நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரதமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு’பிரம்மோற்சவம்’ என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
மேற்கண்ட நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கொண்டடப்படுகிறது. வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வாராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம்.
- முதல் நாள் மஹேஸ்வரி பாலா
- இரண்டாம் நாள் கௌமாரி குமாரி
- மூன்றாம் நாள் வாராஹி கல்யாணி
- நான்காம் நாள் மஹாலட்சுமி ரோகிணி
- ஐந்தாம் நாள் வைஷ்ணவி சுபத்ரா
- ஆறாம் நாள் இந்திராணி காளிகா
- ஏழாம் நாள் சாமுண்டி சண்டிகா
- எட்டாம் நாள் நரசிம்ஹி தருணி
- ஒன்பதாம் நாள் சரஸ்வதி சுமங்கலி
மேற்கண்ட அட்டவணைப்படி கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் பாராயணம் மற்றும் அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
………ஸ்ரீ