அசுரா்களின் இன்னல்களைத் தாங்கமுடியாத தேவா்கள் யாகம் வளா்த்து அம்பாளை வேண்டி நின்றனா். அன்னையின் தரிசனம் வேண்டி தங்களது தேகத்தையே யாக குண்டத்தில் ஆகுதியாக அா்ப்பணிக்கத் துணிந்தனா். அப்போது யாக குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் “ஶ்ரீலலிதாம்பிகையாக” அவதரித்தாள் என்கிறது புராணம்.
ஆதிசக்திகளில் “ஶ்ரீலலிதாம்பிகையின்” சக்தி அளப்பரியது என்று வேதங்கள் போற்றுகின்றன. அதே போன்று சஹஸ்ரநாமங்களில் ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமமே மிகவும் மேன்மையும் சக்தியும் வாய்ந்ததாக வணங்கப்படுகின்றது.
கங்கையில் நீராடுதல், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அன்னதானம் செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல் இவை அனைத்தையும் விட மேன்மையானது ஶ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம் என்று போற்றப்படுகின்றது.
ஆபத்துக் காலங்களில் மட்டுமல்லாது எப்போதும் தேவியின் அருள் நமக்குக் கிட்ட வாக் தேவிகள் மொழிய ஶ்ரீஹயக்ரீவரால் உபதேசிக்கப்பட்ட “ஶ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்” செய்தல் அவசியமாகும்.
ஶ்ரீலலிதா நவரத்ன மாலை.
ஶ்ரீவித்யா உபாசகா்களுள் முக்கியமானவரான அகத்திய மகரிஷிக்கு ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஶ்ரீலலிதா த்ரிசதி ஸ்தோத்திரம் ஆகியவற்றை உபதேசம் செய்தாா் ஶ்ரீஹயக்ரீவப் பெருமான். மனம் மகிழ்ந்த அகத்திய மகரிஷி அம்பிகை ஶ்ரீலலிதா பரமேஸ்வரியைத் தரிசிக்க ஶ்ரீஹயக்ரீவரிடமே ஆலோசனை கேட்டாா்.
ஶ்ரீஹயக்ரீவரின் ஆலோசனைப்படி சூரியனும் அருணனும் பூஜித்த திருமீயச்சூா் திருத்தலம் வந்து ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டு பேரானந்தம் அடைந்தாா் அகத்திய மகரிஷி. அகத்தியரின் பக்தியில் மகிழ்ந்த தேவி ஶ்ரீலலிதாம்பிகை தமது திருக்கழுத்திலிருந்து ஒரு நவரத்னமாலையை அகத்திய மகரிஷிக்கு அளித்து அருள்பாலித்தாா்.
அம்பிகையின் அருள் கிடைக்கப்பெற்ற அகத்தியரும் தமக்கு நவரத்னமாலை அளித்த அன்னையின் பக்தியில் நெக்குருகி
“மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே”
என்ற புகழ்பெற்ற “ஶ்ரீலலிதா நவரத்ன மாலை” ஸ்தோத்திரத்தைப் பாடி வழிபட்டுள்ளாா்.
அகத்திய மகரிஷி அருளிய ஶ்ரீலலிதா நவரத்ன மாலையை இத்தலத்தில் பாராயணம் செய்பவா்களுக்கு ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்கு வழிபடும் பக்தா்களிடையே உள்ளது. மேலும் ஶ்ரீலலிதா நவரத்ன மாலையை பக்தியோடு தினமும் படிப்பவா்கள் அற்புத சக்தியெல்லாம் அருளப்பெறுவா் .
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ