சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேசுவரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வரத் தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் இலிங்கம் அமைத்தாள். அந்த இலிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி” என்ற திருநாமம் அமைந்தது.
இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.
கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும்.
அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.
புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். “மகாளயம்” என்றால் “கூட்டமாக பூமிக்கு வருதல்” எனப்பொருள்.
இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்யச் சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த இலிங்கத்திற்கு, “விஸ்வநாதர்” என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது.
ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த இலிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய இராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு பூஜை நடக்கிறது.
கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, இராமநாதரைத் தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு இலிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ