உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்,
உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம்,
மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடி
குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே.
அன்னை அபிராமியின் அருட்கடாட்சத்தில், உள்ளொளியில் கலந்து ஒன்றாகிவிட்ட அபிராமி பட்டர் சிந்தையில் இருந்து வெளிவந்த முதல் முத்து.
அன்னையின் அருளோடு ஆட்கொள்ளப்பட்ட நிலையில் அந்த உள்ளொளி அவர் முன் சிறிது சிறிதாக தெளிவாகி அன்னையினுடைய அற்புதமான அழகான உருவ அமைப்பு தென்படுகிறது.
அந்த அழகை நமக்கும் காண்பித்து நாமும் அதை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற எண்ணத்திலே அவளுடைய பேரழகை வர்ணிக்க வார்த்தைகளை தேடுகிறார்.
எந்த வார்த்தை கூறி வர்ணித்தால் சிறப்பாக இருக்கும் என்று தேடி, முடிவில் அது முடியாத காரியம், ஆதலால் உவமைகளாக சொல்லி நமக்கு புரிய வைக்க முயற்சி செய்யலாம் என்று அவளுடைய அழகை 6 உவமைகளாக நமக்குத் தருகிறார்.
முதலில் “உதிக்கின்ற செங்கதிர்” என்றார்
காலை கதிரவன் உதிக்கின்ற அந்த அழகு அந்த செந்நிறம் தான் அவளுடைய நிறம் என்று, சொல்ல வந்தவருக்கு, மனதில் சூரியனோ தினமும் தோன்றி மறைகிறது, ஆதலால் இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்று தோன்றியதால்,
அடுத்து “உச்சித் திலகம்” என்றார்.அதுவும் கரைந்து விடக் கூடியது என்பதாலோ என்னவோஅடுத்து, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்றார்.
மாணிக்கம் ஒரு கடினமான பொருள்.ஆனால் அன்னையோ மென்மையானவள் ஆயிற்றே என்று கருதி “மாதுளம் போது” என்றார்.
அப்பொழுதும் திருப்தி கிடைக்கவில்லை.
“மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி” என்றார், அதிலும் பூரண திருப்தி இல்லாததால் “மென்கடி குங்குமத் தோயம்” என்று கூறி உவமைகளின் கலவையாக அதில் எல்லாம் சேர்ந்த ஒன்றை கண் முன் நிறுத்த முயலுகிறார்.
இந்த ஆறு உவமைகளில் கூறப்பட்டுள்ள உவமைகளில் ஐயா கி வா ஜ அவர்களும், மரபின் மைந்தர்.
முத்தையா அவர்களும் குறிப்பிட்டுள்ள சில செய்திகளை ரசிப்போம்.
மாணிக்கம் என்று கூறுகையில் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சேர்த்திருக்கிறார்.
அப்படி என்றால் என்ன? தவம் செய்யும் முனிவர்கள், சித்தர்கள் பார்வையில் குண்டலினி சக்தி அவர்களுக்குள் ஒளி வெள்ளமாக நகர்ந்து சகஸ்ராதார கமலத்தில் அடையப்பெற்ற தவவலிமை உடையவர்களால் மதிக்கப்படுபவள், மாணிக்கம் போன்றவள் என்கிறார்
அதாவது குண்டலினி ஆற்றல் முதிர்ந்த நிலையில் உள்ள அவர்கள், அவளை மாணிக்க பேரொளியாய் காண்கிறார்கள் என்று சொல்லலாம்.
இன்னும் ஒரு உவமையில் மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி என்றார்.
அதாவது மலர் கமலையில் வீற்றிருக்கும் அலைமகள், கலைமகளால் துதிக்கப்படுகின்ற கொடிபோன்ற உருவத்தினள், மின்னல் போல் தோன்றி மறைகிறாள். அத்தகைய மேனியை உடைய அபிராமி என்று உருவகப்படுத்துகிறார் ஆனால் எல்லாவற்றையும் விட சிறப்பு இறுதியாக கூறிய உவமை காஷ்மீரத்தில் கிடைக்கின்ற குங்குமத்தின் குழம்பால் அவளை அபிஷேகம் பண்ணுகின்ற போது நாம் காணுகின்ற அந்த ஒரு திரு மேனி, தான் அவளுடைய
அழகான திருமேனி, அதுதான் அவளுடைய நிறம் என்று அதை வர்ணிக்கிறார் .ஆனால் எந்த ஒரு வார்த்தைகளுக்கும், எந்த ஒரு உவமைகளுக்கும் அப்பாற்பட்டது அவளுடைய அழகு என்பது அவருக்கும் தெரியும்,நாமும் உணர்கிறோம் . அப்படி என்றால் இந்தச் செய்யுளை நாம் எப்படி காண வேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றது என்றால் அபிராமி எந்தன் விழித்துணையே என்று கூறும் முன் அபிராமி என்றால் பேரழகுடையவள் என்பது தானே பொருள் .ஆக அப்படிப்பட்ட அந்த அழகை நம்முள் கொண்டு வந்து கொடுத்து,பின் அவள் தான் தனக்கு (நமக்கு)விழுத்துணை, அதாவது மேலான துணை என்கிறார்.
இந்த பிறவியில் மட்டுமல்ல எத்துணை பிறவிகள் நாம் எடுத்தாலும் அத்தனை பிறவியிலும் நம்முள் இருந்து நம்மை அரவணைத்து, நம்மை வழிகாட்டி பிறக்கின்ற ஆத்மாக்கள் அனைத்தையும் மீண்டும் பிறவாத நிலைக்கு எடுத்துச் செல்கின்ற துணையாக இருப்பதால் அவள் தான் விழுத்துணை என்ற எண்ணத்திலே அபிராமி பட்டர்
அபிராமி எந்தன் விழித்துணை
என்று சொல்லி இந்த செய்யுளை முடிக்கிறார்.