மாலனும் வேலனும்

மாமன் மாலவனுக்கும், மருமகன் வேலவனுக்கும் உன்னதமான ஒற்றுமைகள் பல இருக்கின்றன.

திருமால் பராசக்தியின் சகோதரன் என்ற உறவில், உமையின் பாலன் முருகனுக்குத் தாய்மாமன். அதோடு திருமால் – திருமகள் திருவருளால் அவதரித்த வள்ளியைக் கந்தர்வ மணம் புரிந்து கொண்டதால், திருமாலுக்கு முருகப்பெருமான் மதிப்புமிகு மருமகனும் ஆவார்.

ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் நமது பார்வையில், வள்ளி- தெய்வானை சூழ நிற்கும் கந்தவேலும், ஸ்ரீதேவி- பூதேவி சமேத கடல்நிறக் கடவுளும் ஒன்று போலத் தோன்றுவதை அனைவரும் உணர்ந்திருக்கலாம்.

துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது போல அரக்கர்களை அழிக்கவும், அன்பர் களைக் காக்கவும் வலக் கரத்தில் சக்கரப்படையைச் சுழற்றியபடியே நிற்கும் மாமனைப் போலவே, பகை வெல்லவும் பக்தர்களுக்கு அருளவும் வலது கரத்தில் வேலாயுதம் தாங்கியபடி மருமகன் நிற்கிறார்.

முக்கண்ணனைப் போல ரிஷபமோ, அம்பிகைபோல சிம்மமோ வாகனம் இல்லாமல், கருட வாகனத்தில் ஏறி வட்டமிட்டு வருபவர் கேசவன். அதே போல மயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்கள் குறைதீர்க்க பறந்து வருபவர் குமரன். இருவருக்கும் பறவைகளே வாகனம். இரண்டு பறவைகளும் பாம்புக்குப் பகைவர்கள்.

மயிலிறகைத் தலையில் சூடியிருக்கும் சின்னக் கண்ணன், கருமைநிற அழகன். மயிலையே வாகனமாகக் கொண்ட குழந்தை முருகனோ, மனங்கவரும் பேரழகன். கன்னத்தில் முத்தமிட்டு அள்ளி அணைக்கத் தோன்றும் இருவரின் மழலை உருவங்களும் கண்கொள்ளக்காட்சிகள்.

தண்ணந்துழாய் மலர் மாலை மாலவனுக்கு பிரியம் என்றால், தண்கடம்ப மலர் மாலை வேலவனுக்கு விருப்பமானது.

தேவசேனாபதி ஸ்கந்தனே போர்க்களத்தில் வல்லவன்’ என்று கீதையில் கிருஷ்ணன் சான்று பகர்கிறான். கீதை என்றவுடன் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. அர்ச்சுனனுக்கு உபதேசித்தவன் பரந்தாமன். தந்தை பரமசிவனுக்கே தத்துவம் மொழிந்தவன் முருகப்பெருமான். எனவே ஞானாசிரியர் தகுதியில் மாமனையும் மிஞ்சிவிட்டான், மருமகன்.

முருகன் கோவில்களில் திருமால்

நில உலகில் உள்ள திருக்கோவில்களிலும் கூட, வேலவன் மாலவனைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறான்.

முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றில், தெய்வானையை திருமணம் புரிந்துகொள்ளும் கோலத்தில் அருளும் முருகனின் அருகே, பவளக் கனிவாய்ப் பெருமாளாக மாலவன் மேற்கு நோக்கி நின்று ஆசி வழங்கு கிறார்.

இரண்டாம் படை வீடான அலைகள் தவழும் திருச்செந்தூரில் சூராதி அவுணர்களை அழித்த வெற்றிவேல் பெருமான், செந்திலாண்டவனாகத் தரிசனம் தருகிறார். அந்த ஆலயத்தின் திருச்சுற்றில் செந்தில் கோவிந்தனாக, பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார். அவர் அருகில் அரங்கனும், லட்சுமியும் காட்சி தருகின்றனர்.

ஆறாம் படை வீடான பழமுதிர்ச் சோலை எங்கே இருக்கிறது?. திருமால் கள்ளழகராக மலை அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்க, அந்த மலை மீது உள்ள பழமுதிர்ச் சோலையில்தான், அவ்வைக்கு கனி உதிர்த்து தந்த ஆறுமுகம் எழுந்தருளியிருக்கிறான்.

மருமகனைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நேரில் கண்டதில்லை. ஆனால் இத்தலப் பெருமாள், மருமகன் முருகனை தன் தலை தாண்டி உயர்ந்திருக்கும் மலை மீது தூக்கி வைத்திருப்பது என்பது கற்பனைக்கு எட்டாத தோற்றம்.

சூரனை வதம் செய்வதற்காக அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலன் வீற்றிருக்கும் தலம் சிக்கல். இந்த ஆலயத்தில் கோல வாமனப் பெருமாள் காட்சி தருகிறார்.

இப்படி சரவணப் பெருமான் உறையும் திருக் கோவில்கள் மட்டுமல்ல, கந்தனைப் போற்றும் காவியங்களிலும் காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவுக்குப் புகழ்மாலை சூட்டப்பட்டுள்ளது.

எல்லாத் திருக்கோவில்களிலும் வேல் ஏந்தி நிற்கும் முருகப்பெருமான், ஆவூர்ப் பசுபதீசுரம், திருச்சாய்க்காடு, திருக்கொள்ளிக்காடு, திருவையாறு போன்ற தேவாரப்பாடல் கண்ட திருத்தலங்களில் வில் ஏந்தும் பெருமானாக நிற்கிறார். எல்லாவற்றையும் விட மாமனைப் போல சங்கு சக்கரம் ஏந்தி, அரிசில்கரைப் புதூர் என்ற ஆலயத்தில் காட்சி தருகிறார், முருகக்கடவுள். மாலவன் போலவே மருமகனும் என்பதாகக் காட்டுகிறது

மகாபலி மன்னனிடம் மூன்று அடி களைக் கேட்டு உலகளந்து, இப்பெரிய அண்டத்தின் உச்சியைத் தொடும் அளவுக்கு திரிவிக்கிரக அவதாரம் எடுத்து கால் வைத்த மகாவிஷ்ணுவின் மருமகனாகிய முருகனின் திருவடி, தேவர்கள் தலைமீது பட்டது’ என்று மாமன்- மருமகனின் திருவடிப் பெருமைகள் சொல்லப்படுகின்றன

அழகில், ஆற்றலில், அருளில், மாமனும் மருமகனும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்கள் என்பதே உண்மை.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா……

……… ஶ்ரீ

1 thought on “மாலனும் வேலனும்”

  1. Excellent narration of connection between mama and marumagan. Thanks for various facts correlated very well. We know but we never remember the correlations. Pl keepty writing.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: