குருவின் அவசியம்

ஆன்மீக சாரலில் தெரிந்து கொள்ளப் போவது :

குருவின் அவசியமும் மகிமையும் :

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர்.

அந்த துறவியிடம், ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது. ‘சாஸ்திரங்களைப் படித்து, அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார். சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே.. இடையில் குரு எதற்கு?’ என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது.

அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாக குடில் அமைத்து, சாஸ்திர நூல்களைப் படிக்கத் தொடங்கினான். பசிக்கும்போது, துறவி களைப் போலவே கிராமத்திற்குள் சென்று யாசகம் பெற்று உணவு உண்பான்.

ஒரு நாள் சீடன் சாஸ்திர நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். அந்த நூலில், ‘எச்சில் பரிசுத்தம். வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம்’ என்ற வாசகங்கள் இருந்தது. அதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

ஒரு நாள் அவன் யாசகம் பெறுவதற்காக கிராமத்திற்குள் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும், எச்சில் இலைகளை கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனார்கள்.

இதைக் கண்ட சீடன் கோபமுற்றான். ‘சாஸ்திரம் தெரியாத முட்டாள்கள்’ என்று மனதுக்குள் திட்டியபடியே ஓடோடிச் சென்று, குப்பையில் கிடந்த எச்சில் இலைகளை கையில் எடுக்க முற்பட்டான்.

அப்போது அவனை ஒரு பெரியவர் தடுத்து நிறுத்தினார். ‘ஏனப்பா! பார்ப்பதற்கு ஒரு தபஸ்வி போல் இருக்கிறாய். நீ போய் எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே.. ஏன்?’ என்று விசாரித்தார்.

‘உங்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். எச்சில் பரிசுத்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா?’ என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கூறினான் சீடன்.

முதியவர் குழம்பிப் போனார். அதன் பிறகு, அவனிடம் முழுமையாக விசாரித்தார். அப்போது சாஸ்திரத்தில் தான் படித்த வார்த்தைகளை அவன் தெரிவித்தான்.

இப்போது அந்த முதியவருக்கு புரிந்து விட்டது.. ‘இவன் ஒரு அரைகுறை’ என்று.

சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். ‘எச்சில் பரிசுத்தம் என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே, பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லியிருக் கிறார்கள்’ என்று விளக்கினார்.

சீடனின் மனதில் பெரிய குழப்பம். ‘அப்படியானால், வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்பதற்கு என்ன பொருள்?’ என்று வினவினான்.

முதியவர் புன்னகைத்துக் கொண்டே அவனுக்கு பதிலளித்தார். ‘தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது.

பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி, இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதையே இறந்தவன் போர்வை பரிசுத்தம் எனச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார்.

சீடனுக்கு சாஸ்திரத்தில் கூறியிருந்ததன் அர்த்தம் இப்போதுதான் முழுமையாக புரிந்தது.

எதையும் மேலோட்டமாகப் பார்த்து படிப்பது என்பது வாழ்க்கைக்கு உதவாது. அதன் நுட்பத்தை ஆழமாக அறிய, ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் அவசியம் தேவை.

இப்படியாக குருவின் அவசியத்தை யும் குருவின் மஹிமையையும் இந்த கதை உணர்த்துகிறது.

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா……

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து . …..

………. ஸ்ரீ

1 thought on “குருவின் அவசியம்”

  1. Gurunathan charanathil nizal kandipa undu. Echchil, vandi ku eppadi oru explanation. Really wondering.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: