ஸ்ரவண பக்தி‌

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது ஸ்ரவண பக்தியின் சிறப்பு.

பரமாத்மாவில் தோன்றிய ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனது கர்மாக்களை முடித்துக்கொண்டு இறுதியில் பரமாத்மாவையே அடைகின்றன.
பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவனும் தனது சிறப்பான வாழ்வால் பிறப்பிலா பேரின்ப நிலையினை அடைய வேண்டும்.
அதுவே முக்தி. முக்தியை அடைய நமக்கு பக்தியே வழி காட்டுகிறது.
பக்தியில் ஒன்பது விதமான வழிகள் இருக்கிறதென நமது முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத சேவனம்.
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்ய ஆத்மநிவேதனம்

என ஒன்பது வித பக்தியை பாகவதம் குறிப்பிடுகிறது.

ஸ்ரவணம் என்றால் ஆண்டவனுடைய புகழை காதுகளால் கேட்டு இன்புறுவது.

கீர்த்தனம் என்றால் பகவானுடைய புகழை எப்போதும் பாடிக்கொண்டிருத்தல்.

ஸ்மரணம் என்றால் ஆண்டவன் நினைவாகவே இருத்தல்.

பாதஸேவனம் என்றால் ஆண்டவனுடைய திருவடிகளை சேவித்தல்.

அர்ச்சனம் என்றால் பூஜித்து வழிபடுதல்.

வந்தனம் என்றால் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்தல்.

தாஸ்யம் என்றால் இறைவனின் கட்டளைப்படி நடத்தல்.

ஸக்யம் என்றால் கடவுளையே நண்பராக பாவித்து அன்பு கொள்ளுதல்.

ஆத்மநிவேதனம் என்றால் ஆண்டவரிடம் முழுமையாக ஒப்படைத்தல்.


இப்படி ஒன்பது விதமான பக்தி நிலைகள் இருந்தாலும் இதில் ஸ்ரவணம்

எனும் கடவுளின் புகழினை கேட்கும் நிலையே பெரிதும் போற்றப்படுகிறது.

எளிதான வழியும் இதுதான்.  எப்போதெல்லாம் ஆண்டவனின் திருநாமங்களை,

பாடல்களை, கதைகளை கேட்க முடியுமோ அப்போதெல்லாம் கேட்டு விடவேண்டும். 

இதுவே நமக்கான முக்தியை அளிக்கக்கூடியது.

கிருத யுகத்தில் தவத்தின் மூலமே முக்தியை அடைய முடிந்தது.

த்ரேதா யுகத்தில் தானமே முக்தியை அளித்தது. துவாபர யுகத்தில் வேள்விகளும்,

பூஜைகளும் முக்தியை அளித்தது.

ஆனால் இந்த கலியுகத்தில் ஆண்டவனின் திருநாமங்களைக் கேட்டால் கூட போதும் நமக்கான முக்தியை அளித்து விடும்.
ஸ்ரீராமரோடு வைகுந்தம் செல்ல விருப்பமின்றி ஹனுமான் 

ஸ்ரவண பக்திக்காக சிரஞ்சீவியாக பூலோகத்திலே தங்கி விட்டார்.
எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ராமநாமம் சொல்பவரை ஆசிர்வதிக்க வந்து விடுகிறார். எனவே எளிதான ஸ்ரவண பக்தியை மேற்கொண்டு எல்லோருமே முக்தியை அடையலாம் என ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். அதை நாமும் பின்பற்றலாமே.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

 

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: