சனாதன தர்மம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது
” சனாதன தர்மம்”

சனாதன தர்மம் என்பதின் அர்த்தம் என்ன ? சனாதன” என்றால் அழியாத என்று பொருள். தர்மம் என்பதற்கு எது அனைத்துக்கும் ஆதாரமோ அது என்று பொருள் கொள்ளலாம். ஆக சனாதன தர்மம் என்றால் எது என்றுமே நிலைத்திருந்து அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளதோ அது என சொல்லலாம். சுருங்கச் சொன்னால் தர்மம் என்பது எல்லாவற்றையும் தழுவிக்கொள்வது, அதர்மம் என்பது அதற்கு எதிரானது. நீங்கள் எந்த பெயரிலும் அதை அழைத்துக் கொள்ளலாம்,
தருமம் அல்லது அறம் என்பது இந்து , புத்தம், சமணம் போன்ற சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி ஆகும். இது கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள் தரும் சொல்லாகவும் உள்ளது. இந்து சமயத்தை ’சனாதன தருமம்’ என்று அழைப்பர். இப்போது வாழ்வின் 4 வகையான ஆஸ்ரம தர்மங்களை பார்ப்போம்..

உபநயனம் செய்யும் காலம் 7 வயது
உப என்றால் அருகில். நயன என்றால் அழத்து செல்வது என்று பொருள். அறிவு தெளிவு பெற குருவிடம் அழைத்து செல்லுதல்.

1. பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம கடமைகள்:

பிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருகுலத்தில் குருவைஇறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வத்தன்மை வாய்ந்தவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுல கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு கிரகஸ்த ஆசிரமத்திற்கு (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.

2. இல்லற தர்ம கடமைகள்:

இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.

1. தேவ யக்ஞம்:- வேத மந்திரங்களினால் வேள்விகள் வளர்த்து தேவர்களுக்கு ஹவிஸ் அளித்து மகிழ்விப்பது.

2. ரிஷி யக்ஞம்:- உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருமுறைகள், திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும்.

3. பித்ரு யக்ஞம்:- . நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.

4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.

5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.

இல்லற தர்மத்தில் இருந்தாலும், பகவானிடம் பக்தி செலுத்த வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் – எனது ” (அகங்காரம் – மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வானப்பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

3. வனப் பிரஸ்தர்களின் (காடுறை வாழ்வு) தர்மம் :

வனப் பிரஸ்தனின் முதன்மையான தர்மம் தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். கோடை காலத்தில் நாற்புறமும் நெருப்பு மூட்டிக் கொண்டு, கண்களால் சூரியனை நோக்கிக் கொண்டும், மழைக்காலத்தில் வெட்டவெளியில் நின்றும், குளிர் காலத்தில் கழுத்துவரை நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். மிருகங்களை கொன்று உண்ணக் கூடாது. காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்தக் காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்ய விரதம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வனப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை வந்தடைவான்.

4. சந்நியாச தர்ம(துறவறம்) கடமைகள் :

கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவணம்) அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம்.

இவ்வாறு நம் சனாதன தர்மத்தில் வாழ்க்கைக்கு உரிய நான்கு தர்மங்களையும் வகுக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றையுமே தன்னுள் கொண்டுள்ள ஹிந்து சனாதன தர்மத்தை போற்றுவோமாக.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……..
………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: