சிறந்த குருவை அடைதல்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது :

” சிறந்த குருவை அடைதல் ”

தெய்வ அனுக்கிரகத்தால் மனிதனுக்குக் கிடைக்கின்ற முக்கியமானவை மூன்று உள. ஒன்று மனிதப்பிறவி, இரண்டாவது சத்தியத்தை அறிந்து கொள்ளல், அடுத்தது சிறந்த குரு ஒருவா் கிடைப்பது ஆகும். அந்தக் குருவுக்கு குரு, அவருக்குக் குரு என நாம் எண்ணிப் பார்த்தால் இறுதியில் இறைவனே அனைவருக்கும் குரு ஆவான்

எனவே தான் பரம்பொருளாகிய குரு, நமக்கு குருவின் வடிவில் வந்து உபதேசிக்கின்றான். காலத்தால் கட்டுப்படாத ஈசனே அனைவருக்கும் குரு. எனவே குருவின் மீது நாம் வைக்கும் பக்தி இறைவன் மீது வைக்கும் பக்திக்கு ஒப்பாகையால் தெய்வ அனுக்கிரகம் நமக்கு தானாகவே வந்து சேரும்.

குருவை விட மேலானவா் இல்லை. குருவிடம் நாம் பூரண நம்பிக்கை வைக்க வேண்டும். அது உண்மையான நம்பிக்கையாக இருக்க வேண்டும். குருவிடம் இறைவன் காணப்படுகின்றான். குருவின் மீது நாம் வைக்கும் பக்தி நம்மை முத்தி நிலைக்கு இட்டுச் செல்லும்.

நாம் சிவ நிந்தை புரிந்தால் இறைவன் எம்மை மன்னிக்கத் தேவையில்லை. குரு எம்மை மன்னித்து விட்டால் அந்த இறைவன் சினம் தணிந்து விடும். ஆனால் குரு நிந்தை புரிந்த பின்னா் இறைவனிடம் சென்று மன்றாடினாலும் ஏழேழு ஜென்மத்துக்கும் அப்பாவம் நம்மைத் தொடரும்.

குரு பக்தியானது மிகவும் விசேடமானது. நல்ல குரு நாதா் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், நமக்குக் கிடைக்கும் குருவின் மூலம் நாம் இறைபக்தியின் உச்ச நிலையை அடைய வேண்டும். நமது இறை பக்தியினால் இறைவனுக்கோ குருவுக்கோ எவ்வித இலாபமும் இல்லை. நமக்கே அதிக இலாபம்.

நாம் அனைத்திற்கும் ஆசைப்படுகின்றோம். சஞ்சலப்படுகின்றோம். மனதை உறுதியாக வைத்திருக்க முடியாதவா்களாக உள்ளோம். நாம், எப்போதும் துாய்மையாக, ஞானம் நிறைந்த இறைவனை நினைத்தால் அதே நிலையை நாமும் அடையலாம்.

ஒரு குருவை நாம் இந்த நிலையில் வைத்து நோக்கினால் நம் ஆன்மா பிரகாசிக்கும். உண்மையான ஆனந்த நிலை விளங்கும். நம் மனம் பக்குவப்படும். இதற்கு குரு பக்தியும், இறை பக்தியும் நமக்கு அவசியம். இதையே நம் சாத்திரங்கள் கூறுகின்றன.

ஒருவனுக்கு எத்தனை பெருமைகள் இருந்தாலும், தன் குருவின் பாதாரவிந்தங்களைப் பணியாவிட்டால் அதனாற் பயனில்லை.

ஸத் வித்வான் உபஸ்ருப்யதாம்
ப்ரதிதினம் தத்பாதுகா ஸேவ்யதாம்

ப்ரஹ்மைகாசஷரம் அா்த்யதாம்

ச்ருதி சிரோவாக்யம் ஸமாகா்ண்யதாம்

சத்தான, வித்தான குருவை வரிந்து கொள். தினமும் அவருக்கு பாத பூஜை செய், அவரிடமிருந்து உபதேசம், பிரணவ உபதேசம், உபநிடத, மஹா வாக்கிய உபதேசம் எல்லாம் வாங்கிக் கொள்வாயாக என்பதே இதன் பொருளாகும்.

எனவே நாம் குரு பக்தியிற் சிறந்து எல்லாம் வல்ல பரம்பொருளை மகிழ்வித்து, அவன் திருவடி எய்துவோமாக!

சரி, அப்படியென்றால் உண்மைக் குருவாகிய சற்குரு யார்?

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்,

ஆசற்ற சற்குரு ஆவோன்; அறிவுஅற்றுப்

பூசற்கு இரங்குவோன் போதக் குருஅன்றே ….. (திருமந்திரம்)

அறிவைப் பெற வேண்டும் என்கிற விருப்பத்தோடு தன்னை நாடி வருகிற எளியவர்கள் உலகியல் வாழ்வின்மீது கொண்டிருக்கிற பெரும்பற்றை நீக்குகிறவன்; இறைவனை மட்டுமே ஆராய்ந்துகொண்டிருக்காமல் தன்னையும் ஆராய்ந்துகொண்டிருப்பவன்;

அந்த ஆராய்ச்சி முறைமையைத் தன்னை நாடி வருகிறவர்களுக்கும் மிக்க அன்போடு கற்றுத் தருகிறவன்; அவர்களின் அழுக்குகளை இனி மீண்டும் சேர்ந்துவிடாதவாறு முற்றிலுமாக அகற்றுகிறவன்; ஆசு அற்றவன், அதாவது, எதன்மீதும் ஆசை அற்றவன் எவனோ அவனே சற்குரு.

குருவின் விழி கிடைத்தால்
இருள் நீங்கி ஒளி கிடைக்கும் !

அவன் அடி பணிந்தால் – அவன்
அபய கரம் கிடைக்கும் “!!

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..

……… ஸ்ரீ

1 thought on “சிறந்த குருவை அடைதல்”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: