கந்த புராணம் பகுதி 2

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது

“கந்த புராணம் – பகுதி 2 ”

குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக’ என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தபெருமான்.

இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார்.

மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’ என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்

கந்தபுராண அரங்கேற்றம் :

இந்த கந்தபுராணத்தை அரங்கேற்றம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. சான்றோர்களும், ஆன்றோர்களும், புலவர்களும் என குமரக்கோட்டம் அமர்களப்பட்டது. கச்சியப்பர், குமரப் பெருமானை வணங்கி, திகடச் சக்கர செம்முகம் ஐந்துள்ளான் என்று ஆரம்பித்தார். அவ்வளவு தான் நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று புலவர்கள் ஆரவாரித்தனர். கச்சியப்பர் நிறுத்தினார். என்ன ஆயிற்று ? என்று கேட்டார். தாங்கள் செய்யுளில் இலக்கண பிழை உள்ளது என்றார்கள்.

புலவர்களே இது முருகன் தந்த தமிழ் தொடர். இதற்கு விடை குமர பெருமானின் அருளால் நாளை அவையில் கிடைக்கும் என்று கூறி எழுந்து விட்டார். இரவு உண்ணாமல் கந்த புராண சுவடிகளை பூஜையறையில் உள்ள குமரப்பெருமானின் காலடியில் வைத்து விட்டு அழுது கொண்டே உறங்கிபோனார். கனவில் வந்த கந்த பெருமான் “கச்சியப்பா. நாளை மாலை யாமே அவைக்கு வந்து ஐயத்தை தீர்த்து வைப்போம் என்று கூறி மறைந்தார்.

மறு நாள் சபை கூடியது. அனைவரும் திகைக்கும்படி சோழ தேசத்து புலவர் ஒருவர் வந்து நின்றார். புலவர்களே நீங்கள் திகடச் சக்கர என்ற வார்த்தைக்கு பொருள் கிடையாது என்று கூறினீர்கள். வீர சோழியம் என்ற இலக்கண நூலில் 18 வது பாடலில் திகட என்ற பதத்திற்கு பொருள் உள்ளது. திகழ்+தசம் என்ற இரு சொற்கள் சேர்ந்தால் திகடசம் என்ற மாற்றம் பெறும். திகடச் சக்கர செம்முகம் ஐந்துள்ளான் என்பதற்கு பொருள். பத்து கரங்களும், ஐந்து திருமுகங்களையும் உடைய சிவபெருமான் என்று பொருள் என்று விளக்கினார்.

வீரசோழியம் என்ற இலக்கண நூலிருந்து விளக்கம் கொடுத்த சோழ தேசப் புலவரின் எழிலில் அனைவரும் மயங்கி போனார்கள். புலவராக வந்த குமரப்பெருமானோ ஐயம் இப்பொழுது நீங்கிற்றோ? என்று கேட்டு மறைந்தார். இதற்கு பிறகு கந்தபுராண அரங்கேற்றம் இனிதே தொடங்கி நிறைவேறியது. இந்த கந்த புராண விளக்க சொற்பொழிவு ஓராண்டு காலம் நடைபெற்றது. நிறைவு நாளில் தொண்டை நாட்டின் 24 கோட்டத்தாரும் ஒன்றாய் சேர்ந்து கச்சியப்பரையும், கந்தபுராணத்தையும் தங்க பல்லக்கில் வைத்து ஊர் முழுவதும் உலா வரச்செய்து சிறப்பு செய்தனர்

கந்த புராணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் யாவை?

உற்பத்தி காண்டம், அசுர காண்டம் , மஹேந்திர காண்டம் , யுத்த காண்டம் , தேவ காண்டம், தக்க காண்டம் என்று ஆறு காண்டங்கள்

இதில் 91 படலங்களும் 10345 பாடல்களும் அடங்கியது.

இவற்றில் முக்கியமாக அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறை செய்த வரலாறு, சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானை திருமணம், முதலியன இடம்பெற்றுள்ளது.

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே…….. என்ற வேல்
மாரல் பாடலை பாடி

குமர கோட்டம் பெருமை , சைவ வைஷ்ணவ ஒற்றுமை பற்றி நாளை பார்ப்போம்.

நாளையும் வருவான் வடிவேலன்..

…….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: