கல்வியில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கும், யோக நிலையில் நின்று தவத்தை மேற்கொள்ளும் முனிவர்களும், சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவளின் அருளை பெற்றவர்கள் எண்ணிக்கை அளவிடற்கரியது என்பதைப் புராணங்கள் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது.
பிரம்மா, சரஸ்வதியைத் துதித்த பின்னரே பதி ஞானத்தின்’ உட்பொருளை சனத்குமாரருக்கு உபதேசிக்க முடிந்தது.
பிருஹஸ்பதியும் சரஸ்வதியைத் துதித்து தான் சப்த சாஸ்திரம்’ எனும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார்.
தேவியின் கடாட்சத்தை பெற்ற வியாசர் மகா பிரம்ம சூத்திரம்’, பதினெண் புராணங்கள்’ போன்றவற்றை இயற்றினார்.
கல்வி ஞானமே இல்லாதிருந்த காளிதாசருக்கு அம்பிகையின் பேரருளால் சிறந்த கவியாக போற்றப்பட்டார். இவருடைய நூல்களாகிய ரகுவம்சம், மேகதூதம், சாகுந்தலம், குமார சம்பவம், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம் போன்றவற்றில் தேவியின் சொரூபம், லீலைகள் காணலாம்.
போளு ராஜ மன்னர், பவ பூதியின் கவிதை உயர்ந்ததா, காளிதாசரின் கவிதை உயர்ந்ததா என்று அறிய இருவரையும் தனித்தனியே கவிதை எழுதச் சொல்லி தராசைக் கொண்டு வந்து சோதித்தான். பவபூதியின் ஏடு மேலும், காளிதாசரின் ஏடு கீழும் இருப்பதைக் கண்ணுற்ற சரஸ்வதி பவபூதி எந்தவித அவமானத்துக்கும் தலைகுனியக் கூடாதென்று சரஸ்வதி தன் காதிலுள்ள (குண்டலம்) வெண் தாமரையிலிருந்து தேன் துளியை பவபூதியின் ஏட்டில் விரலால் தெளிக்க இரு ஏடுகளும் சமமாக நின்றன. காளிதாசனும், பவபூதியும் தேனியின் தீர்ப்பு கண்டு போற்றித் துதித்தனர்.
ஸ்ரீ சரஸ்வதியான சாரதாம்பாளை ஆதிசங்கரர் சிருங்கேரியில் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். இந்த தேவியின் வடிவை நோக்கும் கல்வி தரும் கலைமகளான சாரதா, இன்னமும் தானே பயில்வது போன்றே கரங்களில் ஜப மாலை, சுவடி மற்றும் ஞான முத்திரை கொண்டு திகழ்கிறாள்.
ஸ்ருதிக்கு பொருள் உரைக்கக் கேட்ட சரஸ்வதி தேவிக்கு இராமானுஜர் தகுந்த பதிலை உரைத்ததால், சரஸ்வதி தேவி அவரத சிரசில் பாஷ்யக்காரல்’ எனும் திருநாமத்தை சாத்தி, ஹயக்ரீவரையும் அளித்திருக்கிறாள். இந்த விக்ரகம் தற்போது மைசூர் பரகாலி மடத்தில் உள்ளது.
ஆபுத்திரனுக்கு அமுத சுரபியை அளித்தது சிந்தா தேவியாவாள். இவள் கலைமகள் என்று கருதப்படுகிறாள்.
திருவாமாத்தூர் எனும் சிவ தலத்தின் மீது இரட்டை புலவர்கள் ஒரு கலம்பகம் பாடினர். ஒரு பாடலில் ஆற்றின் (பெண்ணாறு) மேற்குக் கரையில் கோயில் அமைந்திருப்பதாகத் தவறாக பாடிவிட, இந்த பிழையை அரங்கேற்றத்தின் போது பிறர் சுட்டிக் காடிடனர். எங்கள் நாவிலுள்ள கலைமகள் பொய் சொல்லாள்’ என்று புலவர்கள் கூறினர். அன்றிரவு பெய்த கடும் மழையில் ஆறு திசை மாறி ஓடத் துவங்கியதாம். புலவர்களைக் காக்கும் பொருட்டு ஆற்றோட்டத்தின் திசையையே மாற்றிய கலைவாணியின் கருணையை என்னென்பது.
திருமலைராய மன்னனின் ஆஸ்தான கவியான அதிமதுரம், கவிகாள மேகத்திற்கு சரியான இருக்கை கொடுக்காமலிருக்க அவர் சரஸ்வதியை தியானித்து அரசனின் சிம்மாசனத்துக்கு இணையான ஆசனம் பெற்றார்.
கவி சக்ரவர்த்தி கம்பர் சரஸ்வதியைப் போற்றும் விதமாக சரஸ்வதி அந்தாதியைப் பாடினார்.
ஒட்டக்கூத்தர், சரஸ்வதி தேவிக்கு நன்னிலம் மாவட்டத்தில் அமைந்த கூத்தனூரில் ஓர் ஆலயம் அமைத்து, அந்த தேவியின் சிறப்பை எடுத்துறைக்கும் வண்ணம் தக்கயாகப் பரணி’ எனும் நூலை இயற்றினார்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ