ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது
கிருஷ்ணனின் மூன்றாவது விஸ்வரூப நிகழ்வு :
நாம் தர்ம நியாயத்தை பேசுவோம் ஆனால் எதிரில் இருப்பது நம் சொந்தம் என்றால் நா வானது சற்று அடங்கி போகும்.
பாசம் நமது கண்ணை மறைத்து கடமையை செய்யவிடாமல் தடுக்கும்.
பாசத்தை போக்கி கடமையை செய்யவைத்து கடமை வீரன் ஆக்க பேசப்பட்டது தான் ஸ்ரீமத் பகவத் கீதை.
குருட்சேத்த்ரத்தில் அர்ஜுனன் கண்ணனை பார்த்து.. கிருஷ்ணா! போர் செய்ய மனம் வரவில்லையே! போரால் எதிரில் உள்ள இத்தனை பேர் மாண்டு விடுவார்களே என்றான்.
கிருஷ்ணன் கூறுகிறார் அர்ஜுனா, மாண்டுபோகட்டுமே. நீ ஏண்டா கவலை படுகிறாய். நீ ஒரு தளபதி, போரில் உன் வேலை என்ன? போர்க்களத்தில் எதிரில் நிற்போரை வீழ்த்த வேண்டும், அதுதானே உன் கடமை!தர்மம்.எதிரில் நிற்பவர்கள் உன் சொந்தமாக இருப்பினும் அவர்கள் எதிரியே. உறவை பற்றியும் கவலை படாதே கடமையை செய் என்றார் கிருஷ்ணன்.
ஒவ்வருவர்க்கும் ஒரு கடமை உண்டு
ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
பிள்ளையை பெற்றுத் தருவது தாயின் கடமை. பிள்ளையை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை, வேல் வடித்து கொடுப்பது கொல்லர் கடமை என வகை உண்டு.
திருகர்த்தனுடன் போர் முடிந்து பாசறை திரும்ப, இரவு நேரம் எல்லாரும் சாப்பிட, அங்கு கிருஷ்ணனை காணவில்லை. கிருஷ்ணன் குதிரை லாயத்தில் குதிரைக்கு தீனி போட்டுவிட்டு , காயத்திற்கு மருந்து தடவி கொண்டிருக்கிறான். அதை கண்ட அர்ஜுனன் கிருஷ்ணா ! என்ன இது ? சாப்பிட வேண்டாமா என கேட்கிறான்.
கிருஷ்ணன் கூறுகிறான் அர்ஜுனா! நீ யார் தளபதி தேரை விட்டு இறங்கி போய்விடலாம். நான் யார் தேரோட்டி, குதிரைகளை பராமரித்தால் தானே நாளை தேரில் பூட்டமுடியும்? இது என் கடமை என்று கடமையை செய்து காட்டினான். அர்ஜுனனை பார்த்து
நீ அம்பு எடுத்து எறிவதால் அவர்கள் சாகப்போவதிலை, எல்லாம் என் செயல். நீ ஒரு கருவி தான். கடமையை செய்வதால் சில சங்கடங்கள் வரலாம், சிலர் நம்மை திட்டுவார்கள் கவலை வேண்டாம்.கடமையை செய்து விட்டு சர்வம் கிருஷ்ணார்ப்பணம்என்று சொல்.
பொதுவாக நாம் பூஜை செய்து முடித்து கடைசியில் கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்து சிறிது நீரை ஊற்றி பூஜை செய்த புண்ணியம் அத்தனையும் உன் திருவடிகளில் என்று சர்வம்
கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்கிறோம்.
கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம்–தேவர்கள், ரிஷிகள் என யாராலும் அவரது வைபவங்களை முழுமையாக அறிய இயலாது. ஜடவுலகிலும் ஆன்மீக உலகிலும் என்னவெல்லாம் உள்ளதோ, அவை அனைத்திற்கும் கிருஷ்ணரே மூலம் என்பதை அர்ஜுனனுக்கு சொல்கிறார்.
மேலும் இந்த உலகில் எங்கும் வியாபித்திருக்கிறேன். மரம் செடி கொடி என அனைத்தும் நானே என்று பல விதங்களில் அர்ஜுனனுக்கு கூறுகிறார்.
எல்லாமும் நீயே என்ற கிருஷ்ணனின் ரூபத்தை பார்க்க மனதில் அர்ஜுனன் நினைத்த மாத்திரத்தில் கிருஷ்ணன் ஆய வடிவம் பதினாயிரம் கொண்டு தனது விஸ்வரூபத்தை காட்டுகிறான். இது தான் மூன்றாவது விஸ்வரூபம்.
விஸ்வரூபத்தை பார்த்த அர்ஜுனனுக்கு ஆச்சர்யம், திகைப்பு ,மகிழ்ச்சி என்றாலும் மனதில் பயம் வந்துவிட்டது. அவனால் ஒளி வீசும் ரூபத்தை பார்க்க முடியாமல் கண்கள் கூசின. அகோரமான முகம், கோர பற்கள், என கிருஷ்ணன் அத்துணை உலகும் கடந்து நிற்கும் இறைவனாய் நிற்கிறான்.
கிருஷ்ணா ! வேண்டாம் இந்த விஸ்வரூபம்,
நீரே ஆதிபுருஷர், நீரே வாயு, நீரே எமன், நீரே அக்னி, நீரே வருணன், நீரே பிரம்மா, நீரே அனைத்தும். உமக்கு எனது ஆயிரக்கணக்கான வந்தனங்கள். முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லா திக்குகளில் இருந்தும் உமக்கு வணக்கங்கள்.
உமது பெருமைகளை அறியாமல், நட்பின் காரணத்தினால், “கிருஷ்ணா, யாதவா, நண்பனே,” என்றெல்லாம் உம்மை நான் அழைத்துள்ளேன். மன்னித்து விடு என்கிறான் அர்ஜுனன்.
ஒரு தந்தை தனது மகனின் குற்றங்களையும் ஒரு நண்பன் நண்பனின் குற்றங்களையும் பொறுத்துக்கொள்வதுபோல, தனது குற்றங்களை பொறுத்து அருளும்படி அர்ஜுனன் கிருஷ்ணரிடம் வேண்டினான். பயத்தினால் குழம்புவதாகவும் அவன் கூறினான். இந்த ரூபம் வேண்டாம் கிருஷ்ணா !அதைத் தொடர்ந்து, சங்கு, சக்கரம், கதை, தாமரை என நான்கு கரங்களுடன் கூடிய தெய்வீக ரூபத்தைக் (விஷ்ணுவின் ரூபத்தைக்) காண்பதற்கான தனது பேராவலை அவன் வெளிப்படுத்தினான்.
அர்ஜுனனின் விருப்பத்தின்படி நான்கு கரங்களுடைய விஷ்ணு ரூபத்தைக் காட்டிவிட்டு மீண்டும் தமது சுய ரூபத்திற்கு கிருஷ்ணர் திரும்புகிறான்.
எதிரிகள் இந்த விஸ்வரூபத்தை கண்டு நடு நடுங்கினர். யார் பயப்பட்ட கூடாதோ அவன் பயந்தான். அர்ஜுனன் பயந்திருக்க கூடாது, ஏன் என்றால் ஆண்டவனே ஆச்சார்யனாக அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தும் அவன் மனம் லயிக்கவில்லையோ …..அப்படியென்றால் அர்ஜுனனும் நம்மை போல சாதாரணமானவன் என்று தானே அர்த்தம்.
எல்லாம் வல்ல இறைவன் நினைத்த மாத்திரத்தில் காட்டிய விஸ்வரூபத்தை அனுபவிக்காமல் வேண்டாம் இந்த ரூபம் என்றதால் மூன்றாவது விஸ்வரூபமும் தோற்று போனது.
கிருஷ்ண! கிருஷ்ண! கிருஷ்ணா!!
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
………ஸ்ரீ