அபிராமி அந்தாதி #3

அறிந்தேன் எவரும் அறியா

 மறையை அறிந்து கொண்டு

செறிந்தேன் உனது திருவடிக்கே

திருவே வெருவிப்

பிறிந்தேன் நின் அன்பர் பெருமை

 எண்ணாத கரும நெஞ்சால்

மறிந்தே விழு நரகுக்கு

 உறவாய மனிதரையே!

திருமகளாகிய லட்சுமி தேவியே, யாரும் அறிந்து கொள்ள இயலாத ரகசியத்தை அறிந்து கொண்டேன். அவ்வாறு அறிந்து கொண்ட நான், அந்த ரகசியமான திருவடி ஒன்றே புகலாக சரணடைந்தேன்.அதன் காரணமாக எனக்கு உன் அருள் கடாக்ஷம் கிடைத்தது நான் பெற்ற பேறு. உன்னுடைய அடியார்களின் பெருமையை உணர்ந்து கொள்ள முடியாத தீவினைகளிலே உழன்று,செய்த தீவினைகளின் காரணமாக நரகத்தில் தவிக்கின்ற மனிதர்களிடம் அஞ்சி விலகினேன்.

இந்தச் செய்யுளின் கருத்தாக நாம் இதை பார்க்கிறோம்.

இதில் வருகின்ற சில வார்த்தைகள் மறை என்றால் ரகசியம்

 வெருவி என்றால் அஞ்சி,

மற்ற வார்த்தைகளை வெகு சுலபமாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நமக்குத் துணை மகா திரிபுரசுந்தரி தான். அவளே நாம் தொழும் தெய்வம் நம்முடைய தாய், வேதங்களாக இருப்பவள் நம்மை நன் நிலைக்கு உயர செய்கின்ற சக்தி அவளே, அவளது பாதாரவிந்தங்களே சரணம் என்ற அந்த ரகசியத்தை உணர்ந்த பின், அவளுடைய திருவடிகளே சரணம்,அந்த திருவடிகள் தான் நமக்கு நல்வழி காட்டும் என்று அபிராமி பட்டர் நமக்கு சென்ற செயய்யுளின் கடைசியிலும், இந்தச் செய்யுளின் முதலிலும் தான் தெரிந்து கொண்ட ரகசியம் என்று இங்கே கூறுகிறார்.

வாழ்க்கையிலே நாம் அடைய வேண்டிய மிகப்பெரிய சொத்து அம்பாளின் திருவடி என்ற சொத்து .அதைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் நல்லவர்களினுடைய துணையை நாட வேண்டும். அவர்களுடைய நட்பை சேர்க்க வேண்டும். தீவினைகள் செய்வதிலிருந்து விலக வேண்டும் .தீவினைகள் செய்பவர்களிடமிருந்து விலக வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் நரகத்தில்உழன்று தவிக்க இருக்கின்றார்கள். அந்த நரகத்திற்கு செல்லாமல் நாம் மறுபிறவியிலிருந்து விடை பெற, விடுபட அம்பாளின் திருவடிகளே நமக்கு வழிகாட்டும் என்பதை தான் இந்தச் செய்யுளில் மிகத் தெளிவாக கூறுகிறார்.

சேர வேண்டிய இடம் எது என்றால் அது அன்னையின் திருவடி. விலக வேண்டியது எதுவென்றால் தீயவர்களின் நட்பு. தீயவர்களின் கூட்டு. மனம், வாக்கு, காயம் என்ற ூன்றாலும் நல்ல செயல்களை செய்க .செய்கின்ற செயல்கள் எல்லாம் அந்த அன்னையின் உடைய அருளே என்ற ஒரே எண்ணத்தோடு செயல்பட வேண்டும் . திரிபுரசுந்தரி, பராசக்தியின் உடைய திருவடிகளில் தஞ்சமடைந்து அவள் பாதமே கெதி என்று சரணடைவோம்.அதனால் நிச்சயமாக மறுபிறவியிலிருந்து விடுபடலாம் என்பதை இந்த செய்யுளின் மூலம் நாம் உணர வேண்டும்.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: