இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
“கந்த புராணம் – இறுதி பகுதி ”
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே……
வேலாயுதம்:
முருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேலாயுதமே ஞானசக்தியாகும்.
வெல்லும் தன்மை உடையது, வேல். எல்லாவற்றையும் வெல்வது அறிவாற்றல்.
அறிவானது ஆழமும், அகலமும், கூர்மையும் உடையது.
சேவல் கொடி : முருகனுக்கு, சேவல் கொடியாக உள்ளது. கோழிக்கு
(குக்குடம்) சேவல் என்றும் பெயர்.
கோழி ஒளியை விரும்புவது. எனவே அறியாமை எனும் இருளை போக்கி மெய்யறிவை கொடுக்கும் விதமாக உள்ளது.
மயில் வாகனம்: மயில், மனதின் சின்னம். தூய்மையான அழகான உள்ளம்தான் இறைவனின் கோவில் என்பதை விளக்குகிறது.
பாம்பின் மேல் மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கிறான் என்பதை காட்டும்.
முருகனின் அறுபடை வீடு :
திருப்பரங்குன்றம்: (முதல் படை வீடு ) தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
திருச்செந்ததூர் : ( இரண்டாம் படை வீடு ) கடல் அலை ‘ஓம்’ என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் ‘அலைவாய்’ என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும்.
பழநி: ( மூன்றாம் படை வீடு). ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.
சுவாமிமலை: (நான்காம் படை வீடு) தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை
திருத்தணி: (ஐய்ந்தாம் படை வீடு) முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.
பழமுதிர்ச்சோலை:(ஆறாம்படைவீடு ) நக்கீரர், ‘இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே’ என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.
” அரோஹரா ”
அரோகரா , அரோஹரா என்ற சொல்… அர ஹரோ ஹரா சொல்லின் சுருக்கம்.. இறைவா துன்பங்களை நீக்கி இன்பத்தை அருள்வாய் என்று பொருள்.
முன்பு, சைவ சமயத்தினர் இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்தபோது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர்.
இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, ‘அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு ‘அர ஹரோ ஹரா’ என்று சொல்வது வழக்கமாயிற்று
பிற்காலத்தில் இதுவே முருகனுக்கு
உகந்த மந்திரமாக சொல்லபடுகிறது.
சிவனின் சக்தியையும் அம்பிகையின் அருளையும் பெற்ற முருகன் எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன். தமிழ் கடவுளான முருகனின் பாதங்களை பற்றி துதிப்போர்க்கு………..
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே…..
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” …… என்று மனதார சொல்லி
இத்துடன் கந்த புராண விளக்கம் நிறைவு பெறுகிறது.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …….
……….ஸ்ரீ
,