ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : பலன் தரும் நாமாக்கள்:
ஸ்ரீலலிதா தேவி அகில உலகங்களுக்கும் தாய். நாம் வாழ்க்கையில் படும் துயரங்கள் எல்லாம் விலக சிறந்த வழிபாடு அம்பிகை வழிபாடு தான். அதற்குச் சுலபமான வழி ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்வதாகும்.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முழுவதும் படிக்க முடியாதவர்களுக்கு அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ற நாமக்களை கொடுத்துள்ளோம். அதை தினமும் சொல்லிவர கஷ்டங்கள் நீங்கி நல்லதே நடக்கும்.
பேய், பிசாசு, பில்லி, சூனியம் உடல் உபாதைகள் விலகி நல்ல ஆரோக்கியம் பெறவும் , விஷ தோஷங்களிலிருந்து நிவாரணம், திருமணம், அன்யோன்ய தாம்பத்ய வாழ்க்கை, தன, தான்ய, ராஜ்ய வசியம் போன்ற பலப்பல காரியங்கள் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணத்தால்’’ கைகூடி வருவது அனுபவ பூர்வமான உண்மையாகும்.
தினமும் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்தால் விசேஷ பலன்களைப் பெறலாம். இதை காலை, மாலை பாராயணம், செய்யலாம். தக்க குரு மூலம் உபதேசம் பெற்றுச் செய்ய வேண்டும். குரு கிடைக்காவிட்டால் ‘ஸ்ரீதட்சிணாமூர்த்தியை’ குருவென பாவித்து பிழையின்றி பாராயணம் செய்ய வேண்டுமென்பது சான்றோர் கருத்து.
இதன் ஒவ்வொரு நாமாக்களும் அதிசயமான அரிய பல அனுகூல பலன்களை தர வல்ல சக்தி வாய்ந்த மந்திரங்களாகும். எனினும் முழுமையாக ‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’ செய்ய முடியாதவர்கள் அவரவருக்கு உகந்த நாமாவைத் தேர்ந்தெடுத்து குறைந்தது 108 முறையாவது தினசரி பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூட உதவும்.
தன் விருப்பத்திற்கேற்ற கணவனை அடைய
நாமா : ஓம் சுவாதீன வல்லபாயை நம:
பொருள் : ஓம் தன் வயப்பட்ட அன்புமிக்க நாயகனையுடையவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : தேன் கலந்த பால்
மூவகை சித்திகளைப் பெற (இச்சா, க்ரியா, ஞான)
நாமா : ஓம் மகாசக்தியை நம:
பொருள் : ஓம் பெரும் உற்சவமெனக் கொண்டாடும் வழிபாட்டிற் கிசைபவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : சர்க்கரை பொங்கல், நெய் கலந்த பலவித பட்சணங்கள்.
தெய்வீக அன்புடன் சகல சவுபாக்கியங்களும் பெற
நாமா : ஓம் பக்த சவுபாக்கிய தாயின்யை நம:
பொருள் : பக்தர்களுக்கு சவுபாக்கியத்தை வழங்கும் தேவிக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : தேங்காய், திராட்சை, கல்கண்டு.
செல்வம் பெற
நாமா : ஓம் ஸ்ரீகர்யை நம:
பொருள் : செல்வத்தை தருபவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : குங்குமப்பூ, சர்க்கரை கலந்த பால்.
விருப்பத்திற்கேற்ற பொருள் கிடைக்க
நாமா : ஓம் புருஷார்த்தப்ரதாயை நம:
பொருள் : நான்குவித நலன்களை அருள்பவளுக்கு நமஸ்காரம். (அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கு வித புருஷார்த்தங்களை அளிப்பவள், இச்சைகளைப் பூர்த்தி செய்பவள்).
நைவேத்யம் : வெல்லம், தேங்காய், தேன், பருப்பு.
ஏற்ற காரியம் தடங்கலில்லாமல் நிறைவேற
நாமா : ஓம் விக்ந நாசின்யை நம:
பொருள் : இடையூறுகளை நீக்குபவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : வாழைப்பழம், தாம்பூலம்.
வியாதிகள் விலகவும், வராமல் தடுக்கவும்
நாமா : ஓம் சர்வ வியாதிப்ரசமந்யை நம:
பொருள் : எல்லா நோய்களையும் அடக்குபவளுக்கு நமஸ்காரம்
நைவேத்யம் : இளநீர், பழம், பால்.
கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாக
நாமா : ஓம் தயாமூர்த்தியை நம:
பொருள் : தயை வடிவானவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : திராட்சை, முந்திரி, கல்கண்டு.
நிலம், வீடு, மனை வாங்க கட்ட, தோஷங்கள் விலகி, வீட்டில் சுகமும் ஆரோக்கியமும் நிலவ
நாமா : ஓம் சாம்ராஜ்ய தாயின்யை நம:
பொருள் : சாம்ராஜ்யத்தை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : தேங்காய், சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பதார்த்தம், தாம்பூலம்.
விருப்பங்கள் நிறைவேற
நாமா : ஓம் சர்வ லோக வசங்கர்யை நம :
பொருள் : உலகமனைத்தையும் தன்னுள் வசப்படுத்தி ஆள்பவளுக்கு நமஸ்காரம். (இந்நாமாவைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும்.
நைவேத்யம் : சர்க்கரை பொங்கல், நெய் கலந்த ஹரவிஸ்சு (வடிக்க)
வழக்குகள் இல்லாமல் சுமுகமாக இருக்க
நாமா : ஓம் சாமரஸ்ய பராயணாயை நம:
பொருள் : சமஸத்தை நிலையாகக் கொண்டவளுக்கு நமஸ்காரம்
நைவேத்யம் : சித்திரான்னம், தேன் கலந்த பசும்பால்.
சுக பிரசவம் உண்டாக
நாமா : ஓம் பிராண தாத்தர்யை நம:
பொருள் : பிராண சக்தியை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : பஞ்சாமிர்தம்
அறுவகைச் செல்வங்கள் பெருக
நாமா : ஓம் தன தான்ய விவர்த்தின்யை நம:
பொருள் : செல்வத்தையும் தான்யத்தையும் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : ஆறுவகை பட்சணங்கள் (அறுசுவை அடங்கியவை)
சுவாசம் சம்பந்தமான ரோகங்கள் குணமடைய
நாமா : ஓம் நாதரூபிண்யை நம:
பொருள் : நாத வடிவானவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : தேன் கலந்த பால், கருணைக் கிழங்கினால் செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தம்.
தூய்மையான மனப்பக்குவம் பெற
நாமா : ஓம் சுத்த மானசாயை நம:
பொருள் : தூய மனமுள்ளவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : இளநீர், தேங்காய்.
தம்பதிகளிடையே உறவு நிலவ, தோஷங்கள் விலக
நாமா : ஓம் சிவ சிக்தியைக்ய ரூபிண்யை நம:
பொருள் : சிவனும் சக்தியும் ஒன்றெனக் காட்சி தருபவளுக்கு நமஸ்காரம்.
நைவேத்யம் : இனிப்பு பதார்த்தங்கள், பழங்கள், தாம்பூலம்.
லலிதா சகஸ்ர நாமத்திற்கு முதல் முழு உரை எழுதியவர் ஸ்ரீபாஸ்கர ராயர்.
இவர் உரையையும், மற்றும் பிரயோகங்களையுமே பெரும்பகுதி இன்று உபாசகர்கள் பின்பற்றி வருகின்றனர்.
தமிழில் இதற்கு சொல் விளக்கம் செய்தவர், ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ