வரம் தருவாய் வர லக்ஷ்மி

ஆன்மீக சாரலில் நாம் காணப் போகும் கவிதை

    வரம்  தருவாய்  வரலக்ஷ்மி
   
பாற்கடல் கடைந்துதித்த லக்ஷ்மியே, எங்கள்
வங்கக்கடல் மடியிலமைந்த அஷ்டலக்ஷ்மியே

பொங்குமனங் கொண்டு வருவாய்த் தாயே
தங்க எங்கள் அகமதனில் வருவாய் நீயே!

ஆதி சந்தான வித்யா தன லக்ஷ்மியாய்
தானிய தைரிய கஜ விஜய தேவியாய்

நான்கிரண்டும் சேர்ந்து அஷ்ட லக்ஷ்மியாய்
நான் கேட்கும் வரமளிப்பாய் ஸ்ரீதேவியாய்!

வரலக்ஷ்மித் தாயே வருவாயே என் அகமே
வரமளிக்க உனைபோல் தெய்வம் வேருண்டோ?

வரமே அருள்வாயே இந்நன்னாளில் மனமகிழ்ந்து
பெறவே நின்னருளைத் துதிக்கின்றேன் முகம்வைத்து!

தண்டுலம் வெற்றிலைச் சுகந்தப் பாக்குடன்
மங்கலப் பொருட்கள் வெள்ளிச் சொம்பிலிட்டு

மாவிலைக் கொத்துடன் தேங்காயை வைத்து
உன்முகம் அதிலே அழகுடன் பதித்து வைத்து

பச்சைப் பட்டுடுத்தி பல்வகை நகை தறித்து
சுட்டி புல்லாக்குடன் வைர மூக்குத்தி, முத்து

அட்டிகையுடன் கருங்குழல் ஜடை அணிந்து
கற்பூர ஒளியுடன் உன்னை மண்டபத்தில் வைத்து

மண்டபத்தின் இருபுறம் வாழைக்கன்று கட்டி
மாவிலைத் தோரணம் மேற்புறம் அமைத்து

எண்ணை விளக்குகள் நாற்புறம் மின்னவிட்டு
வெள்ளிக் குத்துவிளக்கைப் பொட்டாக எரியவிட்டு

செவ்வரளிச் செம்பருத்தி மல்லியையும் சேர்த்து
செவ்வனே மாலைக்கட்டி அழகிற்கு அழகுசேர்த்து

செந்தூர முகமதனில் சிந்தூரத் திலகம் இட்டு
செய்யுள் பாடி பாமாலையாய்ச் சூடுகின்றேன்!

நின் நாமாக்கள் நூற்றியெட்டை
என் மனமுருகிப் பாடியேத் தாயே

வாசமுள்ள (ஊது)வத்திக் காட்டி
கற்பூர நீராஜனம் அளித்தேனம்மா!

மா பலா வாழையென முக்கனிப் பழமளித்து
இட்லிக் கொழுக்கட்டை கடலைச் சுண்டலென

தித்திக்கும் கண்ணமுது சுவையான வடையுடன்
வித வித பலகாரம்  பல நிவேதனம் செய்து

மனமார துதித்துன்னை நலமோடு
நான் வாழச் சரடு தறித்தேன் அம்மா

என் குலம் காத்து என் குற்றம் தவிர்த்து
நான் சிறக்க வாழ்வளிப்பாய்த் தாயே!

மாலையில் மாதர்குழாம் உன்னைப் பாட
மங்கல குங்குமத் தாம்பூலம் தான் பெற்று

மங்கலநாண் செழிப்புடன் என்னாளும் இருக்க
மங்கையர் கொண்டாடும் வரலக்ஷ்மி விரதம்!

சரணம் |  சரணம் | ‌ சரணம் ||

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ
     
   

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: