அன்னதானம் மகிமை

இன்று நாம் தெரிந்துகொள்ள போவது :
” அன்னதானம்”

வேதத்தில் அன்னதானம் :

அன்னநநிந்த்யாத் – தத்வ்ரதம்
அன்னம் பகுகுர்வீத! தத்விரதம்!
நகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா! தத்வ்ரதம்!
தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம் ப்ராப்ணுயாத்!
ஆராத்யஸ்மா அன்ன மித்யா சக்ஷதே!

(தைத்ரீயோப நிஷத் –
ப்ருகுவல்லி)

பொருள் : அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. – அது விரதம்.
அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது. ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும். வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான்
கிருஷ்ணபகவானும் கீதையில், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக்
கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு
எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.

தமிழில் ஒரு பாடல் உண்டு; பசி வந்திடப் பத்தும் பறந்து போம். அதாவது

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்— எல்லாம் பசி வந்தவனிடத்தில் இருக்காது.

இதையே மாற்றிப் போட்டால், பசி இல்லாவிடில் இந்த பத்து குணங்களும் இருக்கும். அதனால்தான் இந்துக்கள் அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

லட்சம் பேர் சாப்பிட்டால், அதில் ஒருவர் நல்லவர் இருந்தாலும், அதன் காரணமாக நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை விளையும் என்று காஞ்சி பரமாசார்யார் சொற்பொழிவில் கூறியுள்ளார்.

அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்த்ரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ‘த்ருப்தோஸ்மி : போதும்’ என்று சொல்கிறான். அந்த அளவுக்கு மேல் போய் விட்டால், ”ஐயையோ! இனிமேல் போடாதீர்கள்” என்று மன்றாடவே செய்கிறான்.

சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன, ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்த போது தேவர்கள் அவனிடம், “கர்ணா… நீ பூமியில் இருந்த போது பொன்னும், மணியுமே தானம் செய்தாய், அன்னதானம் செய்யவில்லை. என்றனர். அதனால் தான் நீ இங்கு பசியால் கஷ்டபடுகிறாய் என்றனர்.

ஏகப்பட்ட தர்மங்கள் செய்த கர்ணனே அன்னதானம் செய்யாமல் போனதால் சொர்க்கத்தில் கஷ்டபட்டதாக சாஸ்திரம் கூறுகிறது. நாம் செய்யாமல் இருக்கலாமா.

எனது அன்பான வேண்டுகோள் :

அன்னம் என்பது மகத்துவமானது .அதனை வீண் செய்வதாகாது. அன்னதானதில் சாப்பிடுபவர்கள் தங்களுக்கு தேவையான அளவு கேட்டு சாப்பிடுதல் வேண்டும். அளவுக்கு அதிகமாக கேட்டு வாங்கி அதனை இலையிலேயே வைத்து விட்டு விடுகிறார்கள் அது தவறானது. அவ்வாறு மீதப்படுத்தும் அன்னம் இன்னும் பலரது பசியை போக்குமே.!

நமது வீட்டு திருமணம் மற்றும் விசேஷங்களில் செய்யும் உணவில் எல்லோரும் சாப்பிட்டு மீதம் இருந்தால் அதை அனாதை இல்லங்களுக்கு, குழந்தை காப்பகதிற்கோ அளிக்க வேண்டாம்.
மீந்ததை அவர்களுக்கு கொடுப்பது நல்லதல்ல. ( அவர்களை பற்றி சற்று யோசித்து பாருங்கள்)

அவர்களுக்கு உணவுக்கு பணமாகவோ இல்லை அவர்களுக்கு செய்த உணவாகவோ அளித்து மகிழலாம்.

உலகத்தில் உயரிய தானமான அன்னதானத்தை உரிய முறையில் அளித்து வாழ்வில் புண்ணியத்தை சேர்போமாக…!

லோகா சம்ஸ்தா சுகினோ
பவந்து……..
…….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: