அபிராமி அந்தாதி #6

 

சென்னியது உன் பொன் 

திருவடித் தாமரைசிந்தை உள்ளே

 மன்னியது உன் திரு மந்திரம்;  

சிந்துர வண்ணப் பெண்ணே!  

முன்னிய நின் அடியாருடன் 

கூடி முறை முறையே 

பன்னியது என்றும் உந்தன்

 பரமாகம பத்ததியே

அபிராமி பட்டர் அம்பாளை செந்நிற மேனியளே, சிந்துர வண்ணப் பெண்ணே என்று ஆரம்பித்து இந்த உலக வாழ்க்கையிலே மனிதர்கள் ஆகிய நாம் ஒவ்வொருவரும் அம்பாளை எப்படி வணங்க வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பதற்காக, தான் வணங்கி வந்த திரிகரண வழிபாட்டு முறை பற்றி மிக சுருக்கமாக, அதேசமயம் மிக அழகாக, ஒரு சில வரிகளிலேயே இந்தச் செய்யுளில் விவரித்திருக்கிறார்.

சிந்துரத்தை பற்றி, அந்த செம்மையைப் பற்றி, நாம் முதல் செய்யுளிலே விரிவாக பார்த்தோம். அபிராமி பட்டர் ஸ்ரீவித்யா உபாசகர் ஆக இருப்பதால், அவருடைய மனதிலே சதா சர்வ காலமும் அன்னை அபிராமியை சாட்சாத் திரிபுர சுந்தரியாக அவர் உபாசித்து வருவதால், அவளை அவர் செம்மை நிறத்திலேயே காண்கின்றார் என்று தோன்றுகிறது.

திரிகரண வழிபாட்டு முறையை பற்றி ஐயா கி வா . அவர்கள் நமக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதனுடைய அடிப்படை வாக்கு,மனம், காயம் மூனறையும் அன்னையிடம் நாம் ஒப்படைக்க வேண்டும்.

சதா சர்வ காலமும், நம் சிந்தை உள்ளே அம்பாளின் திருவடிகளை நினைவில் கொண்டிருக்கும் போது, நம் வாக்கில் இருந்து வரக்கூடிய சொற்கள் அவளுடைய நாமாவளியாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட மனதும் வாக்கும் ஒன்றிய அந்த உடல் நிச்சயமாக சத் கைங்கரியங்களில் தான் ஈடுபடும் என்பதே இந்த சித்தாந்தத்தின் உடைய அடிப்படை. தன்னுடைய சென்னியிலே அன்னையினுடைய திருவடிகளை கொண்ட அபிராமி பட்டர் சதா சர்வ காலமும் அவளுடைய திருமந்திரங்களை, வேத மந்திரங்களை, பஞ்சதசாக்ஷரி, நவாக்ஷரி, ஷோடதசாக்ஷரி போன்ற ஜெபங்களை தகுதியான குருவின் மூலம் ஜெபம் செய்து கொண்டு வந்திருக்கிறார். மந்திரத்தை உச்சரிக்கும் போது அந்த உருவத்தை உள்வாங்கி மானசீகமாக அந்த மந்திரத்தை ஜெபிக்கின்ற முறையை குருவின் மூலமாக கற்றுக்கொண்டு அதை நம்முள் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவர் இங்கு நமக்குசிந்தை உள்ளே மன்னியது உன் திரு மந்திரம்என்கிறார்.

ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் நல்ல எண்ணங்களையும், நல்ல பக்தி உடைய அன்பர்களுடனே நம்முடைய உறவு இருக்க வேண்டும். அவர்களுடைய சத்சங்கத்தில் தான் நம்முடைய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லி இருக்கிறார்

அதையேதான் இங்கே அபிராமி பட்டரும் வேதங்களிலும் வேதத்திலிருந்து வந்த ஆகம நூல்களிலும் மிகச் சிறந்த விற்பன்னர்களினுடைய சத்சங்கத்திலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர்கள் வழிகாட்டிய பாராயணத்தின் முறைகளை, தானும் கடைப்பிடித்து அவர்கள் வகுத்துக் கொடுத்த நெறிமுறைப்படி பல காலங்களாக அம்பாளை வழிபட்டு வந்ததாக இங்கே தெரிவிக்கிறார்.

சுருக்கமாக, சிந்தை முழுதும் அவளை நினைத்து, அவளுடைய மந்திரங்களை ஜெபித்து, நல்ல சிந்தனை, நல்ல தெளிவு, நல்ல வழிகாட்டல் தெரிந்த பெரியவர்களின் வழிகாட்டலை கடைபிடித்து, வேதாகம நூல்கள் காட்டுகின்ற முறைகளை ஒழுங்காக கடைபிடித்து, அம்பாளின் அருள் கடாட்சத்தை நாமெல்லாம் பெற வேண்டும் என்று அறிவுரையாக சொல்லாமல், தான் அதையெல்லாம் செய்ததாக இங்கே அருமையான செய்யுளின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார்

ஓம் சக்தி ஜெய சக்தி ஸ்ரீ சக்தி சிவ சக்தி

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: