இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
” சந்தியாவந்தனம் ”
எல்லாக் கர்மங்களுக்கும், எல்ல உபாசனைகளுக்கும், எல்லா மந்திரங்களுக்கும் ஆணிவேர் போன்றிருப்பது சந்தியாவந்தனம். இது நம் முன்னோர்கள் நமக்கு அளித்துள்ள அழிவில்லாச் செல்வம். இதை கை விடாது போற்றி காப்பது நமது முக்கியமான கடமையாகும்.
முதலில் சந்தி என்றால் என்ன? என பார்ப்போம்….
சந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம்.
அப்படிபட்ட சந்தியாகாலத்தில் நமக்கு பிரத்திட்சமாக தோன்றும் ஜோதியான சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் சந்தியாவந்தனம் எனப்படும்.
சந்த்யாகாலம் என்பது அதிகாலை, மத்தியானம், சாயங்காலம்
என்னும் மூன்று காலங்கள் ஆகும்.
சந்தியாவந்தனத்தில் நமக்கு ஆசமனியம்
பிராணாயாமம்
சங்கல்பம்
அர்க்யப்ரதானம்,
காயத்ரீ ஜபம் மற்றும் உபஸ்தானம் என்ற ஆறு கர்மாக்கள் ப்ரதானமாக உள்ளன.
ஆசமனியம் எனபது சுத்த தீரத்த்தை அச்சுதாய நம :
அனந்தாய நம :
கோவிந்தாய நம: என கூறியவாறே மூன்று முறை தீர்த்தத்தை ஸவீகரிப்பது
நம் ஸரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவான ப்ராணனை அடக்குவது ப்ராணாயாமம். ப்ராணாயாமம் செய்யசெய்ய நம் பாபம் விலகும் என்கிறது “தர்ம ஶாஸ்த்ரம் “
பிராணாயாமம் என்பது
பலர் இப்போது செய்வது போல மூக்கை அடைத்து கொண்டு பின்பு காது பக்கம் கையை கொண்டு போவதல்ல.
இடது மூக்கு வழியாக மூச்சை இழுத்து பூரகம் செய்து, ஸுஷும்னையில் நிறுத்தி கும்பகம் செய்து, வலது மூக்கு வழியாக மூச்சை விட்டு ரேசக ப்ராணாயாமம் செய்யவேண்டும். இம்மூன்றும் சேர்ந்தே ஒரு ப்ராணாயாமம் ஆகும். இப்படிச்செய்ய இயலாதவர் இரு நாஸிகளையும் அடைத்து ப்ராணாயாம மந்திரத்தை ஜபித்துக் கும்பக ப்ராணாயாமமாவது செய்ய வேண்டும்.
பூரகத்திலும் ரேசகத்திலும் மெதுவாக சப்தம் கேளாமல் வாயுவை இழுத்து விடவேண்டும்
பூரகம் செய்யும்போது நாபியின் நடுவில் ப்ரஹ்மாவையும், கும்பகத்தில் ஹ்ருதயத்தில் விஷ்ணுவையும், ரேசகத்தில் நெற்றியில் சிவனையும் த்யானம் செய்யவேண்டும்.
ப்ராணாயாமம் செய்யும்போது , ஆள்காட்டிவிரலையும், நடுவிரலையும் மடக்கிக்கொண்டு, கட்டைவிரலால் வலது நாஸியையும், மோதிரவிரல், சுண்டுவிரல்களால் இடது நாஸியையும் பிடித்துக்கொண்டு செய்ய வேண்டும். ஓவ்வொரு ப்ராணாயாமம் முடிந்தபின் வலது காதைத் தொடவேண்டும். வலது காதில் கங்கை உள்ளதால், கங்காஜலத்தால் கையைச் சுத்தமாக்கிக் கொள்கிறோம்
சங்கல்பம் என்பது
சந்தியாவந்தனம் எந்த நேரத்திற்காக செய்கிறோமோ அந்த காலத்திற்கான பிராத்தனை.
மார்ஜனம்:
“ஆபோஹிஷ்டா “என்ற மந்திரத்தால் ஜலதேவதைகளைப் ப்ரார்த்தித்துத் தலைமீது ஜலத்தைப் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். 9 வாக்யமுள்ள இந்த மந்திரத்தில், முதல் எட்டு வாக்யத்திற்கும் ஒவ்வொரு முறை ஜலத்தைத் தலையிலும், 9ஆவது வாக்யமான ‘யஸ்யக்ஷயாய ஜின்வத’ என்பதைக்கூறி இரு கால்களிலும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்.
மந்த்ர ஆசமனம்:
உள்ளே உள்ள பாபம் அகல, உள்ளங்கையில் ஜலத்தை ஏந்தி, காலையில் ‘ஸூர்யஶ்ச’ என்னும்மந்திரம்,
மாத்யானீக்கத்தில் ஆப:புநந்து’என்னும்மந்திரம்
ஸாயங்காலத்தில் ‘அக்னிஶ்ச’ என்னும் மந்திரம் கூறி ஜலத்தை அருந்தவேண்டும்.
ஸூரியன், ஜலம், அக்னி, முதலிய தேவதைகள், கோபத்திற்கு அபிமான தேவதைகள். இவர்களை, நமது அவயவங்களாலும், மனத்தாலும் தெரிந்தும், தெரியாமலும் செய்த (நமக்குத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய) பாபத்தை அகற்றி நம்மைச் சுத்தமாக்கும்படிக் கோருகிறோம்
புனர்மார்ஜனம்:
‘ததிக்ராவிண்ண’ மந்திரத்தால், ஒவ்வொரு வாக்யத்துக்கு ஒருமுறை உள்ளங்கையில் ஜலத்தை யேந்தி ஜபித்துத் தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். மறுபடி ‘ஆபோஹிஷ்டா’ மந்திரத்தைச் சொல்லி, ஜலத்தை ஏந்தி ஜபித்து 8 வாக்யங்களால் தலையிலும், 9ஆவதால் கால்களிலும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்.
ஜலத்தையே முதலில் பரமாத்மா ஸ்ருஷ்டித்தார். அது ப்ராணனை வ்ருத்தி செய்யும். ஜலம் ஸர்வ தேவ வடிவானது, ப்ராண ரூபமானது, மருந்தானது என்பன வேத வசனங்கள். ஜலத்தில் வித்யுத் சக்தி இருக்கின்றது. அது மந்த்ரபலத்தால் பன்மடங்கு அதிகமாகிறது.ஜலத்தில் மந்த்ரத்தை நிறுத்தி பாக்யம் முடிந்தவுடன் ப்ரோக்ஷித்துக் கொண்டால், பிரும்மஹத்தி பாபமகலும். வாக்கு, மநஸ், உடல், ரஜஸ், தமஸ், ஜாக்ரத், ஸ்வப்நம், ஸுஷுப்தி இவற்றால் உண்டாகும் பாபமும் அகலும்.
அர்க்யப்ரதானம்:
ஸந்த்யாவந்தனத்துக்கு ஜீவநாடி போன்றது. ப்ராணாயாமம், ஸங்கல்பம் செய்து அர்க்யப்ப்ரதானம் செய்யவேண்டும். இதைச் செய்வதற்காகவே இவ்வளவு பூர்வாங்கமும் செய்து நம் உடல், மொழி, மனஸ்களைச் சுத்தமாக்கிக் கொண்டோம்.
காலையில் நின்று கொண்டு பசுவின் கொம்பு உயரம் குதிகாலைச் சிறிது தூக்கி கிழக்கு முகமாக, கட்டைவிரலை விலக்கி (கட்டைவிரல் சேர்ந்திருந்தால் அது ராக்ஷஸர்களுக்கு ஆனந்தம்) இரண்டு கைகளாலும் அர்க்யம் தரவேண்டும்.
பகலிலும் நின்று கொண்டே தரவேண்டும்.
மாலையில் உட்கார்ந்து கொண்டு தரவேண்டும்.
வீட்டில் பாத்ரத்தை வைத்துக் கொண்டு ஸந்த்யாவந்தனம் செய்யும்போது, இடது கை கட்டைவிரல், ஆள்காட்டி விரல் இரண்டிற்கும் நடுவே பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு இருகைகளாலும் அர்க்யம் தரவேண்டும். ஒரு கையால் அளிப்பதும் நமஸ்காரம் செய்வதும் தேவதைகளை அவமானம் செய்வது போலாகும், பாபம்.
காலையிலும் மாலையிலும் நாம் ஸூரியனுக்கு அளிக்கும் அர்க்யஜலம் வஜ்ரமாகி, வரபலத்தால் தினமும் ஸூர்யனை எதிர்த்துச் சண்டையிடும் அஸுரர்களை, மந்தேஹாருணம் என்னும் த்வீபத்தில் எரிகிறதாம். அவர்களை எறிந்த பாபமானது அர்க்யம் ஆனபின் செய்கின்ற ப்ரதக்ஷிணத்தால் அகல்கிறது.
“காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று ஸித்தர் கூறிய காலமே அர்க்யம் கொடுப்பதற்குச் சிறந்த காலமாகும்.
காலையில் கிழக்கு நோக்கியும், மதியத்தில் வடக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் அளிக்க வேண்டும்.
ஆதித்யாதி தர்ப்பணம்:
பிறகு அமர்ந்து காலையில் கிழக்கிலும், மதியத்தில் வடக்கிலும், மாலையில் மேற்கிலும், ஆதித்யன் முதலிய நவக்ரஹங்களுக்கும், கேசவன் முதலிய பன்னிரண்டு நாமாக்களுடன் கூடிய மஹாவிஷ்ணுவுக்கும் இரு கரங்களாலும் அர்க்யம் அளிக்கவேண்டும். நம்மில் சிலர் இதைச் செய்வதில்லை. பிறகு ஆசமனம் செய்து ஸந்த்யா கர்மாவின் முன்பாதியைப் பூர்த்தி செய்கிறோம்.
நாளையும் தொடரும்…..
லோகா சமஸ்தா சுகினோ
பவந்து …….
…….ஸ்ரீ