மந்திரம்.
ஆரெழுத்து சுப்ரமண்ய மந்திரத்தை கண்டுபிடித்த காரணத்தினால் ஸனத் குமரர் அம் மந்திரத்தின் ரிஷியாகக் கூறப்படுகிறார்
முருகன் பிரம்மமானதினால்தான்
வேத மாதாவே அவனை பற்றி ஒன்றும் கூறாமல் ” சுப்ரமன்யோஹம் சுப்ரமன்யோஹம் சுப்ரமன்யோஹம்”
என்று மும்முறை கூறுவதுடன் நிறுத்தி கொள்கிறாள்.
ஷண்முக நாயகன் தோன்றிடுவான் … சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம் … கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம்
என்ற பாடலை பாடி………
நாளை ஷண்முக நாயகன் தோன்றிய விவரங்களை பார்ப்போம்.
வருகிறார் ஷண்முக நாயகன் ………
……… ஸ்ரீ.