அபிராமி அந்தாதி #5

பொருந்திய முப்புரை செப்புரை

 செய்யும் புணர்முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல்

மனோன்மணி! வார் சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய

 அம்பிகை! அம்புயமேல்

 திருந்திய சுந்தரி அந்தரி

பாதம் என் சென்னியதே

திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி. மனிதனின் உடல், மனம், உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். அந்த முப்புரங்களிலும் உள்ளும், புறமும் அவளே பொருந்தி இருக்கின்ற காரணத்தினாலே பொருந்திய முப்புரை என்கிறார்.

அபிராமியின் உடைய அருள் கடாட்சத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கின்ற அபிராமி பட்டர் அவள் மேனி அழகினை அடுத்த வரிகளிலே எடுத்துரைக்கிறார்.

அம்பாளை மனோன்மணி என்று வர்ணிக்கிறார். லலிதாம்பிகையின் உடைய பல திருநாமங்களிலே மனோன்மணி என்பதும் ஒன்று. அதாவது மனதை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள். அவள் அருள் பெற்றவர்களுக்கு சலனமற்ற மனநிலையை தந்தருள்வதால் அவளை மனோன்மணி என்று கூறுகிறார்.

தேவர்கள் எல்லாம் சேர்ந்து அமுதம் கடைந்து எடுக்கிறார்கள் .சிவபெருமானை அப்பொழுது அவர்கள் எண்ணவில்லை. முதலில் சில அபூர்வமான பொருட்கள் வெளியே வந்தன.

அமுதம் தோன்றுவதற்கு முன்பாக ஆலகால விஷம் வெளிவந்தது .அதனைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள். செய்வதறியாது சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிட்டார்கள். எம்பெருமான் அனைவரையும் காக்கின்ற கடவுள். அந்த நஞ்சை எடுத்து தானே அருந்தி விட்டார். அப்பொழுது அன்னை பராசக்தி தன்னுடைய மென்மையான கரங்களால் அவர் கழுத்தில் கையை வைத்தார். அந்த நஞ்சு அந்த இடத்திலேயே நின்று விட்டது. அந்த கழுத்து நீலமாக மாறிவிட்டதால் அவர் நீலகண்டன் என்று பெயருடன் அழைக்கப்பெற்றார் .கருணையே வடிவான அவளுக்குத்தான் தெரியும், அண்ட சராசரங்களையும் பல் உயிர்களையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற சிவபெருமான். இந்த நஞ்சை உண்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று. ஆதலால் தன்னுடைய கையால் அவர் கழுத்தில் கைவைத்து நஞ்சை அமுதமாக ஆக்கிவிட்டாள். அன்னையின் கருணைக்கு ஈடு ஏது? அதைத்தான் இங்கேவார் சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகைஎன்று கூறுகிறார்.அன்னையோ சிவனின் வாமபாகத்தில் அல்லவா இருக்கிறாள். அண்ட சராசரத்திற்கும் பல கோடி உயிர்களுக்கும் ஜனனியான அவள் தாய் அல்லவா.

தன் உயிர்களை காக்க உடனே விரைந்து எம்பெருமானுடைய கழுத்தில் கை வைத்து அந்த நஞ்சை அமுதமாக்கினாள். அப்பனையும் காத்து அன்பான தன் உயிர்களையும் காத்து அருள் பாலிக்கும் அபிராமி அவள்.

அடுத்ததாகஅம்புய மேல் திருந்திய சுந்தரிஎன்கிறார்.

அதாவது மலர்ந்த தாமரை மலர் மேல் அழகாக அமர்ந்துள்ள சுந்தரி என்று எடுத்துக் கொண்டோம் என்றால் அது அலைமகளையோ அல்லது கலைமகளையோ குறிக்கக்கூடும். அதனால் இங்கே நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய அர்த்தம் என்னவென்றால் ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்ரஹாரத்தின் உச்சியில் வீற்றிருக்கும் பராசக்தி என்று பொருள் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அந்த சுந்தரி அவளே அந்தரி ஆக இருக்கிறாள். அதாவது நம்முடைய ஆத்மாவினுடைய உயிர் பொருளாக அந்தரங்க சக்தியாக அமைகிறாள்.

அப்படிப்பட்ட அந்த அற்புதமான சக்தியை தன் உள் உணர்ந்து அவளுடைய மென் மலர் தாமரை போன்ற திருவடிகளை தன்னுடைய சென்னியில் வைத்து தன்னை ஆட்கொண்டதாக உணர்கிறார். “பாதம் என் சென்னியதே” என்று கூறி இந்த செய்யுளை முடிக்கிறார்.

வரிசையாக பார்த்தோம் என்றால், முதலிலே அம்பாளினுடைய பாதார விந்தங்களை பற்றிக்கொள்ள வேண்டும் என்றார். அதன் தொடர்ச்சியாக அது மட்டும் போதாது சதா சர்வ காலமும் தன் சிந்தை உள்ளே அம்மையும் அப்பனும் அமர்ந்து இருக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். இப்பொழுது இந்தச் செய்யுளிலே அம்பாள் தன்னுடைய திருமலர் பாதங்களை தன்னுடைய தலையிலே வைத்து தன்னை ஆட்கொண்டு விட்டதாக உணர்கிறார்

ஓம் சக்தி, ஜெய சக்தி, சிவ சக்தி, ஸ்ரீ சக்தி.

 

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: