இன்று நாம் தொடர்ந்து பார்க்க இருப்பது ” நாம ஸ்மரனை” ( நாம சங்கீர்த்தனம் ) பகுதி 3.
பகவான் ஆசிர்வதித்த 19 வது அஷ்டபதியினை பார்ப்போம்.
ஜெயதேவர் 19 வது அஷ்டபதி யை எழுதி கொண்டிருந்தார். அப்போது 7 வது சரணத்தில்
” ஸ்மர கரள கண்டனம் மம ஸிரசி மண்டலம்
தேஹி பத பல்லவம் உதாரம் “…. என எழுதினார்.
காதல் என்னும் விஷம் தலைக்கேறி விட்டது. அதனால் உன் சிவந்த மிருதுவான பாதங்களை என் தலையின் மீது வைப்பாயாக’ என்று கண்ணன் ராதையிடம் கேட்பதாக அமைந்துள்ளது. இந்த வரிகளை தான் மரியாதை குறைவாக எழுதியிருப்பதாக நினைத்து எழுதிய அந்த வரிகளை அடித்துவிட்டு யோசித்து மாற்றி எழுதலாம் என்ற எண்ணத்தில் சுவடிகளை கீழே வைத்துவிட்டு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு நீராடச் சென்றார்.
அவர் சென்றதும் கண்ணனே ஜெயதேவர் உருவில் அங்கு வந்து சுவடிகளில் ஜெயதேவர் எழுதி அடித்து நீக்கிய அதே வரிகளை மீண்டும் எழுதி பிறகு ஜெயதேவரின் மனைவியிடம் தான் ஆற்றங்கரைக்குச் நீராடச் செல்வதாகக் கூறி புறப்பட்டார்.
நீராடிவிட்டு திரும்பிவந்த ஜெயதேவர் தன் பூஜைகளை முடித்துவிட்டு அந்த சுவடியினை எடுத்து புதிய வரிகளை எழுத முற்பட அவர் அடித்து வைத்த அந்த வரிகள் மீண்டும் எழுதப்பட்டு இருந்ததை கண்டு மனைவி பத்மாவதியை அழைத்து யார் இதை திருத்தியது என கேட்க, பத்மாவதியோ , நீராட சென்ற நீங்கள்தான் திரும்பி வந்து இதை எழுதிவிட்டு நீராட செல்வதாக கூறி சென்றதாக கூறினார். அதிர்ச்சிக்குள்ளான அவர் வந்தது கண்ணன் என்பதை புரிந்து கொண்டார். தன் மனைவிக்கு கண்ணனை நேரில் கண்ட பாக்கியம் கிடைத்ததை கண்டு பூரித்தார். அதன் விளைவாக 8 வது சரணத்தில் மனைவிக்கு முக்கியம் கொடுத்து ஜயது பத்மாவதிரமண ஜெயதேவ கவி
என்று முடிப்பார். அப்படி கண்ணனே சாட்சியாக வந்து இந்த அஷ்டபதி எழுதப்பட்டது.
அவர் எழுதிய 22 வது அஷ்டபதியும் முக்கியமான ஒன்று. இது கல்யாண அஷ்டபதியாகும். இந்த அஷ்டபதிகளை படாமல் கல்யாண உட்சவ பந்ததி நடைபெறாது.
நாம மகிமை :
“குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா” என்று துவங்கும் நாமாவளி முடிவில் “கீதையை தான் மீண்டும் இங்கு கூறமாட்டானா அதை கேட்டு நாமும் நல்லவனாய் மாறமாட்டோமா ” என அவன் மகிமையை கூறுகிறது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய்தமையால் எய்ப்பு என்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
ஆதிமூலமே என்றழைத்த யானைக்கு நீ அருள் செய்ததால்
என் கடைசி காலத்தில் நோய்வாய் பட்டு மரண விளிம்பில் இருக்கும்போது நான் உனை நினைக்கவே மாட்டேன். அதனால் அன்று சொல்ல வேண்டிய உன் நாமத்தை இப்போதே சொல்லிவைக்கிறேன் எனக்கு நற்கதி அருள்வாயாக !. என வேண்டுவதாக உள்ளது.
” தாண்டி விடலாம் கடல் தாண்டிவிடலாம்
சம்சார சாகர கடலை தாண்டிவிடலாம்.
ராமன் நல்ல ஓடக்காரன் ஓடி பிடியுங்கள்.( கிருஷ்ணன் நல்ல ஓடக்காரன் ) அவன் பேரை சொன்னால் காசு கூட வாங்கவே மாட்டான் ”
என்ற நாமாவளியில் நாமத்தை சொன்னாலே சம்சார கடலை தாண்ட முடியும் என்ற வலிமை தெரியும்.
அடுத்து மிக எளிமையான நாமாவளி :
ராம ராம என்றொரு நாமம் சொல்லடா…. பாமரனே உனகத்தில் பாரம் என்னடா
காலன் அவன் பொல்லாதவன் விட மாட்டான் நான் ராம ( கிருஷ்ண) பக்தன் என்று சொன்னால் தொடமாட்டான்.
காலனையும் வெல்ல கூடிய வல்லமை படைத்தது இந்த நாமங்கள்.
நாமசங்கீர்த்தனத்தின் பெருமையினையும் மகிமையினையும் சொல்ல நாட்களும் நேரமும் போதாது.
கலியுகத்தில் இறைவனை அடையும் சுலப வழியான நாமத்தை சொல்லி அவன் அருள் பெற்று வாழ்வில் வளமுடன் வாழ்வோமாக !. இத்துடன் இந்த பகுதி முடிகிறது.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து …. ….
……ஸ்ரீ