ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி வழிபாடு என்பது காலம் காலமாய் நடைமுறையில் உள்ள பழக்கமாகும்.
பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர்.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பூமி சூரியனை சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது.
ஆன்மீகரீதியாக பார்க்கும்போது தட்சனின் 27 மகள்களை சந்திரன் திருமணம் செய்திருந்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டும் பாசத்துடன் நடந்து கொண்டு ஏனைய மனைவியரைப் புறக்கணித்தார்.
இதனால் வருந்தமடைந்த தட்சனின் மகள்கள் தந்தையிடம் தங்களது கணவரின் செயல்பாடு குறித்து முறையிட்டனர். தட்சன் சந்திரனிடம் எல்லா மனைவியரிடமும் அன்பு செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சந்திரன் தட்சன் சொன்னதை ஏற்காமல் ரோகிணியிடம் மட்டும் அன்பு செலுத்தினார்.
இதனால் கோபம் அடைந்த தட்சன் சந்திரனின் ஒளி மங்கும்படி ஆணையிட்டார். ஒளியிழந்த சந்திரன் இறைவனான சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனுக்கு ஒளியினைக் கொடுத்து தேய்து வளரும்படி வரம் அருளினார்.
சிவபெருமானின் வரத்தின்படி சந்திரன் பதினைந்த நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும், பதினைந்து நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும் காட்சியளிக்கிறார்.
மாத பௌர்ணமி வழிபாட்டு முறைகள்:
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி:
(சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைப்பதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் இந்த பௌர்ணமி மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
வைகாசி பவுர்ணமி:
(விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிக சிறப்பு.
வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.
ஆனிப் பவுர்ணமி :
(மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிக சிறப்பு.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும்.
ஆடிப் பவுர்ணமி:
(பூராடம்/உத்ராடம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிக சிறப்பு.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.
ஆவணிப் பவுர்ணமி:
(அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.
புரட்டாசி பவுர்ணமி:
(பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.
இன்றைய தினத்தில் அம்மைஅப்பர் வழிபாடு, கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.
ஐப்பசி பவுர்ணமி:
(அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகம். கங்கை கொண்ட சோழபுரத்தில் மிக சிறப்பு.
இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
கார்த்திகைப் பவுர்ணமி:
(கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிக சிறப்பு.
ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
மார்கழிப் பவுர்ணமி:
(திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிக சிறப்பு.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.
தைப் பவுர்ணமி:
(பூசம்) மிகு சிறப்புடைய பூச நட்சத்திரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிக சிறப்பு.
இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.
மாசிப் பவுர்ணமி:
(மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிக சிறப்பு.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.
பங்குனிப் பவுர்ணமி:
(உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.
எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.
மேலும் பௌர்ணமி அன்று அம்பிகை வழிபாடுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சத்யநாராயண பூஜை :
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும்.
பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது.
சத்யநாராயணன் பூஜை செய்வதன் மூலம் புத்திர பாக்கியம், பட்டம், பதவி, புகழ், செல்வம், அதிகாரம், அந்தஸ்து போன்ற அனைத்து வித நன்மைகளும் பயக்கும். பல அருள் நமக்கு கிடைக்கும்.
கிரிவலம்
பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.
கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
நாமும் வாழ்வினை வளமாக்கும் பௌர்ணமியில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை பெறுவோம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……….ஸ்ரீ