சரணாகதி – பெருமை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :

“சரணாகதி”

பாதம் ஒன்றே கதி – சரணாகதி

இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை.

அப்படிப்பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை; பற்றாமல் போனால் நம் மடமை என்பதே சரணாகதி தத்துவம்.

ராமருக்கு சரணாகத வத்ஸலன் என்ற பெயரே உண்டு.

பால காண்டத்தில் தேவர்களும் அயோத்யா காண்டத்தில், பரதனும் மற்றும் குகனோடு சக்யம், ஆரண்ய காண்டத்தில், ரிஷிகள் சுக்ரீவன்,
யுத்த காண்டத்தில், விபீஷணன் ஆகியோர் சரணாகதி செய்கிறார்கள்.

பகவத் கீதையின் இறுதியில், எல்லாவித தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் மட்டும் தஞ்சமடையும்படி கிருஷ்ணர் கட்டளையிடுகிறார்.

அவ்வாறு கிருஷ்ணரிடம் தஞ்சமடைதல் “சரணாகதி” எனப்படுகிறது.

சரணடைந்த பக்தர்களை தான் பாதுகாப்பதாகவும் அவர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளிக்கின்றார். (பகவத் கீதை 18.66).

விபீஷண சரணாகதிக்குத்தான் தனியொரு பெருமையும் விசேஷமும் இருக்கு.

சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது இதில்தான். சரணாகதியின் ஐந்து அங்கங்கள் இருந்தது விபீஷண சரணாகதியில்தான்.

அந்த சரணாகதி தத்துவத்தில் சொல்லப்படும் ஐந்து அங்கங்கள்

அநுகூல்ய சங்கல்பம்- இறைவனுக்கு அனுகூலமான செயல்களைச் செய்தல். அதாவது எவையெல்லாம் தர்மத்துக்கு உகந்ததோ, அவையெல்லாம் இறைவனுக்கு அனுகூலம்.
ப்ராதிகூல்ய வர்ஜநம்- இறைவனுக்கு விரோதமானவற்றை செய்யாதிருத்தல். தர்மத்துக்கு மாறுபட்ட, முரணான அனைத்தும் இறைவனுக்கு விரோதம். மகாவிச்வாசம்- இறைவன் அவசியம் ரக்ஷிப்பான் என்ற நம்பிக்கை கொள்ளல். காலக்கெடு நிர்ணயம் செய்யாமல், சந்தேகம் கொள்ளாமல், பூர்ணமாயிருத்தல்.
கோப்த்ருத்வ வரணம்- சரணம் அடைந்தேன், ரட்சகனாக இருத்தல் வேண்டும் என பிரார்த்தித்தல்.
கார்ப்பண்யம் – என்னைக்காத்துக் கொள்ள என்னிடம் ஆற்றல் இல்லை எனச் செருக்கு நீங்கிடல்.
சரணாகதியில் இருக்கக்கூடிய இந்த ஐந்து அங்கங்களையும் தாண்டி, விபீஷணரிடம்தான் அங்கீ என்கிற ஆறாவது தன்மையும் இருந்தது.
(அகிஞ்சன:) அகிஞ்சன என்றால் விருப்பு, வெறுப்பின்றி இருத்தல் என்பது பொருள்.

சரணடைந்த சிலர் பற்றி

ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சொல்கிறார்:
பிராட்டியும், பகவானும் விட்டாலும், நான் விடமாட்டேன் என அவர்களின் பாத கமலம் சொல்லுமாம்.

.இரண்டு அடிகளில் மூவுலகையும் அளந்த வாமனரிடம் சரணடைந்து மூன்றாவது அடிக்காக தன்னையே
அர்ப்பணித்தார் மாமன்னர் பலி.

ப்ரஹ்லாதனோட சரணாகதி தான்
நரசிம்ம அவதாரத்திற்கு வித்து.

கஜேந்திரன் இறைவனிடம் அடைந்த சரணாகதியே ஸ்ரீ மகாவிஷ்ணுலை
நொடிப்பொழுதில் வரவழைத்தது.

அர்ச்சுனன் சரணாகதியே பகவத்கீதை

மார்க்கண்டேயரின் சரணாகதிதான்
சிவனின் காலசம்ஹார மூர்த்தியின் வித்து.

அடியார்க்கு அடியார் சிவன் என்பது சைவ நெறி.

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
என்ற சுந்தரமூர்த்திகளின் தேவாரப் பாடல் இறைவனுக்கு அவர் அடிமையாக (சரணடைந்த நிலை) இருந்தமையைக் காட்டுகிறது.

அவன்பால் அணுகியே அன்புசெய்வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.

என்ற பாடலில் சிவனடியார்களுக்கு அன்பு செய்யும் சிவனடியார்களைச் சிவனது அருள் சென்றடையும் என்றும் திருமூலர் அடிமையாதலை (சரணடைதலை)ப் பற்றி விளக்குகிறார்.

இறைவனை அனுபவித்து இன்புற்றவர்களுக்குத்தான் தெரியும் ‘அடிமை’ என்பது என்னவென்று.

இறைவனைத் தன்னுள் அறிந்துவிட்டால் தனக்கே தான் அடிமைதானே. அதுதானே முழுமையான பக்தி நெறி!

இறைவனை அறியாமல் ‘தான் தனது’ என்ற ஆணவத்தினால் உலக இச்சைகளுக்கு அடிமையாகிறான் மனிதன்.

பொருள் அடிமை வேறு அருள் அடிமை வேறு.

நான் எனது என்ற ஆணவங்களையும் ஆசைகளையும் அகற்றி
இறைவனைத் தனக்குள்ளே அறிந்து சிவமாதல் வேண்டும்.

இவ்வுலகில் பிறவி யெடுப்பவர்கள் ஒவ்வொருவரும் பெற்றோர்கள், முன்னோர்கள், தேவர்கள், ரிஷிகள் என பலருக்கும் கடன்பட்டுள்ளனர்

ஆனால் பகவானிடம்
சரணடைந்தவர்களுக்கு எந்தவொரு கடனும் இல்லை என்பதை ஸ்ரீமத் பாகவதம் (11.5.41) பின்வருமாறு உறுதி செய்கிறது.

தேவர்ஷி–பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்

“எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாத கமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன் படுவதில்லை.”

நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே

என்ற திருமந்திரப் பாடலில் நான் என்பதும் நீ என்பதும் நன்கு ஆய்ந்தால் வேறு வேறு இல்லை, இரண்டும் சிவனே என்று பொருள் கூறுகிறார் திருமூலர்.

தன்னிடம் சரணாகதி அடைவோரை இறைவன் கை விடுவதில்லை!

எத்தகைய வினைப் பயன்கள் இருப்பினும் தானே கதி என்று தன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்போரை அவன் கை கொடுத்து மீட்பது நிச்சயம், அது சத்தியம்!

ஓம் நம சிவாய….
ஓம் நமோ நாராயணாய !

லோகா சமஸ்தா சுகினோ
பவந்து ……
……….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: