ஸ்ரீ ஆஞ்சநேயர் மகிமை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :

“ஸ்ரீ ஆஞ்சநேயர்”

கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன.

நாசிக் அருகே இருக்கும் ஆஞ்சநேரி எனும் இடம்தான் அனுமன் பிறந்த இடமாகும். இங்குதான் அனுமன் தனது பால்ய காலத்தை கழித்ததாக இன்றளவும் இங்குள்ள மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்

அனுமனுக்கு ஏன் குரங்கு முகம்

உலக நன்மைக்காக அனைவராலும் கேலி செய்யப்படும் குரங்கின் முக வடிவை விரும்பி ஏற்றுக் கொண்டவர் அனுமன். தன்னிலும் தாழ்ந்தவர்களை ஆதரித்து, பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை இந்த வடிவம் வலியுறுத்துகிறது. அவரிடம் தன்னைப் பற்றிய நினைப்பதென்பது சிறிது கூட இல்லை. உலக ஜீவன்கள் எல்லாரிலும் உயர்ந்தவர், தெய்வமகன், புத்திமான். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர், புண்பட்ட உள்ளங்களுக்கு மருந்து தடவும் மாருதி. நல்லவர்களைக் காப்பாற்றும் சமய சஞ்சீவி.

சஞ்சீவி மலை
இலங்கையில் ராவணனுடன் போர் செய்த போது லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும் படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத்தெரியாததால் ஒரு மலையையே பெயர்த்துக் கொண்டு வானவெளியில் பறந்து வந்தார் அனுமன்.

துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்!

விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை “ஆத்யந்த பிரபு’ என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். “ஆதி’ என்றால் “முதலாவது’. முதல் கடவுள் விநாயகர். “அந்தம்’ என்றால் “முடிவு’. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு. இரண்டு கரங்களையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் நிலையில் உள்ளவர் “பக்த அனுமான்’. கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால், “அபயஹஸ்த அனுமான்’. ஓரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் “வீர அனுமான்’. ராமனை தன்தோள் மேல் சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் “பஞ்சமுக ஆஞ்சநேயர்’. பத்துகைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் “தசபுஜ ஆஞ்சநேயர்’

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

அனுமானை நினைத்த மாத்திரத்தில் அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம், உற்சாகம், சொல்வன்மை எல்லாம் கிடைக்கும். அவனை வழிபட்டால் இவை எல்லாம் நமது உடைமை ஆகிவிடும்.

அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-

ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே

பரம ராம பக்தனான அனுமன் எங்கெல்லாம் ஸ்ரீ ராம ராம என்ற நாமம் ஒலிக்கிறதோ அங்கு அனுமார் பிரத்யக்ஷமாக இருப்பார் என்பது நிச்சயம்.

நல்ல மன திடமும், வலிமையும் தைரியமமும், பெற ராம பக்தனான ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு அனைத்து நலன்களும் பெறுவோமாக………

லோகா சமஸ்தா சுகினோ
பவந்து ……..
………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: