உலகெங்கும் முழு முதற் கடவுளாக விளங்கும் விநாயக பெருமான்
இந்துக்களின் புராணங்களில் விநாயகர் சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார்.
இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .
கணேச புராணம் – கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் இவரது பிறப்பினை நான்கு வெவ்வேறு அவதாரங்களாக கூறுகின்றது.
கிருத யுகம் :
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
திரேதா யுகம் :
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
துவாபர யுகம் :
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
கலி யுகம் :
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது
திருவுருவ விளக்கம் :
திருவடி :
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு :
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள் :
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்
கொம்புகள் :
மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.
தாழ்செவி :
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.
மேலும் பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
…….ஸ்ரீ