ருத்ராட்ச மகிமை

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது :

” ருத்ராட்சம் “

ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் தான் அவர்களுக்கு ருத்ராட்சமே கிடைக்கும். ருத்ராட்சம் அணிவதற்கு பயப்பட வேண்டாம் யார் வேண்டும் என்றாலும் ஜாதி மதம் பேதம் இல்லாமல் அணிந்து கொள்ளலாம்.

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார்.

அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.

அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.

அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார்.

அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராஷமரமாக உண்டானது. அந்த ருத்ராஷ மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார்.

அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முகம் ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

ஒரு முகம் முதல் 21 முகம் வரை கொண்ட இருப்பத்தொன்று வகை ருத்திராட்சங்கள் உண்டு.

ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும், கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும், மேல் கையில் பதினாறும், மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம்.

சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும்.

சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது

ஒரு முகம் அதாவது ஒரே கோடுள்ள ருத்ராக்ஷம் – சிவாம்சம்,
இரு முகம் – சக்தி அம்சம்
மூன்று முகம் – பிரம்ம, விஷ்ணு, சிவ – திரிமூர்த்தி அம்சம்
நான்கு முகம் – பிரம்ம அம்சம்
ஐந்து முகம் – சதாசிவ அம்சம் (ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதம்)
ஆறு முகம் – சண்முக வடிவம்
ஏழு முகம் – அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் – கணபதி வடிவம்
ஒன்பது முகம் – பைரவர் வடிவம்
பத்து முகம் – திருமால் வடிவம்
11 முகம் – ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் – துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் – முருகன் வடிவம்
14 முகம் – சிவ வடிவம்

புண்ய நதிகளில் நீராடும் போதும், தானங்கள் கொடுக்கும்போதும், சிவமந்திரங்களை ஜபிக்கும் போதும், ஹோம பூஜைகளின் போதும், தெய்வங்களை ஆராதனை செய்யும்போதும் மிக நிச்சயமாக ருத்ராக்ஷம் அணிந்துகொள்ள வேண்டும் என ஜாபால உபநிஷத் உரைப்பதாக புருஷார்த்த ப்ரபோதம் கூறுகின்றது (ஸ்நானே தான ஜபே ஹோமே வைச்வதேவே ஸுரார்ச்சநே).

ஒன்றுக்கு மேற்பட்ட ருத்ராக்ஷங்களை மாலையாகக் கோர்த்து அணிந்து கொண்டால், அதன் புனிதம் காக்க வேண்டி, தெய்வ பூஜை சார்ந்த நேரங்களில் மட்டும் அணிந்து கொள்ள வேண்டும்.

ருத்ராக்ஷம் – மருத்துவ குணம் வாய்ந்தது. மஞ்சள் கிழங்கு – மங்கலமானதும், அதே போல் கிருமி நாசினியாகவும் பயன்படுகின்றதோ அது போல, ருத்ராக்ஷம் சிவாம்சம் கொண்டதாகவும், ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை நீக்கக் கூடியது எனவும் நம்பப்படுகின்றது.

ஆக மொத்தத்தில் ருத்ராக்ஷம் – சிவ அம்சம் கொண்டது. மிகப் புனிதம் வாய்ந்தது. சிவ நாம ஜபம் செய்ய மிக மிக உகந்தது.

ருத்ராக்ஷம் அணிவோம் ! சிவ பலனை அடைவோம்

ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய !!

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……

…….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: