இன்று நாம் காணவிருப்பது :
” கீதை சொல்லும் பாடம் ”
(பகுதி 2 )
நேற்று 18 குணங்களை பார்த்த நாம் இன்று 18 அத்தியாயங்களின் தாத்பர் யங்களை பார்ப்போம்.
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே யுகே’
அதாவது ‘நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலைநாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறார்.
பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம் என்ன?
1. விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்: பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்: உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாசயோகம் :
பாவ புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்: நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்: இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்: எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய,ராஜகுஹ்யயோகம்:
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்:அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம் ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம். இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.: யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.
சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
நாளை கீதை சொல்லும் வாழ்க்கை நெறிகளை பார்ப்போம்.
……… நாளையும் தொடரும்
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……
……… ஸ்ரீ