ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது :
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் :
பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை “மகனே!” என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள்.
கர்ணனுடைய மனைவியும் அவன் உடல் மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்? என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.
தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள் என்றார். தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது.
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது.
தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார் என்றார்.
பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:
“இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும்.
அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள்.
அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது.
குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள்.
படித்தவன் சூதும் வாதும் செய்வான்.
மழை பொழியாது,
நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது, பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்.
இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.
அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார் என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ,
நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதை விட, உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும் என்று சொன்னார்.
அப்போது புறப்பட்டவைதான் “ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்…!”
அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பது தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமை.
பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா..? என்று நாம் வியப்படையலாம்.
சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு, சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால் அழைக்கும் போது, பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்காதா என்ன?
இந்த ஆயிரம் பெயர்களைச் சொல்லி, பகவானை வேண்டினால், கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.
உடனே பார்வதி தேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்?
ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம்
ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா? என்று கேட்டாள். ஈஸ்வரன் புன்னகைத்தார். தேவி… நீ சொல்வது சரிதான்.
ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.
” ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தந்துல்யம்
ராம நாம வரானனே “
இப்படி மூன்று முறை சொன்னால் போதும்.
சஹஸ்ரநாமம் சொன்ன பலனை அடையலாம் என்று பார்வதி தேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.
சரி இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம்.
மரா… மரா… மரா… என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா?
அது தான் ஸ்ரீராம நாம மகிமை.
மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும்,
அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம்.
முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.
பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது.
வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும்.
நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ரநாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம்.
மேலும் தர்மங்களும் தழைக்கும்.
பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!
அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக !!
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
……… ஸ்ரீ