விஜயதசமி சிறப்பு
விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
ராமாயணத்தில் சீதையை தேடிச் சென்ற ராமர், சண்டி ஹோமம் செய்து அன்னை துர்காவின் அருளை பெற்று, ராவணாசுரனை இந்த விஜயதசமி நாளில் வதம் செய்தார். காமம், கோபம், தவறான வழி, பேராசை, கர்வம், பொறாமை, மன கட்டுபாட்டின்மை, ஞானமின்மை, மனஉறுதி இன்மை, அகங்காரம் இந்த பத்து தீய குணங்களே ராவணனின் அம்சமாக கருதப்படுகிறது. அருளின் வடிவமான ராமபிரான் விஜயதசமி நாளில் இந்த பத்து தீமைகளையும் அழித்தார்.
துர்கா தேவியை மனமுருக பிரார்த்தித்து எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை.
வித்தியாரம்பம் வைபவம் இன்றைய தினத்திலேயே வருகிறது. கல்வியைத் தொடங்கப் போகும் பிள்ளைகளுக்கு ‘ஏடு தொடக்குதல்’ இன்றைய தினத்தின் விசேட அம்சமாகும்.அக்காலத்தில் கிராமத்தில் உள்ள ஆசான்கள் அல்லது கற்றறிந்த பெரியவர்கள் ஏடு தொடக்குதலை மேற்கொள்வர். தட்டு ஒன்றில் அரிசியைப் பரப்பி முதன் முதலில் ‘அ’ எழுத்தை குழந்தையைக் கொண்டு எழுத வைப்பதே ஏடு தொடக்குதல் ஆகும்.
ஆசான் அல்லது பெரியவர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எழுத்தை எழுத வைப்பார். இதுவே இன்றைய விஜயதசமியின் சிறப்பான வித்தியாரம்பம்நிகழ்வாகும்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ