கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது :

கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை
தடுக்கவில்லை ?

எல்லாம் அறிந்த ஞானியான கிருஷ்ணர் சூதாட்டத்தை தடுத்து பாண்டவர்களை காக்காதது ஏன் ?

துவாபர யுகத்தில் தன் அவதார நோக்கத்தினை முடித்த நிலையில், உத்தவரை நோக்கி என்னிடம் எதயும் கேட்டதில்லை, உங்களுக்கு ஏதாவது நன்மை செய்து விட்டு என் அவதாரத்தை முடிக்க நினைக்கிறேன் என்றார் கிருஷ்ணர்.

சிறு வயது முதல் கிருஷ்ணனின் செயல்களை பார்த்து வந்த உத்தவருக்கு , துவாபர யுகத்தில் கிருஷ்ணனின் லீலைகள் சொல் ஒன்றும் செயல்
ஒன்றுமாக இருந்ததின் காரணத்தை அறிய விரும்பினார்.

உத்தவர் கேட்ட கேள்விகளும், கிருஷ்ணரின் பதில்களும் :

உத்தவர் : நல்ல நண்பன் யார்? விளக்க வேண்டும் என்றார்.

கிருஷ்ணர் : நண்பனுக்கு ஏற்படும் துயரம் நீங்க, அவன் கேட்காமலே வந்து உதவி செய்பவன் உற்ற நண்பன் என்றார்.

உத்தவர் : நீயோ, பாண்டவர்களின் உற்ற நண்பன், அவர்களும் உன்னை பரிபூரணமாக நம்பினார்கள். எல்லாம் அறிந்த நீ உற்ற நண்பனின் விளக்கப்படி , வேண்டாம் தருமா, !இந்த சூதாட்டம் என தடுத்திருக்கலாம்.
விளையாட ஆரம்பித்த பிறகு தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்திருக்கலாம். வஞ்சகர்க்கு நீதி புகட்டி இருக்கலாம். ஏன் செய்யவில்லை.

மேலும் தருமன் செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான், தன்னையும் இழந்தான், ஏன் சகோதரர்களை பணயம் வைத்த போது தடுத்திருக்கலாம். திரௌபதியை பணயம் வைத்தபோது உன் தெய்வீக சக்தியால் தருமனுக்கு சாதகமாக பகடையினை விழ செய்திருக்கலாம், ஏன் செய்யவில்லை என கேட்டார் உத்தவர். ஆபத்தில் உதவுவது தானே
உற்ற நண்பனுக்கு அழகு என்றார்.

கிருஷ்ணரின் பதில் : உத்தவரே !
விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது தர்ம நியதி.
துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை, அதனால் தோற்றான்.

துரியோதனனுக்கு சூதாட தெரியாது,.ஆனால் நிறைய செல்வம் இருந்தது. அதனால் நான் பணயம் வைக்கிறேன் என் மாமன் சகுனி பகடை உருட்டுவான் என்றான். அது விவேகம்.

அதுபோல தருமனும் விவேகத்துடன் பணயம் நான் வைக்கிறேன், எனது மைத்துனர் கிருஷ்ணர் பகடை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாமே. ஏன் சொல்லவில்லை ? நானும் சகுனியும் ஆடியிருந்தால் யார் ஜெயித்திருப் பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

விதி வசத்தால் சூதாட வந்து
விட்டேன், ஆண்டவா ! கிருஷ்ணனுக்கு இது தெரிய கூடாது,.அவர் இங்கு வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டு என்னை வரவிடாமல் கட்டி விட்டான். யாராவது என்னை நினைத்து கூப்பிட மாட்டார்களா என காத்து கொண்டிருந்தேன்.

மற்ற 4 சகோதரனையும் வைத்து ஆடி தோற்றபோது கூட அவர்கள் தருமனை நொந்து கொண்டார்கள், ஆனால் என்னை மறந்துவிட்டு அழைக்கவில்லை. அது ஏன் திரௌபதி கூட முதலில் தன்னை நம்பி கடைசியில் தான் ஹரி ஹரி என என்னை அழைத்தாள். உடனே சென்று காப்பாற்றினேன் என்றார் கிருஷ்ணர். இதில் என் தவறு எங்கே .?

உத்தவர் : கூப்பிட்டால் தான் வருவாயா ? ஆபத்பாந்தவனாக வந்து மனிதனை காக்க மாட்டாயா ?

கிருஷ்ணர்: சிரித்துகொண்டே மனித வாழ்வு அவரவர் கர்ம வினைப்படி தான் அமைகிறது. அதை நான் நடத்துவதும் இல்லை, குறுக் கிடுவதும் இல்லை. நான் ஒரு சாட்சி பூதமாகவே நின்று கொண்டு இருக்கிறேன். அருகிலேயே பார்த்து கொண்டிருப்பேன். அது தான் தெய்வ தர்மம்.

நான் உங்கள் அருகில் சாட்சி பூதமாக நிற்கும் போது நீங்கள் தீமையோ, தவறோ, செய்ய முடியாது.
அதனை நீங்கள் மறந்துவிடும் போது தான் எனக்கு தெரியாமல் செய்துவிடலாம் என நினைக்கிறீர்கள். இதை கேட்ட உத்தவர் கிருஷ்ணனின் பெருமையினை கண்டு வியப்படைகிறார்.

பகவானை பிரார்த்திப்பது , பூஜை செய்வது எல்லாம் அவனை உதவிக்கு அழைக்கும் வழி தான்.
அவன் அன்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கையும் வரும் என்று உத்தவருக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்தான்.

இதன் மூலம் நாம் கற்பது, தெய்வம் நம்மை, காக்கவும், கைதூக்கி விடவும் காத்துக் கொண்டு இருக்கிறார்.நாம் அவனை பக்தியுடன் மனமுருகி அழைத்தால் நிச்சயம் வந்து காப்பான் என்பதே இதன் சாரம்.

கிருஷ்ணா! கிருஷ்ண! கிருஷ்ணா!!

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..

……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: