நாயன்மார்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :

” நாயன்மார்கள் ”

நாயன்மார்கள் சைவ அடியார்கள் , சிவனடியார்கள் என அழைக்கப்படுவர்.

நாயன்மார்களில் பெரும்பாலும் புலமை படைத்தவர்கள் கிடையாது. சிவ பெருமான் மீது அதீத பக்தி கொண்டவர்கள். அவனது திருவிளையாடல்களுக்கு ஆளானவர்கள்.

இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது , சாதி, இன பாகுபாடு இல்லாமல் யார்வேண்டுமானாலும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதே இவர்கள் கற்ற , மற்றும் கற்பிக்கும் பாடமாகும்.

அப்பர், சம்பந்தர் சுந்தரர், மற்றும் மாணிக்க வாசகர் சைவ சமய குரவர் என அழைக்கப்படுவர்.

நாயன் மார்கள் எத்தனை பேர் ?

சிவபெருமான் எடுத்துகொடுக்க சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய நாயன்மார்கள் மொத்தம் 60 பேர் மட்டுமே.

சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு மணிக்கு நிமிடம் 60 நிமிடத்திற்கு வினாடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.

சுந்தரமூர்த்தி நாயனாருக்குசிவபெருமான் அடி
எடுத்துக்கொடுக்க, சுந்தரர் பாடிய நாயன்மார்கள் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த அறுபது நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா சடையனார், அம்மா இசைஞானியார் ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார். அன்று முதல் 63 நாயன்மார்கள் ஆயினர்.

பரதவர், அந்தணர், வணிகர்,வேளாளர், இடையர், ஆதி சைவர், வேளிர், சான்றார், காடவர், செங்குந்தர், வேடர், செக்கார்,களப்பிரர், ஆதி சைவர், மாமாத்திரர், ஏகாலியர், புலையர், குயவர், பாணர், முனையர், அரசர், சாலியர்,குறும்பர் என்று பல்வேறு இனத்தவர்கள் இப்படி அறுபத்து மூன்று நாயன்மார்களாகப் போற்றப்படுகிறார்கள்.

நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன.

குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள்,

சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள்,

அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.

பெண் நாயன்மார்கள் : காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, மற்றும்
இசைஞானியார் . மொத்தம் மூவர்.

ஒரு சில நாயன்மார்களின் பக்தியினை மட்டும் இங்கு பார்ப்போம்:

திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு திருவோடு கொடுத்து அறம் புரிந்த குயவர்.

இளையான்குடமாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.

மெய்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்பொருளாகக் கொண்டவர்.

சாக்கிய நாயனார்: நாள்தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தம் பக்தியை வெளிப்படுத்திய வேளாளர்

காரைக்காலம்மையார்: இறைவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றவர். இறைவனால் அம்மையே என அழைக்கப்பட்டவர்

சிறுத்தொண்ட நாயனார்: இல்லை எனாமல் பிள்ளைக் கறி சமைத்துச் சிவனடியாரை வழிபட்டவர்

திருஞானசம்பந்தர்: இறைவி தந்த ஞானப்பால் உண்டவர். தேவாரம் பாடிச் சைவமும், தமிழும் தழைக்கச் செய்த மறையவர்

பூசலார் நாயனார்: மனக்கோயில் கட்டிச் சிவபெருமானை பிரதிட்டை செய்த மறையவர்.

கண்ணப்பர்: சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.

திருநாவுக்கரசு சுவாமிகள்: சைவமும், தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய இருளை நீக்கிய வேளாளர்………….. இப்படியாக
நாயன்மார்கள் தங்கள் சிவ தொண்டுகள் மூலம் சிவ பக்தியை காட்டினர். 63 பேரும் வேவ்வேறு விதமான பக்தியை செய்துள்ளனர்.

சிவனடியார்களும், சிவதொண்டு புரிந்தவர்களும் எந்த சாதியையோ மதத்தையோ பார்க்கவில்லை. இந்த 63 நாயன்மார்கள் 9 தொகை அடியார்களும் பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்கள்.
நிலையில்லாத இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி ஓடும் நாம், நிலையான வீடுபேற்றையும் இன்பத்தையும் பெற சிவதொண்டு புரிவோம். சிவனருள் பெறுவோம்.

நீரினை சிரசில் கொண்டு
நெருப்பினை கையில் கொண்டு
பாரினில் பக்தர்தம்மை
பாசமுடனே காக்கும்

ஈசனே சிவனே போற்றி!
இறைவா உன் திருத்தாள்போற்றி!
வாசமாய் வாழ்க்கை மாறிட
வணங்குவோம் சிவனின் பாதம் !!

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……
……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: