பக்தி வழி:
ஆன்மீகத்தில் பொதுவாக கூறப்படும் வழிகள் மொத்தம் நான்கு.
அவை,
- ஞான மார்க்கம்.
- கர்ம மார்க்கம்.
- கிரியா மார்க்கம்.
- பக்தி மார்க்கம்.
நாம் அனைவரும் மனிதர்கள் என்ற போதிலும் நம்மில் சிலருக்கு கேள்வி அறிவு புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும் அப்படிப்பட்டவர்களுக்கு ஞானமார்க்கம் உகந்தது.
சிலருக்கு உடல் உழைப்பு மேலோங்கியிருக்கும் அத்தகைய நபர்களுக்கு கர்ம மார்க்கம் எளிதாக இருக்கும்.
இன்னும் சிலருக்கு உடலில் சக்தி அளவு அதிகமாக இருக்கும் அத்தகையவருக்கு கிரியா யோக மார்க்கம் சரியாக இருக்கும்.
கடைசியாக உணர்ச்சி அதிகம் உள்ளவர்களுக்கும் பக்தி மார்க்கம் எளிதாக இருக்கும்.
பக்தி என்றால் என்ன?
பக்தி என்றால் இதுதான் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது.
பக்தியில் உள்ள மிகப்பெரிய சௌகரியம் எது என்றால் உங்கள் மனதுக்கு உகந்தவாறு பக்தி செலுத்தலாம்.
63 நாயன்மார்கள் ஆகட்டும் அல்லது பன்னிரண்டு ஆழ்வார்கள் ஆகட்டும் ஒவ்வொருவருடைய பக்தியும் ஒன்றுபோல் இருப்பது இல்லை வித்தியாசமாக இருக்கும்.
ஒருவர் செய்தது போல் மற்றொருவர் செய்ததில்லை.
கண்ணப்ப நாயன்மார்.
கண்ணப்ப நாயனார் போல் வரலாற்றில் இது வரை முன்னர் யாரும் தங்களுடைய கண்களை கடவுளுடைய பக்திக்காக அவர் செய்தது போல செய்ததில்லை. அவர் காலத்துக்குப் பின்னால் இது நாள் வரை அவரை போல யாரும் செயல் செய்ததில்லை.
பூசலார் நாயன்மார்.
மனதாலே தான் விரும்பிய இறைவனுக்காக கோவில் கட்டி சிவபெருமானுடைய அன்புக்கு பாத்திரமானவர்.
பூசலார் அவர்களைப் போல இதுவரையில் வரலாற்றில் மனதிலேயே கோவில்கட்டி பக்தி செய்தவர் எவருமில்லை அதேபோல பூசலார் அவர்கள் காலத்திற்குப் பின்பும் இந்த நாள் வரை மனதால் கோவில் கட்டி இறைவனுக்கு பாத்திரமானவர் நான் அறிந்த எவரும் இல்லை.
நாயன்மார்கள் ஆகட்டும் அல்லது ஆழ்வார்கள் ஆகட்டும் ஒவ்வொருவருடைய பக்தியும் மிகவும் வித்தியாசமானது . அவர்களின் பக்தியை அவர்கள் வணங்கிய இறைவனே அங்கீகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள்.
காதலும் ஒரு வகை பக்தி என்று கொள்ளப்படுகிறது அவ்வகையில் ஆண்டாள் சிறுவயதில் இருந்து இறைவனையே காதலித்து மணம் புரிய விரும்பினார்கள்.
ஆண்டாளுடைய காதல் பக்தியை அந்தக் கடவுளும் ஏற்றுக்கொண்டு ஸ்ரீரங்கத்து பெருமாளுடன் ஆண்டாள் இரண்டறக் கலந்ததாக வரலாற்றுச் செய்தி உள்ளது.
பக்த மீராபாய்.
தமிழ்நாட்டில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியாரை போலவே மீராபாய் அவர்களும் கடவுளின் மீது காதலாகி கசிந்துருகி அவர் வாழ்க்கையின் கடைசியில் துவாரகையில் உள்ள கிருஷ்ணருடன் இரண்டறக் கலந்தார் என்பது வரலாற்று செய்தி.
நீங்கள் கேட்கலாம் மீராவும் ஆண்டாளும் காதல் என்ற வகையில் ஒரே போல தானே பக்தி செலுத்தினார்கள் என்று.
ஆனால் உற்று நோக்கினால் ஆண்டாள் நாச்சியார் திருமணம் ஆகாமலேயே இறைவன் மீது காதல் பக்தி செலுத்தியவர்கள் ஆனால் மீராவோ ஏற்கனவே திருமணமாகி பின்னர் இறைவன் மீது காதல் பக்தி செலுத்தியவர்கள் என்ற வேறுபாடு புரியும்.
நம் நாட்டில் இப்படி பல பெண்கள் இறைவனை காதலனாக வரித்துக்கொண்டு காதல் பக்தி செலுத்தியுள்ளார்கள் அவர்களுடைய கதைகளில் சிறுசிறு வேறுபாடுகள் இருக்கும்.
நடனகோபால நாயகி சுவாமிகள்.
இதுவரை நாம் சில உதாரணங்களைப் பார்த்தோம் அதில் பெண்ணாக பிறந்து உள்ள நபர்கள் இறைவனை நாயகனாக பாவித்து காதல் பக்தி செய்தனர்.
ஆனால் நடன கோபால நாயகி சுவாமிகள் பிறப்பால் ஆண் மகன். தன்னை நாயகியாக பாவனை செய்து கடவுளை நாயகனாக பாவித்து காதல் பக்தி செய்தவர்.
சைவ சமயத்தில் நால்வர் என்று போற்றப்படும் சமய குரவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இறைவன்பால் பக்தி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருஞானசம்பந்த மூர்த்தி.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவர்களின் பக்தி பாவம் என்பது தன்னை பிள்ளையாகவும் இறைவனை தந்தையாகவும் பாவித்து பக்தி செலுத்திய வகை.
திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் நாயனார் அவர்களின் பக்தி பாவம் என்பது தன்னை ஆண்டவனின் அடிமையாகவும் இறைவனை முதலாளியாகவும் பாவித்து பக்தி செலுத்திய வகை.
சுந்தரமூர்த்தி நாயனார்.
சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் பக்தி பாவம் என்பது தன்னை ஆண்டவனின் நண்பனாக பாவித்து பக்தி செலுத்திய வகை.
சிவபெருமான் சுந்தரரை தன் நண்பராக ஏற்றுக் கொண்டு நண்பனின் காதலுக்கு தூது சென்றார் என்பது வரலாற்றுச் செய்தி.
மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனிடத்தில் குரு சிஷ்ய பாவனையில் இறைவனை குருவாக பாவித்துக் கொண்டு தன்னை சீடராக பாவித்து பக்தி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தியில் பிரதானமானது திடசித்தம்.
உதாரணமாக மீராபாய் அவர்கள் வாழ்ந்த காலம் என்பது கிருஷ்ணர் காலத்தில் இல்லை இருந்த போதும் மன உறுதியுடன் கிருஷ்ணரை காதலித்து கிருஷ்ணருடன் இரண்டறக் கலந்தார்.
பல பெற்றோர்கள் அவர்களுடைய “தான்” என்ற தன்மையை மிகவும் குறைத்துக் கொண்டு அவரது பிள்ளைகளுக்காக அவர்களுடைய தன்மையை விட்டுக் கொடுக்கிறார்கள்.
பக்தி செலுத்திய பக்தர்கள் பெரும்பாலும் “தான்” என்ற தன்மையை முழுமையாக குறைத்து விட்டு, அந்த இடத்தில் அவர்கள் பாவித்த பாவமுடன் அல்லது ஒரு வகையில் இறைவனை முழுமையாக நிரப்புகிறார்கள்.
நமக்கு இஷ்ட தெய்வத்தை எந்த நேரமும் இடைவிடாமல் நினைத்து அன்பு செலுத்துவது அல்லது காதல் செலுத்துவது பக்தி எனப்படும்.
இது தான் பக்தி வழி
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ