கிருஷ்ணனின் 2 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது:

கிருஷ்ணனின் இரண்டாவது
விஸ்வரூப நிகழ்வு

இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது
சிறையிருந்தால் சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம்

பாரதம் என்றால் “தூது போனான் ஏற்றம் கூறுவது பாரதம்” மனிதனுக்காக கண்ணன் தனது கழுத்தில் ஓலையை கட்டிக்கொண்டு போனான். அது தான் பாரதம்.

கிருஷ்ணன் பாண்டவரின் தூதராக அஸ்தினாபுரம் செல்ல முடிவு எடுத்து
புறப்படுகிறான்.

கிருஷ்ணன் வருவதை அறிந்த துரியோதனன் தனது அவயை கூட்டி
கிருஷ்ணனை யாரும் எதிர்கொண்டு அழைக்க கூடாது என தீர்மானம் போடுகிறான்.

யார் வந்தாலும் இன்முகத்துடன் வரவேற்று அழைப்பது தானே சிறப்பு. அந்த பண்பு கூட துரியோதனுக்கு இல்லாமல் போயிற்று

காஞ்சி நகரில் திருபாடகம் என்ற இடத்தில் கிருஷ்ணன் 18 அடி உயர பாண்டவதூத பெருமாள் ஆக காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் பாரதம் முழுவதும் படித்த பலனுண்டு.

கிருஷ்ணன் அஸ்தினாபுரம் உள்ளே நுழைகிறான். ஊர் மக்கள் தடையை மீறி அனைவரும் கிருஷ்ணனை பார்க்க இருபுறமும் திரளாக நிற்கிறார்கள்.

ஸ்வாகதம் கிருஷ்ணா ….
சரணாகதம் கிருஷ்ணா……

என பாடி

வரவேற்று கிருஷ்ணா ..உன் வரவு நல் வரவாகட்டும், உன் திருவடிகளே சரணம் என்று முழக்கமிட்டனர்.

துரியோதனனின் ஆணையை மீறி கிருஷ்ணனை எதிர்கொண்டு வரவேற்று அழைத்து செல்கிறான் விதுரர். அஸ்தினாபுரத்தில் உள்ள மாளிகைகளை காட்டி, இது துரியோதனன் மாளிகை, இது பீமன் மாளிகை, இது த்ரோனாசார்யார் வீடு, இது அஸ்வத்தாமன் வீடு என வரிசையாக காட்டி வருகிறான்.

கடைசியில் ஒரு குடிசை ஒன்று தெரிகிறது.அப்போது கிருஷ்ணன் கேட்கிறார் விதுரா ! இது யார் வீடு என்று. அப்போது சொல்கிறார் விதுரன் கண்ணா … இது உன் வீடு என்று.
விதுரன் தன் குடிசையை தனது என்று சொல்லாமல் கிருஷ்ணன் மீது கொண்ட அன்பால் அவ்வாறு கூறினான்.

எல்லாம் அறிந்த கிருஷ்ணனும் குடிசைக்குள் சென்று அமர்கிறார். இதுதான் ஆண்டவனிடம் சிறப்பு, எளிமை. எங்கு பக்தி இருக்கிறதோ அங்கு ஆண்டவன் வருவான் என்பதற்கு இது சாட்சி. ஹே ! கிருஷ்ணா !உனக்கு உணவளிக்க என்னிடம் வெறும் கஞ்சி தான் இருக்கு என்று ஒரு இலையை போட்டு அதில் கஞ்சியை ஊற்றுகிறான் விதுரன்.

கஞ்சி, இலையின் ஒரு பக்கம் ஓட கண்ணன் தன் ஒரு கையால் தூக்கி பிடிக்க கஞ்சி மறுபக்கம் ஓட மற்ற கை மூலம் தூக்கி பிடிக்க, கஞ்சி மற்றொரு பக்கம் ஓட அப்போது கண்ணன் உடம்பில் மேலும் இரண்டு கைகள் தோன்றி அந்த இலையை கிண்ணம் போல பிடித்து அருந்தினான். இந்த இடத்தில் தான் விதுரனுக்கு கிருஷ்ணன் நான்கு கைகளுடன் தரிசனம் தந்தார்.

இரவு தங்கி மறு நாள் காலை கிருஷ்ணன் துரியோதனன் அவைக்கு செல்கிறார். தீய எண்ணம் கொண்ட அவன், கண்ணனை யாரும் வரவேற்க கூடாது என்றான். மேலும் அவை நடுவில் ஒரு பள்ளம் வெட்டி அதன் மேல் சிறகுகளை நிரப்பி மேல ஆசனம் போட்டு வைத்தான். கண்ணன் வந்து உட்கார்ந்த உடன் பள்ளத்தில் வீழ்வான் அப்போது கிங்கரர் மூலம் கிருஷ்ணனை வெட்டி வீழ்த்த ஏற்பாடு செய்தான்.

கிருஷ்ணன் அவைக்கு உள்ளேவருகிறான். அவையில் எல்லோரும் ஆணையை மறந்து எழுந்து நின்று வரவேற்றனர் துரியோதனனை தவிர. கிருஷ்ணன் தனது கட்டை விரலை பூமியில் அழுத்த துரியோதனன் தன் ஆசனத்தில் இருந்து குட்டி கர்ணம் போட்டு வந்து கிருஷ்ணன் காலடியில் வீழ்ந்தான்.
எல்லாம் அறிந்த பரம் பொருள் அல்லவா அவன்?

துரியோதனன் கிருஷ்ணனை ஆசனத்தில் அமர சொல்ல கிருஷ்ணனும் அமர கிருஷ்ணன் அந்த பள்ளத்தில் வீழ்கிறான். அங்கிருந்த கிங்கரர்கள் கிருஷ்ணனை வெட்ட முற்பட்டனர்.

அப்போது கிருஷ்ணன் ஆய வடிவம் பதினாயிரமாக வானளாவிய விதமாக விஸ்வரூபம் எடுக்கிறான்.
இது தான் கிருஷ்ணனின் இரண்டாவது விஸ்வரூபம்.

இதை கண்ட கிங்கரர்கள் பயந்து நடுங்க, அவையில் உள்ள அனைவரும் பயந்து அஸ்தினாபுரம் இனி என்ன ஆகுமோ என்ற பீதியில் கிருஷ்ணனை வேண்டினார். அனைவரும் பயந்து போயினர்.

யார் பயப்பட வேண்டுமோ அவன் பயப்படவில்லை. அவையை விட்டு வெளியே செல்கிறான். செல்லும்போது, விதுரனை நோக்கி என் ஆணையை மீறி வரவேற்ற உன் புத்தி என்ன புத்தி? நீ தாசி பெற்றேடுத்த பிள்ளை தானே என்று கேவலமாக பேச, விதுரன் உடனே துரியோதனனை நோக்கி இனி உன்னிடம் இருப்பது நல்லதல்ல என்று தனது வில்லை வெட்டி போட்டு விட்டு வெளியேறுகிறான்.

கிருஷ்ணன் விதுரா ! ஏன் அவசரப் பட்டாய் என கேட்க, கிருஷ்ணா அவன் என்னை தாசி பெற்ற மகன் என்று சொன்னது கூட பரவாயில்லை. அவன் எங்கு பேசினான். நீ விஸ்வரூபம் எடுத்த இடம். அது வைகுண்டத்துக்கு சமமான இடம், அந்த புனிதமான இடத்தில் தராதரம் இல்லாமல் தகாத வார்த்தை பேசி களங்கபடுத்தி விட்டான். அதனால் தான் கோவப் பட்டேன் . அவனுடன் இனியும் இருப்பது நல்லதல்ல என்றான் விதுரன். தூது முடிந்து போனது.

தற்போது இரண்டாம் விஸ்வரூபம் பலன் பெறாமல் தோல்வி அடைந்தது. முதல் விஸ்வரூபம் ஞானி (பக்தன்) முன் தோற்றது. தற்போது இரண்டாம் விஸ்வரூபம் ஆணவமே உருவாய் கொண்டவன் முன் பலனின்றி தோற்று போனது.

கிருஷ்ண! கிருஷ்ண! கிருஷ்ணா!!

லோக. சமஸ்தா சுகிநோ
பவந்து …..

…….. .ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: