அபிராமி அந்தாதி #7

 

 

*ததியுறு மத்தில் சுழலும் என் 

ஆவி தளர்விலதோர் 

கதியுறு வண்ணம் கருது

 கண்டாய்; கமலாலயனும்

 மதியுறுவேணி மகிழ்நனும்

மாலும் வணங்கி என்றும் 

துதியுறு சேவடியாய்!  

சிந்துரானன சுந்தரியே.*

 

அபிராமி பட்டர் இதுவரை நாம் அறிந்து கொண்ட செய்யுள்களில். அவளுடைய பாதங்களை நாம் பற்றிக்கொள்ள வேண்டும், அவளுடைய அருட்கடாக்ஷம் கிடைக்கும் என்றார்.

 

அது மட்டும் போதாது அம்மையும், அப்பனும் நம் உள்ளத்தில் நம் சிந்தனையுள் இருந்திட வேண்டும் என்றார். அவளுடைய திருவடிகள் தன்னுடைய சென்னியில் என்று பூரித்துப் போனார். அன்னை அபிராமியை பூஜிக்கின்ற முறைகளை நினைத்து பார்த்து தான் செய்கின்ற பூஜை முறைகளை அன்னையிடம் கூறி தன்னுடைய மனம் வாக்கு காயம் முழுவதும் அன்னைக்காகத் என்பதை பற்றி அவளிடம் பகிர்ந்து கொண்டார்.

 

இந்தச் செய்யுளிலே அன்னையிடம் மாறி மாறி வருகின்ற இந்த பிறப்பு, இறப்பு இரண்டிற்கும் நடுவே தன் உயிர் படுகின்ற அந்த வேதனைகள் பற்றி அவளிடம் கூறி அதிலிருந்து விடுதலை பெற அருட்கண் பார்வையை, கடாட்சத்தை வேண்டி நிற்கிறார்.

 

கமலாலயனும் மதியுறுவேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

அபிராமி பட்டர் அன்னை அபிராமியை எப்பொழுதும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ரூபமாக, லலிதா பரமேஸ்வரி யாக, வழிபட்டு கொண்டே இருக்கிறார். அதனுடைய விளைவாக அன்னையிடம் தன்னுடைய பிறப்பு, இறப்பின் வேதனை பற்றி முறையிட நினைத்த அவர் அவளை ராஜராஜேஸ்வரியின் உருவமாகவே நினைத்து அழைக்கிறார். மும்மூர்த்திகளும் எக்காலமும் வணங்குகின்ற, எந்நேரமும் துதிக்கின்ற செம்மையான மலர்ப்பதங்களை, மென் பாதங்களை உடையவளே, செவ்வண்ணத் திலகமணிந்த பேரழகியே, “சுந்தரியேஎன்கிறார்.

_யார் அந்த மும்மூர்த்திகள்?_

தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட பிரம்மனும், சந்திரனை ஜடாமுடியில் தரித்த சிவனும், கடலில் பள்ளிகொண்ட திருமாலும் ஆவார்கள்.

 

அபிராமி பட்டர்கூறுகிறார்:

 

ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய்.”

 

நான் வைக்கின்ற விண்ணப்பம் என்னவென்றால் இந்த பிறப்பிற்கும், இறப்பிற்கும் நடுவே கடையப்படுகின்ற என்னுடைய உயிர், அதாவது ஆத்மா படுகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வேன், தாயே?

 

_இந்த வேதனைகளில் இருந்து, உன்னுடைய பாதார விந்தங்களே கதி என்று இருக்கின்ற எனக்கு, விடுதலை தந்து, எப்பொழுதும் என் சிந்தையில் இருந்து, உயிரோடு கலந்து என்னை உன்னோடு சேர்த்துக் கொள்கின்ற, பாக்கியத்தை எனக்கு அருள வேண்டும். மிகவும் தளர்ந்து போன இந்த ஆத்மாவிற்கு புத்துணர்ச்சி தர வேண்டும். மறுபிறவி இல்லாத நிலையை எனக்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்_

ஓம் சக்தி ஜெய சக்தி ஸ்ரீ சக்தி சிவ சக்தி

 

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: