இன்று நாம் காணப்போவது
” கோ பூஜை ”
கோ என்றால் பசு அல்லது கோமாதா.
ப்ரம்ம சிருஷ்டியில் உலகம் உய்ய பசுவை படைத்தான். அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ரிஷிகளையும் இருக்க செய்தான். இதில் முதலில் வந்தவர்கள் தர்மராஜனும், காலதேவனும் தான். அவர்கள் பசுவின் முகத்தில் வாசம் செய்கிறார்கள்.
மற்றவர்கள் உடல் முழுவதும் எங்கும் வாசம் செய்கிறார்கள். கடைசியாக வந்தவர்கள் மஹா லக்ஷ்மியும், கங்கையும் வந்தார்கள். அவர்களுக்கு வாசம் செய்ய இடம் இல்லாததால் பசுவின் பின் பகுதியில் வாசம் செய்கிறார்கள். எனவேதான் பசுவை மஹாலக்ஷ்மி ஸ்வரூபமாகவே வணங்குகிறார்கள். பூஜைகள் செய்யும் போதும் கூட பின் பகுதியில் நின்று கொண்டுதான் மஹாலக்ஷ்மி அம்சம் கொண்ட பசுவை வணங்குகிறோம்.
இன்றளவும் பசுவின் கோமியமும், சாணமும், புனிதமாக கருத படுகிறது.
பசு சாதுவானது. சைவம், மனிதனால் ஒதுக்கப்படுவதை உணவாக எடுத்துக்கொண்டு மனிதனுக்கு நல்லதையே கொடுக்கிறது.
உதாரணமாக நெல் அறுவடை செய்த பிறகு நெல் நமக்கும் வைக்கோல் அதற்கும், நெல்லை அரிசியாக்கி அரிசி நமக்கும், தவிடு அதற்கும், பருத்தி நமக்கும், கொட்டை அதற்கும் இப்படி பல உணவாக எடுத்து கொள்கிறது,
ஆனால் பசுவின் மூலம் கிடைக்கும் அனைத்துமே நல்லதையே தருகிறது. அது மூலம் கிடைக்கும் கோமியம் (கோ மூத்திரம் ) கிருமி நாசினியாக பயன் படுகிறது. சாணம் உரமாகவும், வராட்டியாகவும், கிருமிநாசினியாகவும் பயன்தருகிறது. பசுவின் பால் குழந்தைகளுக்கு சத்தான உணவாக இருக்கிறது. மேலும் பால் மூலம் கிடைக்கும் தயிர், வெண்ணை, நெய் என்று பல நன்மைகள்.
எல்லாவிதமான நல்ல விசேஷங்களிலும், ஆலய பூஜைகளின்போதும் முதற் பூஜையாக கோ பூஜை நடக்கும்.
கோ பூஜை : முதலில் பசுவை கன்றுடன் பண்ணீர் அல்லது சுத்தமான நீரால் ஸ்னாநம் செய்வித்து, அல்லது ப்ரோகிஷித்து
மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அலங்காரம் செய்து புஷ்ப மாலை, மற்றும் வஸ்திரம் அணிவித்து
அஷ்டோத்ர நாமாவளிகள் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
பிறகு தூப தீபங்கள் காட்டி நிவேதனம் செய்யவும் ( சர்க்கரை பொங்கல், பழ வகைகள் ). பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து , பசுவை 3 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். வலம் வரும்போது கோமாதா காயத்ரி மந்திரம் அல்லது லக்ஷ்மி ஸ்லோகம் சொல்வது நல்லது. பசுவிற்கு பிடித்த உணவை கொடுக்கலாம்.
பூஜை முடிந்ததும் பெண்களுக்கும், சுமங்கலிக்கும் வெற்றிலை பாக்கு கொடுப்பது ரொம்பவும் சிறப்பு.
கோ பூஜை பலன்கள் :
1. பண கஷ்டம் நீங்கும்.
2. குழந்தை பாக்கியம் கிட்டும்.
3. கெட்ட சக்திகள் நெருங்காது.
4. முற்பிறவியில் செய்த பாவங்கள் தீரும்.
5. குடும்பத்தில் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.
இப்படிப்பட்ட இந்த கோ பூஜை எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு பசுவிற்கு உங்கள் கையால் உணவளித்து வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் யாவும் நிவர்த்தியாவது நிச்சியம்.
கோ பூஜை செய்வோர்க்கு மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாக்ஷம் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து………
……… ஸ்ரீ