மனிதனின் எட்டு குணங்கள் :

நாம் தெரிந்து கொள்ளப் போவது :

” மனிதனின் எட்டு குணங்கள் ”

இந்த குணங்கள் என்பது யாவை அவற்றை எட்டாக பிரித்து வைத்திருக்கிறது நமது சாஸ்த்ரங்கள் . இதைப் பற்றி மஹா பெரியவா சொன்னதை கொஞ்சம் சுருக்கி என்னால் முடிந்தவரை புரியும்படியாக கொடுத்திருக்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.

தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயாசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை அஷ்ட
(எட்டு) குணங்கள்.


தயை :
தயை’ என்பது ஸர்வபூதங்களிடமும் அன்பு, அருளுடைமை.
நமது வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் பலன், பெரிய
ஆனந்தம் எல்லாமே பிற உயிரிடம்
அன்பு செலுத்துவது தான். அதுதான் அஸ்திவாரம், (முதுகெலும்பு) .


க்ஷாந்தி’ :
க்ஷாந்தி’ என்றால் பொறுத்துக்
கொள்வது. நமக்கு வியாதி, விபத்து, தாரித்ரியம் முதலானவற்றால் உண்டாகிற கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வது ஒன்று. கஷ்டத்துக்கு
என்ன பஞ்சம். மேலே மேலே
தான் வந்து கொண்டே இருக்கிறதே. நமக்கு ஒருத்தர் கஷ்டத்தைக் கொடுக்கிறபோது அவரையும் மன்னித்து அன்பைக் காட்டுவது இன்னொருவிதப் பொறுமை. இது உண்மையில் நாம் செய்ய முயற்சிக்காத ஒரு காரியம். இதை முதலில் பழக்கம் பண்ணிக்கொள்ள வேண்டும்.


அநஸூயா :
அநஸூயா என்பது அத்ரி மஹரிஷியின் பத்னியான மஹாபதிவிரதையின் பேர். உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளவும். அஸுயை (பொறாமை) இல்லாதவள் அநஸூயை. (அநுஸூயை என்றால் வேறு அர்த்தமாகிவிடும். ) நம்மைவிட ஒருத்தன் நல்ல நிலையில் இருந்தால் வயிற்றெரிச்சல் படக்கூடாது. இருந்தால் பொறாமைக்குப் பதில்பெருமைப் படுவோமே. ”அவன் நம்ம பையன். நன்னா இருக்கான் ” இப்படி சில
பேர் சொல்லிக் கேட்டதில்லையா. பொறாமையின்மைதான் அநஸூயை.
முதலில் சொன்ன அன்பு எல்லாரிடமும் காட்ட , இருக்க வேண்டியது.


சௌசம். :
சௌசம் என்பது ‘சுசி’ என்பதை வைத்து வைத்து ஏற்பட்டது. ‘சுசி’ என்றால் சுத்தம். ஸ்நானம், மடி வஸ்திரம், ஆஹார நிர்ணயம் முதலான ஆசாரங்கள் எல்லாம் ‘சௌசம்’ என்பதில் வரும்’ . ‘சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும்’ என்று நிறைய படிக்கிறோம்,சொல்கிறோம், எழுதுகிறோம் அதோடு சரி. வெளியிலே நன்றாக சுத்தமாக இருக்கிறவனைப் பார்த்தாலே நம் மனஸுக்கும் சுத்தமாயிருக்கும். அவனிடம் ஒரு அன்பு, மரியாதை மதிப்பு எல்லாம் ஏற்படுமே. .


அநாயாஸம் :
அநாயாஸம் சாதாரண விஷயமல்ல. அது ஒரு ரொம்ப மகத்தானது. (குணசீலம்) . அலட்டிக் கொள்ளாமல் இருக்கிற குணம் அநாயாஸம். தானும் சிரமப்படாமல், மற்றவர்களையும் சிரமப்படுத்திக் கொண்டிராமல் இருப்பது அநாயாஸம். நாம் இது மாதிரி இருக்கும் ஒன்றிரண்டு பேரை லட்சியம் செய்வதில்லையே.

அநேக கர்மாநுஷ்டானங்கள் உடம்பால் சிரமப்பட்டு செய்யவேண்டியிருக்கிறது. சிராத்தம் என் றால் மத்யான்னம் இரண்டு மணி, மூன்று மணி வரை பட்டினி கிடக்க வேண்டும். ஒரு யாகம் என்றால் அதில் நிறைய சரீர சிரமம் இருக்கிறது. அப்படியும் நிறைய பேர் சந்தோஷத்தோடு அதில் ஈடு படுவது மதிக்கப்பட வேண்டிய விஷயம். சிரமம என்றால் உடம்பினால் மட்டும் அல்ல. மனஸினால் சிரமப்படாமலிருப்பதைத்தான் முக்கியமாக குறிப்பிடுகிறேன். எந்தக் காரியமானாலும் விக்கினங்கள், தடைகள், ஏதாவது வரத்தான் வரும். அதற்காக மனஸை கலங்க விடாமல் திட சித்தத்தோடு ஈடு பட வேண்டும். எல்லாம் பகவான் செயல்
என்று, மனஸிலே பாரமில்லாமல்
இருக்கவேண்டும்.

ஸங்கீத வித்வான் அநாயஸாமாக
உச்ச்சச்தாயிலே ஆலாபனை
பண்ணினார் என்றால் என்ன
அர்த்தம்? கஷ்டத்தையே அமுக்கி தனக்கு சாதகமாக்கி, ஸுலபமாக்கிக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்?

சிரமமான வாழ்க்கையை அப்படிப்
பண்ணிக்கொள்வதுதான் அநாயாஸம்’.


மங்களம் :
அநாயாஸம் திருப்தி ,சுகம். ஆனந்தமாக – அதிலேயே ஒரு கம்பீரத்தோடு தூய்மையோடு ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதுதான் மங்களம். எதற்கெடுத்தாலும் சள்ளென்று எரிந்து விழாமல் ‘ஆஹா’ என்று எப்போதும் ஸந்தோஷமாக இருக்கவேண்டும்.

இதுதான் இந்த உலகிற்கே நாம்
செய்கிற பெரிய ஒத்தாசை, பெரிய தொண்டு.

போகிற இடமெல்லாம் நாமே ஒரு
‘தீபம் மாதிரி ஒளியை, ஆனந்தத்தைக் கொடுப்பது ‘மங்களம்’.


அகார்ப்பண்யம்’ -:
லோபித்தனம், கருமித்தனம் இல்லாமதான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம். மனஸார வாரிக் கொடுக்கிற குணம் வேண்டும்.


அஸ்ப்ருஹா’ — :
அஷ்டகுணத்தில் கடைசி. ‘ஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ”ஆசையின்மை” . அத்தனை கெட்டதுக்கும் ஆணி வேராக இருப்பது ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டுவதுதான் முடியவில்லை. ஸம்ஸ்காரங்களைப் பண்ணி பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து அப்பியாஸம்
பண்ணிக் கொண்டு போகும்போது
கடைசியில் இந்த ஆசையின்மை,
பற்றின்மை, ‘அஸ்ப்ருஹா’என்பது பூர்த்தியாக அநுபவத்தில் வருகிறது…….


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!

பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!

என பரம்பொருளின் பாதம் பணிந்து வேண்டுவோம்……..

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
………. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: