அபிராமி அந்தாதி #2

துணையும்,தொழும் தெய்வமும்,

 பெற்ற தாயும், சுருதிகளின்

பனணயும், கொழுந்தும் ,பதிகொண்ட

 வேரும், பனிமலர்ப்பூங்

கணையும் கருப்புச் சிலையும,

 மென் பாசாங் குசமும் கையில்

அணையும் திருபுரசுந்தரி

ஆவது அறிந்தனமே

முதல் செய்யுளில் விழுத்துணை என்ற முடித்தவர் இப்பொழுது அடுத்த செய்யுளில் துணையும் என்று ஆரம்பிக்கிறார் .ஆமாம், அவள் தானே விழுத்துணை அந்தத் துணை இன்றி நாம் எங்கே என்ன செய்ய முடியும்? எதையும் நினைப்பதற்கும், அதை நடத்தி வெற்றி காணவும், அவள் துணை வேண்டும் அல்லவா?

எந்த ஒரு காரியம் நாம் செய்யும்போதும் .அம்மா நீயே துணை என்கின்றோம். மற்ற எல்லா துணைகளும், வாழ்வில் நமக்கு உயிர் தந்த தாய், தந்தை, சுற்றம், சூழல், நண்பர்கள் சொல்லிக் கொண்டே போகலாம், எல்லாம் எதுவரை துணை? சில சமயங்களில் நாம் மிகப் பெரிய சோதனைகளை சந்தித்திருக்கிறோம்.

குறிப்பாக 2015 சென்னை வெள்ளம், வீட்டைச் சுற்றி இரண்டடி நீர் நின்று கொண்டிருந்து. ஐந்து நாட்களுக்கு மின்சாரமோ தொலைபேசியில் இயங்க முடியாத சூழல். எப்படி உயிர் வாழ்ந்தார்கள். எப்படி சமாளித்தார்கள். தாயே நீயே துணை என்ற ஒரு நம்பிக்கை.

இம்மைக்கு மட்டுமின்றி, மறுமையறுக்கவும், அவளே துணை. அப்படி மறுபடியும் பிறந்தால் அதிலும் அவளே துணை.

 துணை என்று சொன்னவர் அடுத்து தொழும் தெய்வம் நீ என்று சொல்கிறார். வாழ்க்கையில் நாம் இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போது உதவுகின்ற அன்பர்களை, நண்பர்களை, தெய்வமாக வந்து உதவினீர்கள். மிகப்பெரிய துணையாக இருந்தீர்கள் என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்திலேயே அவரது குறைகளை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகிறோம். இது மனித இயல்பு.

நம்மை காக்க, வழிகாட்ட, உதவி புரிய, நாம் வணங்கும் அன்னையே, அந்த மனித உருவில் வந்து உதவுகிறாள் .நாம் தொழும் தெய்வம் நம்மை காக்கின்றது என்பதே உண்மை. அண்ட சராசரங்களுக்கே தாயான அவளே நமக்குத் தாய், அகிலாண்டேஸ்வரி.

இந்த பிறவியில் மட்டுமல்லாது எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் நினைக்காமலே, எதிர்பார்க்காமலே, எந்த பலனும் எதிர்பார்க்காமல் நம்மோடு அணுகி, அரவணைத்து அன்போடு நம்மை காக்கும் அவள் அல்லவா தாய் வேறு யார் தாயாக முடியும்? நமக்கு மட்டுமா தாய்?

அப்பொழுது அவருக்கு வேதங்களுக்கே அவள் தானே தாய் என்பது நினைவுக்கு வருகிறது. வேதமாதா என்று அழைக்கப்படுகிறாள் அல்லவா ? அந்த வேத விருட்சமாக இருக்கின்ற அவளே அதை தாங்கும் சாகைகளாகவும், அதன் உச்சியில் வேதங்களின் சாரமாக, கொழுந்தான உபநிஷதமாக இருக்கின்றாள்.

இப்படிப்பட்ட இந்த வேத விருட்சத்தை, தாங்குகின்ற வேராக, வேதத்திற்கு பிரணவ மந்திரமாக விளங்குகிறாள். பிரணவத்தை உணர்ந்து வேதத்தை ஓதி உபநிஷதம் தரும் ஞானத்தின் உச்சம் தொட்டவர்கள், மன்மதனின் மலர் கணையும் கருப்பஞ்சிலையும் ஆகிய ஆயுதங்களுக்கும், எமதர்மனின் ஆயுதங்களான பாச அங்குசத்திற்கும், ஆட் பட மாட்டார்கள். அவளது மென் மலர் பாதங்களை தஞ்சமடைந்து நின்றும் இருந்தும் கிடந்தும்,நடந்தும், அவளை சிந்திப்போர்க்கு,பிறவிக்கு காரணமான மன்மதனும், மரணத்திற்கு காரணமான எமனும் தங்கள் ஆயுதங்களை அன்னையின் கரங்களிலேயே கொடுத்துவிட்டதால், மறுபிறவி இல்லை என்ற செய்யுளிலேயே அறுதியிட்டு கூறுகிறார்.

இதைத் தொடர்ந்து இன்னும் வரக்கூடிய செய்யுள்களிலே அவர் சொல்லக்கூடிய கருத்துக்களை ஆழ்ந்து அனுபவித்து மறுபிறவியை தவிர்ப்போமா.

இறுதியாக இந்த செய்யுளில    

திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே 

என்று முடிக்கிறார். அதற்கான காரணம் ஒரு ஆழ்ந்த தத்துவமாக அடியேனுக்கு தோன்றியதால் அடியேன் அதை விளக்கமாக எழுதி இதனுடைய பகுதியாக  பதிவிட்டு இருக்கிறேன். நேரம் ஒதுக்கி அதை படிக்கவும் அதை பற்றிய கருத்துக்கள் நீங்களும் அனுப்பலாம்.

 எல்லோருக்கும் எல்லா நலமும் கிட்ட அவளை பிரார்த்தனை செய்து நம் பயணத்தை தொடங்குவோம்.

 

 

 

 

 

 

 

1 thought on “அபிராமி அந்தாதி #2”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: