சந்தியா வந்தனம் ( பகுதி 2 )

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது:

“சந்தியாவந்தனம் பகுதி 2”

காயத்ரி ஜபமும் ஏற்ற இடமும்:

ஒருமுறை ஒன்றைக்கூறி நிறுத்தாமல் பலமுறைக் கூறுவதே ஜபம். சிலது மிகச் சுருக்கமாகவும் சிலது பெரிதாகவும் இருக்கும். ஏழுகோடி மந்த்ரங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஜபம் செய்யும்போது ஒவ்வொரு நாமமும் இன்னொரு நாமாவுடன் சங்கிலிபோல் சேர்ந்து, அந்தந்த தேவதைகளின் திருவடியில் நம்மக் கொண்டு சேர்க்கிறது. ஜபத்தால் அந்தந்த தேவதையின் உருவம் நமக்கருகில் படைக்கப் படுகிறது.

ஸந்தி செய்த இடத்தை விட்டு நாற்பது அடிக்கு மேல் ஜபம் செய்ய வேறிடம் போகக்கூடாது. ‘ஆப்ரும்ம’ என்ற ஸ்லோகத்தைக் கூறி ஸமஸ்த ப்ராம்மணர்களுக்கு நமஸ்காரம் செய்து, ‘அப ஸர்பந்து’ என்ற ஸ்லோகத்தைக் கூறி, ஜலத்தை ப்ரோக்ஷணம் செய்து ஜபஸ்தலத்திலுள்ள பூதங்களை அகற்றி, ஆசனத்தில் அமர்ந்து ஜபம் செய்யவேண்டும். எதிரில் தீர்த்தபாத்திரம் இருக்கவேண்டும். இவை நமது ஜபத்தின் பயனை மற்றவை கொண்டு போகாவண்ணம் ரக்ஷிப்பதற்காகவாம்.

ப்ராணாயாமம், ஸங்கல்பம் செய்து ‘ஆயாது’ என்ற மந்த்ரம் கூறி, காயத்ரீஜபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

காலையில் நின்றுகொண்டே கிழக்கு முகமாக ஜபம் செய்யவேண்டும்.
மதியத்தில் அவரவர் குலவழக்கத்தின்படி, நின்றுகொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ கிழக்கு முகமாக ஜபம் செய்யவேண்டும். மாத்யாஹ்னிகத்தில் வடக்குமுகமாகவும் செய்யலாம் என்று சிலரும், காயத்ரிஜபத்தை ஒருபோதும் வடக்கு நோக்கி செய்யக்கூடாது என்று சிலரும் கூறுவதால், மதியத்திலும், வாதமில்லாத கிழக்கு முகமாகவே செய்யலாம்.

மாலையில் உட்கார்ந்து கொண்டு மேற்கு நோக்கி ஜபம் செய்யவேண்டும். அர்க்யம், பின் செய்யும் த்யானம், ஜபம் இவற்றை மாத்திரம் மாலையில் மேற்குமுகமாகத்தான் செய்யவேண்டும்.

சிலர் மாலையில் எல்லாவற்றையுமே மேற்கு நோக்கிச் செய்வது தவறு. எப்போதும் ஆசமனம், மார்ஜனம் முதலியவைகளைக் கிழக்கு அல்லது வடக்கு முகமாகத்தான் செய்ய வேண்டும். தெற்கிலோ மேற்கிலோ செய்யக்கூடாது.

காயத்ரி ஜபம் :. காயத்ரி மந்திர ஜபம் மற்ற ஜபங்களை விட விஷேமானது.இதனை முறையாக ஜபம் பண்ணினால் நான்கு வேதங்களையும் ஒதின பலன்கள் கிடைப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

பிரம்மசாரிகள் 4 பாகமாகவும் கிரஹஸ்தர்கள் 5 பாகமாகவும் நிறுத்தி இடைவெளி விட்டு ஜெபிக்க வேண்டும்
அதாவதுபிரம்மசாரிகள்

1 ஓம்பூர்புவஸ்ஸுவ
2 தத்ஸவிதுர்வரேண்யம்
3 பர்கோதேவஸ்யதீமஹி
4 தீயோயோந:பிரசோதயாத்
என நான்கு பாகமாகவும்

கிரஹஸ்தர்கள் :

1ஓம்
2 பூர்புவஸ்ஸுவ
3 தத்ஸவிதுர்வரேண்யம்
4 பர்கோதேவஸ்யதீமஹி
5 தீயோயோந:பிரசோதயாத்
என ஐந்து பாகமாகவும் உச்சரிக்க வேண்டும்.

அடுத்ததாக பிரம்மச்சாரிகள் செய்ய வேண்டியது சமிதாதானம்.

சமிதாதானம் உபநயனம் ஆனது முதல் தினமும் செய்யவேண்டிய அக்னி உபாசனை. இதனை செய்ய 10 நிமிடம் ஆகும்.

ஒளபாஸனம் :

விவாஹம் அக்னி ஸாக்ஷியாக அக்னியில் ஹோமத்துடன் தானே நடக்கிறது? அந்த அக்னியிலேயே விவாஹத்தின் போதே ஒளபாஸனம் ஆரம்பிக்கப்படுகிறது. பிறகு வாழ்நாள் பரியந்தம் அந்த ஒளபாஸனாக்னி அணையாமல் அதை உபாஸிக்க வேண்டும்.

கிருஹத்தில் நடக்கும் உபநயனம் முதலான காரியங்களையும் சிராத்தம் முதலியவைகளையும் ஒளபாஸன அக்னியைக் கொண்டேதான் செய்யவேண்டும். தகப்பனாருடைய ஒளபாஸனாக்னியிலிருந்தே புத்திரனின் விவாஹத்தில் அக்னி வளர்க்கப்படும். இதுவே அப்புறம் புத்திரனின் ஜீவ பரியந்தமும் அவனுக்கு ஒளபாஸனாக்னியாகிறது.

அக்னிஹோத்ரம் :

க்ருஹ்யத்தில் ஒளபாஸனம் போல, ச்ரௌத கர்மாக்களில் அன்றாடம் இரண்டு வேளையும் செய்ய வேண்டியது அக்னி ஹோத்ரம். அக்னி ஆதானமும் அக்னி ஹோத்ரமும் ஏழு ஹவிர்யக்ஞங்களில் முதலிரண்டாகும். அக்னி ஹோத்ரம் செய்பவர்களையே அக்னி ஹோத்ரிகள் என்கிறோம்.

அக்னிஹோத்ர அக்னி எக்காரணத்திலாவது அணைந்து விட்டால் புனராதானம் என்பதாக மறுபடி ஆதானம் பண்ணி மீண்டும் ஆரம்பிக்கலாம். இப்படியே ஒளபாஸன அக்னி அணைந்தாலும், அக்னி ஸந்தானம் செய்து மறுபடி ஆரம்பிக்கலாம்.

சந்தியா வந்தனத்தை யாரெல்லாம் செய்யலாம்?
உபவீதம் செய்து கொண்டவர்கள் ( பிராமணர்கள் வாணியன் குயவன் சத்ரியன் என எல்லோருமே) எல்லோருமே செய்யலாம்
சந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன்.
அவர்கள் ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை. அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான்.

முடிந்தவரை அனைவரும் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி ஜெபத்தினை தினமும் காலை மதியம், மாலையில் மூன்று வேளையும் செய்வோம் நிலையில்லா வாழ்வை விட்டு நிலையான மோட்சத்தை அடைவோம்.

லோகா சமஸ்தா சுகினோ
பவந்து ……
……. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: